Published:Updated:

`இப்போது பேச நேரமில்லை!' - குடியுரிமைச் சட்டம் கேள்வியால் மெளனமாகச் சென்ற நடிகர் அமீர் கான்

தனுஷ்கோடி படப்பிடிப்பில் அமீர் கான்.
தனுஷ்கோடி படப்பிடிப்பில் அமீர் கான். ( விகடன் )

படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர் அமீர் கானை ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் நேற்று முன் தினம் சந்தித்தார்.

இந்தி திரையுலகில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் அமீர் கான். இவர் நடிக்கும் 'லால்சிங் சாட்டா' என்ற படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி பகுதிகளில் கடந்த சில நாள்களாக நடந்து வந்தது. இந்தப் படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர் அமீர் கானை ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் நேற்று முன் தினம் சந்தித்தார்.

குடியுரிமைப் பற்றி பேச மறுத்த நடிகர் அமீர் கான்
குடியுரிமைப் பற்றி பேச மறுத்த நடிகர் அமீர் கான்
விகடன்

அப்போது மது மற்றும் போதை பழக்கங்களை தவிர்க்கும் வகையில் இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கும்படி நடிகர் அமீர் கானிடம் கேட்டுக்கொண்டார். இதையடுத்து அமீர் கானும் ''போதைப் பழக்கங்களில் ஈடுபடாமல் உடல் ஆரோக்கியத்துடன் இளைஞர்கள் விளங்க வேண்டும்'' என வீடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்நிலையில், தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த நடிகர் அமீர் கானை செய்தியாளர்கள் சந்தித்தனர். அவர்களிடம் பேசிய அமீர் கான், ''தமிழ் சினிமா திறமைமிக்கவர்களை அதிகம் கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவை நான் மிகவும் ரசிப்பவன். அதனால் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு எனக்கு ஆசை அதிகம். ஆனாலும் வாய்ப்பு ஏதும் தற்போதுவரை முடிவாகவில்லை'' என்றார்.

வாகன ஓட்டுநர்களுடன் அமீர் கான்
வாகன ஓட்டுநர்களுடன் அமீர் கான்
விகடன்

இதைத் தொடர்ந்து குடியுரிமைச் சட்டம் தொடர்பாக நடிகர் அமீர் கானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், அதற்கு நேரடியாகப் பதிலளிக்க மறுத்தவர், ''குடியுரிமைச் சட்டம் குறித்து பேச தற்போது நேரமில்லை'' எனச் சொல்லிவிட்டு தங்கும் விடுதியில் இருந்து கிளம்பினார். மத்திய அரசின் செயல்களுக்கு எதிராக அவ்வப்போது குரல் எழுப்பி வரும் அமீர் கான் குடியுரிமைச் சட்டம் குறித்து மெளனமாகச் சென்றது அனைவரையும் வியப்படையச் செய்தது.

பின் செல்ல