Published:Updated:

விடாக்கண்டன் அமிதாப், கொடாக்கண்டன் ஆயுஷ்மான்... பாலிவுட்டின் OTT ரிலீஸ் #GulaboSitabo எப்படி?

Gulabo Sitabo

78 வயது வீட்டு உரிமையாளருக்கும் அங்கு வாடகை தர இழுத்தடிக்கும் ஓர் இளைஞனுக்கும் இடையேயான அக்கப்போர்கள்தான் `குலாபோ சித்தாபோ' என்கிற பாலிவுட் படத்தின் ஒன்லைன்.

விடாக்கண்டன் அமிதாப், கொடாக்கண்டன் ஆயுஷ்மான்... பாலிவுட்டின் OTT ரிலீஸ் #GulaboSitabo எப்படி?

78 வயது வீட்டு உரிமையாளருக்கும் அங்கு வாடகை தர இழுத்தடிக்கும் ஓர் இளைஞனுக்கும் இடையேயான அக்கப்போர்கள்தான் `குலாபோ சித்தாபோ' என்கிற பாலிவுட் படத்தின் ஒன்லைன்.

Published:Updated:
Gulabo Sitabo
இந்த க்வாரன்டீன் காலத்தில் வீட்டுக்குள் வந்திருக்கும் அடுத்த சூப்பர் ஸ்டார் அமிதாப். வரிசையாக ஹிட் படங்கள் கொடுத்துக்கொண்டிருக்கும் ஆயுஷ்மான் குரானா இன்னொரு ஹீரோ.

இருவருமே செம்ம என்பது வார்த்தை விரயம். அதே சமயம், அமிதாப்புக்கு இந்த செகண்டு சீஸன் அட்டகாசமாய் அமைந்திருக்கிறது. 77 வயது முதியவரான அமிதாப் தொடர்ந்து வெவ்வேறு முதிர்ச்சியான தோற்றங்களில் நடிக்கிறார். `பா' படம் ஒரு மைல்கல் என்றால், `102 நாட் அவுட்' படத்தில் 1000 வாட்ஸ் எனர்ஜியுடன், 100 வயது முதியவராக மாஸ் காட்டியிருப்பார்.

Gulabo Sitabo
Gulabo Sitabo

இதில் கருமி வேடம். ரூபாயை பைசாவாக மாற்றி நாணயங்களாகத் தன் சுருக்குப்பைக்குள் வைத்துக்கொண்டால் நிறைய இருக்கும்ல என யோசிக்கும் அளவுக்கு ஒரு பண வெறி. சொத்து (ஒரு பழைய மஹால்) முழுவதும் தன் பெயருக்கு வர வேண்டும் என்பதற்காக எதையும் செய்ய நினைக்கும் ஓர் அப்பாவி கருமி. கூன் முதுகு, அடர்ந்த தாடி, பொருந்தாத கண்ணாடி என அமிதாப்பின் சமீபத்திய டாப் 5 பர்ஃபாமன்ஸில் இது நிச்சயம் இடம்பெறும். அதிலும் வாடகை கொடுக்காதவர்களின் வீட்டிலிருந்து குண்டு பல்ப், சைக்கிள் பெல் எனத் தன் சக்திக்கு முடிந்ததைத் திருடிக்கொண்டு சென்று கடையில் விற்று வெறும் 20 ரூபாய் வாங்கிக்கொள்ளும் முதல் காட்சியிலேயே அமிதாப்பின் பாத்திரம் எத்தகையது என்பதை நமக்கு கடத்திவிடுகிறார்கள்.

குடும்பப் பொறுப்புகள் தலைமீது ஏறி, மனதளவில் கூன் விழுந்த நபராக ஆயுஷ்மான். தன் சோகங்களைத்தான் வைத்திருக்கும் மாவு மில்லில் கொட்டித் தீர்த்து சல்லடையாக்கும் மனிதர். அமிதாப் போன்ற சீனியரையே லெஃப்டில் டீல் செய்கையில் நமக்கு அவரின் கதாபாத்திரமான பாங்கி மட்டுமே தெரிகிறார். தனக்கு என்ன வரும் என்பதைத் தெரிந்து அதற்கு ஏற்றவாறு ஸ்க்ரிப்ட்டைத் தேர்ந்தெடுப்பவர்கள் ஒரு ஸ்டார் என்பதைத் தாண்டி நடிகனாகவும் மிளிர்வார்கள். இது ஆயுஷ்மானுக்கு அப்படி அமைந்திருக்கும் இன்னொரு படம்.

Gulabo Sitabo
Gulabo Sitabo
`எங்கிட்ட காசே இருந்தாலும் உனக்கு வாடகை கொடுக்க முடியாது‘ என நம்மூர் `பட்ஜெட் பத்மநாபன்'னுக்கே டஃப் கொடுக்கிறார் ஆயுஷ்மான்.

விடாக்கண்டன் அமிதாபுக்கும் கொடாக்கண்டன் ஆயுஷ்மானுக்கும் நடக்கும் இந்தப் போரில் ரியல் எஸ்டேட் புள்ளி, அரசு தொல்பொருள் துறை என எல்லோரும் கோதாவில் இறங்கினால் என்ன நடக்கும் என்பதைக் காமெடி கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஷூஜித் சர்கார். அவர் எழுதுவார் இவர் இயக்குவார் என்பதுதான் ஜூஹி சதுர்வேதி, ஷூஜித் சர்கார் டீமின் கொள்கை. ஆயுஷ்மானின் முதல் படமான `விக்கி டோனர்'ருக்கும் இதே கூட்டணிதான். `நேர்கொண்ட பார்வை'யான `பிங்க்' படத்துக்கும் கதை இந்த ஷூஜித்தான். ஆயுஷ்மானின் சகோதரி குட்டூவாக வரும் சிருஷ்டி ஷ்ரிவஸ்தவா, அரசு அதிகாரியாக வரும் விஜய் ராஸ் ஆகியோருக்கு ஸ்பெஷல் அப்ளாஸ்!

`குலாபோ சித்தாபோ' என்பது ஒரு பொம்மலாட்டக் கதை. வேலை செய்து பாவப்பட்டு நிற்கும் சித்தாபோ எனும் மனைவிக்கும் அலங்காரங்களுடன் மினுக்கும் குலாபோ என்னும் பெண்ணுக்கும் இடையே மாட்டிக்கொண்டு சிக்கித் தவிக்கும் ஆண் என்பதுதான் அக்கதை. லக்னோ தெருக்களில் அழிந்து வரும் பொம்மலாட்டக் கலைஞர்களின் வழி சொல்லப்படும் கதையின் பெயரைத் தலைப்பாக வைத்து, இந்தக் கதையை எழுதியிருக்கிறார்கள்.

கதைக்களம் லக்னோ. எங்கோ வடக்கில் ஏதோ ஒரு சமூகக் கட்டமைப்பில், இந்தியிலும் சற்றே புரிவதற்குக் கடினமான பேச்சுவழக்கைப் பேசும் எளிய மனிதர்கள்தான் கதாபாத்திரங்கள். ஆனால், எந்தவித அந்நியத்தன்மையும் இல்லாமல் அவர்களோடு நம்மால் ஒன்றிக்கொள்ள முடிகிறது. அந்த வக்கீல், அந்த அரசு அதிகாரி, ஏழ்மையில் புரளும் ஒரு குடும்பம், அதிலிருக்கும் அப்பாவி குழந்தைகள் எனப் பாத்திர வார்ப்புகளில் அத்தனை சுவாரஸ்யம்.

காமெடி டிராமாதான். ஒரு மஹாலைச் சுற்றி நடக்கும் கதைதான். ஆனால், தேவையற்ற காட்சிகள் எதுவும் வைக்காமல், கதைக்குத் தேவையானதை மட்டும் சொல்லும்போதே `வணிகப் படம்' எனும் பிம்பத்தை இந்த `குலாபோ சித்தாபோ' உடைக்கிறது. குறுகிய தெருக்கள், தேங்கி நிற்கும் சைக்கிள் ரிக்ஷாக்கள், அந்த ஒடிசலான மஹால் என ஒளிப்பதிவும் கலை இயக்கமும் அந்த இடத்தின் வாழ்வியலை அசலாகப் பிரதிபலிக்கிறது.

Gulabo Sitabo
Gulabo Sitabo

நகைச்சுவை என்பதே ஒரு யதார்த்தத்தைக் கீறிப் பார்க்கும் ஃபேன்டஸிதான். சார்லி சாப்ளினில் ஆரம்பித்து சந்தானம் வரை, அந்த ஃபேன்டஸியை ஏற்றுக்கொண்டால் மட்டும்தான் சிரிக்க முடியும். ஆனால், இந்தப் படத்தில் எல்லா நகைச்சுவையும் சர்ரியலிஸ பாணியில் இருக்கின்றன. படத்தின் ஆகப்பெறும் பலமும் பலவீனமும் அதுதான். வெடித்துச் சிதறவைக்க வாய்ப்புகள் இருந்தும் புன்னகையை மட்டும் கடத்தும் வசனங்கள். இன்னமும் கொஞ்சம் இறங்கி அடித்திருக்கலாம். கதை கருமிகளைப் பற்றியது என்றாலும் இதில் இன்னும் கொஞ்சம் தாராளம் காட்டியிருக்கலாமே ஷாப்! லாஜிக் மறந்து சிரிக்க வைத்தால் மக்கள் மன்னிக்காமலா இருக்கப்போகிறார்கள்?

நகைச்சுவையில் ஒரு நீதிக் கதை என்பதைச் சொல்ல ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் நீதி போதனைகள் அதிகமாகி, நகைச்சுவை அதனுள் மூழ்கிப் போய், எந்தவித சலனத்தையும் உண்டாக்காமல் சென்றுவிடுகிறது. படத்தில் வரும் பேசமுடியாத நபரில் (நல்நீஷ் நீல்) இருந்து அமிதாப் வரை அத்தனை பேரும் அட்டகாசமாய் நடித்திருந்தாலும், எந்தப் பாத்திரமும் யோக்கியமில்லை என்பதால், கதையின் மீது எந்தவொரு பிடிப்பும் வராமல் நகர்கிறது. படத்தின் சர்ப்ரைஸ் பேக்கேஜ், பேகமாக வரும் ஃபரூக் ஜஃபார்தான் (87 வயது).

டைட்டில் கிரெடிட்ஸில் அமிதாப், ஆயுஷ்மான் பெயர்களுக்கு முன்னர் இவர் பெயர் இடம்பெற்றிருப்பது சிறப்பான மரியாதை. ஆனால், அவருக்கு இன்னும் சில காட்சிகள் கொடுத்திருக்கலாம் சாரே!
Gulabo Sitabo
Gulabo Sitabo

பாரம்பர்ய கட்டடங்களின் மதிப்பை எப்படி ரியல் எஸ்டேட்டுகளும் அரசும் ஏப்பம் விடுகின்றன என்பதைத் தன் பாணியில் நக்கலடித்துச் செல்கிறது ஜூஹி சதுர்வேதியின் எழுத்து. அதிலும் அத்தனை நடந்த பின்னரும் இறுதிக் காட்சியில் ஆயுஷ்மான் - அமிதாப் இருவருக்கும் நடக்கும் அந்த உரையாடல் அவர்களின் பாத்திரங்களைச் சிதைக்காமல் இருந்தது சிறப்பு.

இரண்டு மணிநேரம்தான் படம் என்றாலும், இன்னமும் கொஞ்சம் காமெடி சேர்த்து வயிறு குலுங்கச் சிரிக்க வைத்திருந்தால், இந்த இரண்டு நரிகளின் தந்திர விளையாட்டை இன்னமும் ரசித்திருக்கலாம்.