பாலிவுட் நடிகை பரிணீதி சோப்ராவிற்கும், ஆம் ஆத்மி கட்சி எம்.பி.ராகவ் சதாவிற்கும் இடையே கடந்த 13ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
நிச்சயதார்த்தத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் இருவரும் தங்களுக்குள் இருக்கும் காதலை வெளியுலகம் தெரிந்து கொள்ளும் ஒன்றாக பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத் தொடங்கினர். இருவரும் தங்கள் காதல் குறித்து பொது வெளியில் பகிர்ந்துகொண்டது இல்லை. இந்நிலையில், பரிணீதி சோப்ரா முதல் முறையாக எப்படி காதலில் விழுந்தேன் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதோடு நிச்சயதார்த்தத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில், ``ஒரு காலை உணவு வேளையில் சந்தித்துக்கொண்ட போதுதான் எனக்கான ஒருவர் இவர் என்பதைத் தெரிந்துகொண்டேன். மிகவும் அமைதியான ஊக்கமளிக்கும் அற்புதமான மனிதர். அவரது ஆதரவு, நகைச்சுவை, புத்திசாலித்தனம் அனைத்தும் என்னை மகிழ்ச்சியாக்கியது. எங்களது நிச்சயதார்த்தம் கனவில் வாழ்வது போல் இருந்தது.
நாம் நேசித்தவர்களை கட்டிப்பிடித்து அவர்களுடன் நம் கொண்டாட்டத்தை பகிர்கையில் உணர்ச்சி வசப்பட்டு விடுகிறோம். நான் நினைப்பதை விட சிறப்பாக உள்ளது" என்று உணர்ச்சி பொங்க குறிப்பிட்டுள்ளார்.
பரிணீதி சோப்ராவின் திருமண நிச்சயதார்த்தத்தில் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் உட்பட 150 விருந்தினர்கள் கலந்து கொண்டனர். பரிணீதி சோப்ராவும், ராகவும் லண்டனில் ஒன்றாகப் படித்தவர்கள். அவர்களிடையே பல ஆண்டுகளாக அறிமுகம் இருந்தது. ஆனால் லண்டனில் படிக்கும் போது இருவரும் காதலிக்கவில்லை.
பரிணீதி சோப்ரா கடந்த ஆண்டு பஞ்சாப்பிற்கு படப்பிடிப்புக்காக சென்றார். படப்பிடிப்புக்கு சென்று ராகவ் அவரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போதுதான் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சாப்பாட்டின் போது காதல் ஏற்பட்டதாலோ என்னவோ, மும்பையிலும் அவர்கள் சாப்பிட ஹோட்டலுக்கு வந்த போதுதான் முதல் முறையாக மீடியாவின் கவனத்திற்கு வந்தனர்.