
ரொமான்ஸின்போது ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் நாயகன் நாயகிக்குள் பிரேக் அப் ஆகிவிடுகிறது. நண்பர்களாக மட்டுமே இருப்போம் என்று விலகுகிறார்கள்.


Farzi - Web Series
தாத்தா நடத்தும் பத்திரிகையைக் காப்பாற்ற தன் ஓவியத் திறமையைப் பயன்படுத்தி, கள்ளநோட்டுகளை அச்சிடுகிறார் ‘ஆர்ட்டிஸ்ட்' ஷாகித் கபூர். ஸ்பெஷல் டாஸ்க் ஆபீசரான விஜய் சேதுபதி, தன் டீமுடன் இணைந்து கள்ளநோட்டுக் கும்பலைப் பிடிக்க முயற்சிகள் எடுக்கிறார். ஆர்ட்டிஸ்ட்டின் வழியில், ஆபீசர் வந்தால் என்னவாகும் என்பதே பிரைம் வீடியோவில் வெளியாகியிருக்கும் இந்த வெப்சீரிஸின் கதை. விஜய் சேதுபதி, விஜய் சேதுபதியாகவே திரையில் வர, ஷாகித் கபூர் துணிச்சலான இளைஞனாகக் கவர்கிறார். காமெடிக்கு புவன் அரோரா, காதலுக்கு ராஷி கண்ணா என்பதைத் தாண்டி அவர்களுக்குக் கதையிலும் ஆழமான பங்கிருப்பது சிறப்பு. எட்டு எபிசோடுகளாக நீளும் தொடர், முதலில் பழங்கால பிரின்டர் போல மெதுவாக இருந்தாலும் 3வது எபிசோடுக்குப் பிறகு நவீன பிரின்டராக வேகமெடுக்கிறது. கள்ளநோட்டு குறித்த டீட்டெய்லிங்கிற்காகவும், சிறப்பானதொரு படைப்பைக் கொடுத்ததற்காகவும் இயக்குநர்கள் ராஜ் - டி.கே கூட்டணிக்குப் பாராட்டுகள்!


Lost - Movie
தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டான துஷார் பாண்டேவும் டி.வி தொகுப்பாளினி பியாவும் காதலிக்கிறார்கள். அமைச்சரைப் பேட்டி எடுக்கச் செல்லும் பியாவுக்கு அவரின் அலுவலகத்திலேயே வேலை கிடைக்கிறது. திடீரென துஷார் காணாமல்போகிறார். மாவோயிஸ்ட்களுடன் அவருக்குத் தொடர்பு என்றெல்லாம் செய்தி பரவுகிறது. புலனாய்வுப் பத்திரிகையாளரான யாமி கௌதம், இதை ஆராய்ந்து கண்டறியும் உண்மைகளே இந்தப் படம். ‘பிங்க்’ இயக்குநர் அனிருத்தா ராய் சவுத்ரி இயக்கத்தில் ஜீ5-ல் வெளியாகியுள்ளது இந்த இந்தி க்ரைம் த்ரில்லர். ‘பிங்க்’ போலவே பெண் புலனாய்வுப் பத்திரிகையாளரை முன்னிலைப்படுத்தியது பாராட்டுக்குரியது. ஆரம்பித்தில் தொடங்கும் பரபரப்பு, ஒரு கட்டத்தில் பலவீனமான திரைக்கதையால் சற்றே வேகம் இழக்கிறது. ‘க்ளைமாக்ஸ் என்றால் ட்விஸ்ட் அவசியம்' என்ற எழுதப்படாத லாஜிக்கால் எஞ்சியிருக்கும் பரபரப்பு தீயிலும் தண்ணீரை ஊற்றி புஸ்ஸென்று ஆக்கிவிடுகின்றனர். எதிர்பார்ப்பு இல்லையென்றால் ஏமாற்றமில்லை!


Your Place or Mine - Movie
ரொமான்ஸின்போது ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் நாயகன் நாயகிக்குள் பிரேக் அப் ஆகிவிடுகிறது. நண்பர்களாக மட்டுமே இருப்போம் என்று விலகுகிறார்கள். வேறொருவருடன் திருமணமாகி விவாகரத்தும் ஆகி, சிங்கிள் மதராக வசிக்கும் நாயகி, ஒருகட்டத்தில் வெளியூர் செல்வதால் தன் மகனைப் பார்த்துக்கொள்ள ‘நண்பனை' அழைக்கிறார். நாயகியைத் தேடி வேறொரு காதலும் வருகிறது. அந்தப் புதுக் காதலை அவர் ஏற்றாரா, இல்லை பழைய காதலையே தேர்ந்தெடுத்தாரா என்ற கேள்விக்கு விடை சொல்கிறது, அலைன் பிராஷ் மெக்கென்னா இயக்கத்தில் நெட்ப்ளிக்ஸில் வெளியாகியுள்ள இந்தப் படம். நாயகியாக ரீஸ் விதர்ஸ்பூன், நாயகனாக ஆஸ்டன் கட்சர் படம் முழுக்கவே ஆக்கிரமித்திருந்தாலும், ‘‘அம்மா சொன்ன அளவுக்கு இல்ல... நீங்க கொஞ்சம் நல்லவர்தான்’’ என்று சொல்லி ஈர்க்கிறார் வெஸ்லி கிம்மர். மற்றபடி முன்னாள் காதலர்கள் மீண்டும் சந்தித்தால் என்னவெல்லாம் நடக்குமோ, க்ளைமாக்ஸ் வரையிலுமே அதுதான் நடக்கிறது.


Re/Member - Movie
‘Karada Sagashi’ என்ற இணைய நாவலை அடிப்படையாக வைத்து டீன் ஹாரர் ஜானரில் ஜப்பான் சார்பாக நெட்ப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் படைப்பு இது. பள்ளி மாணவர்கள் ஆறு பேர் டைம் லூப்பில் சிக்கிக்கொள்கிறார்கள். 30 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட ஒரு சிறுமியின் தலையைத் தேடிக் கண்டுபிடிப்பதுதான் அதிலிருந்து வெளியேற ஒரே வழி. இரவில் இவர்கள் செத்துச் செத்து விளையாட, பகலில் வழக்கம்போலப் பள்ளி நடக்க என ஏகப்பட்ட குழப்பங்களுக்குப் பின் முடிவு தெரிவதே மீதிக்கதை. சுவாரஸ்யமான ஒன்லைனை எவ்வளவு சுமாராக எடுக்க முடியுமோ அப்படி எடுத்திருக்கிறார்கள். மிரட்டலாய்த் தொடங்கி, போகப் போகக் குழந்தைகளுக்குப் பூச்சாண்டி காட்டப் பயன்படும் கார்ட்டூன் போல ஆகிவிடுவது சோகம். ‘ஹைஸ்கூல் டிராமா’க்களுக்கு வரவேற்பு இருக்கும் என்பதை உணர்ந்தவர்கள் அதைச் சற்று சிரத்தையுடன் அணுகியிருக்கலாம். ரத்தம் தெறிக்கும் கதை என்பதால் வயது வந்தவர்களுக்கு மட்டுமே!