தமிழ், இந்தி, தெலுங்கு எனப் பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீதேவி. இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்றும் கொண்டாடப்பட்டவர். தமிழில் `துணைவன்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து, தன் நடிப்பால் ரசிகர்கள் உள்ளங்களில் முத்திரைப் பதித்தவர்.
1996-ல் போனி கபூரைத் திருமணம் செய்துகொண்ட அவர், அதன் பிறகு எந்தப் படமும் நடிக்காமலிருந்தார். பதினைந்து வருடங்கள் பெரிய திரையில் நடிக்காமலிருந்த ஸ்ரீதேவி, 2012-ம் ஆண்டு 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' மூலம் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். இந்தப் படத்தில் அஜித்துடனும் இணைந்து நடித்திருந்தார். 1986-ம் ஆண்டு வெளியான 'நான் அடிமை இல்லை' என்ற தமிழ்த் திரைப்படத்திற்குப் பிறகு, நடிகர் விஜய்யுடன் 'புலி' திரைப்படத்தில் நடித்து தமிழிலும் டப்பிங் பேசினார்.
இப்படித் தலைமுறை கடந்தும் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களின் மனதில் இளமையாக ஜொலித்த ஸ்ரீதேவி கடந்த 2018ம் ஆண்டு காலமானார். அவர் காலமாகி தற்போது ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன.
இந்நிலையில் அவரது மகள் ஜான்வி கபூர், "உங்களை நான் எப்போதும் தேடிக்கொண்டிருக்கிறேன் அம்மா! உங்களைப் பெருமைப்படுத்தும் வகையில் செயல்கள் செய்துவருகிறேன் என்று நான் நம்புகிறேன். நான் எங்குச் சென்றாலும், என்ன செய்தாலும் எல்லாமும் உங்களிடம் தொடங்கி உங்களிடமே முடிவடையும்" என்று உருக்கமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அதேபோல், ஸ்ரீதேவியின் கணவரும், பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர், "ஐந்து வருடங்களுக்கு முன், நீ எங்களை விட்டுப் பிரிந்தாய். உனது அன்பும் நினைவுகளும் எங்களை எப்போதும் எங்களை முன்னெடுத்துச் செல்லும், என்றும் எங்களுடன் இருக்கும்..." என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.