Published:Updated:

உரி, மணிகர்னிகா, கேசரி... அரையாண்டு இந்திய சினிமாவின் தேசப்பற்று படங்கள்!

தேசப்பற்று என்பதே ஒரு குடிமகனின் அளவுகோலாகக் கொள்ளப்படும் இந்தியாவில், தேசப்பற்றை மையமாகக் கொண்டு கடந்த 6 மாதங்களில் வெளியான முக்கிய திரைப்படங்கள் இவை.

தேசியத்துக்கான போராட்டங்களில் லட்சிய வேட்கையுடன் உயிர் துறந்த வீரர்களைப் பற்றிய திரைப்படங்களுக்கு எப்போதும் ரசிகர்கள் உண்டு. எதிரிகள் சூழ, ஆயுதங்கள் வெடிக்க, தேசியக் கொடிகளுடன் முன்னணி நாயகர்களின் சாகசங்கள் தேசபக்தர்களுக்கு 'கூஸ்பம்ப்ஸ்' மொமென்ட்களைத் தரும்.

தேசப்பற்று என்பது மக்கள் மீது பற்றுகொண்டிருப்பது. தேசியக் கொடி, தேசிய கீதம், எல்லைப் பாதுகாப்பு, போர் மீதான விருப்பம் முதலானவற்றை எல்லைகளாக வகுத்து, தேசப் பற்றுக்கான புதிய வரைமுறைகள் தற்போதைய காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.

தேசப்பற்று என்பதே ஒரு குடிமகனின் அளவுகோலாகக் கொள்ளப்படும் இந்தியாவில், தேசப்பற்றை மையமாகக் கொண்டு கடந்த 6 மாதங்களில் வெளியான முக்கிய திரைப்படங்கள் இவை.

2
உரி : தி சர்ஜிகல் ஸ்ட்ரைக்

உரி : தி சர்ஜிகல் ஸ்ட்ரைக்

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அமைக்கப்பட்டிருக்கும் உரி ராணுவ முகாம் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்குப் பழி வாங்கும் வகையில் நிகழ்த்தப்பட்ட துல்லியத் தாக்குதலைப் பற்றிய திரைப்படம் இது. விக்கி கவுஷல், யாமி கௌதம் முதலானோர் நடித்த இந்தத் திரைப்படம், நாடாளுமன்றத் தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்பு வெளியானது. மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்தப் படம், வசூலில் பெரும் சாதனையை நிகழ்த்தியது. ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்த விக்கி கவுஷல் கூறிய வசனமான, 'How's the Josh?' தேச பக்தர்களுக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி, படம் வெளிவந்தபோது பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் முதலானோர், அப்போது நடந்த விழாக்களில், 'How's the Josh?' என்று முழக்கமிட்டுத் தங்கள் தேசப்பற்றை வெளிப்படுத்தும் அளவுக்குப் பார்வையாளர்களைக் கவர்ந்தது, 'உரி : தி சர்ஜிகல் ஸ்ட்ரைக்' படம்.

3
மணிகர்னிகா : தி குயின் ஆஃப் ஜான்சி

மணிகர்னிகா : தி குயின் ஆஃப் ஜான்சி

ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடி மடிந்த ஜான்சி ராணியின் கதை. கங்கனா ரணாவத் ஜான்சி ராணியாக நடித்திருந்தார். தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்பு வெளியான 'மணிகர்னிகா', கங்கனா ரணாவத்தின் ஆக்ரோஷமான நடிப்பைத் திரையில் காட்டியது. முதலில் தெலுங்கு இயக்குநர் க்ரிஷ் இந்தப் படத்தை இயக்கினார். கங்கனாவுக்கும் க்ரிஷுக்கும் இடையிலான கருத்து முரண்பாடுகளால், பிற்பாதி முழுவதையும் இயக்கும் பொறுப்பை கங்கனாவே ஏற்றுக்கொண்டார். படத்திலிருக்கும் தகவல் பிழைகளைக் கடந்து, தாய்நாடு பற்றிய பரப்புரைகள், சமஸ்கிருத முழக்கங்கள், காவிக்கொடிகள் எனப் பல்வேறு அம்சங்களுடன் தேச மக்களுக்கு விருந்தாக இந்தப் படம் அமைந்தது.

4
கேசரி

கேசரி

'அக்‌ஷய் குமார்' என்றால் 'தேசபக்தி' என்கிறது பாலிவுட் அகராதி. 'கேசரி' என்றால் 'காவி' என்று காட்டுகிறது, இந்தி மொழி அகராதி. இதுதான், 'கேசரி' படத்தின் ஒன்லைன். பிரிட்டிஷ் இந்தியா காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆப்கன் படையினரை எதிர்கொண்ட 21 சீக்கிய வீரர்களின் தீரத்தைப் பற்றிப் பேசுகிறது, 'கேசரி.' அக்‌ஷய் குமார் திரையில் தோன்றினாலே, பார்வையாளர்களுக்குத் தேச பக்தி ஒட்டிக்கொள்கிறது. டெக்னிக்கல் பிரச்னைகள், சிஜி முதலானவற்றின் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், 'கேசரி' இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களின் வரிசையில் இடம் பிடித்துள்ளது.

5
ரோமியோ அக்பர் வால்டர்

ரோமியோ அக்பர் வால்டர்

ஜான் ஆபிரஹாம் நடிப்பில் வெளியான 'ரோமியோ அக்பர் வால்டர்', பாகிஸ்தானுக்கு உளவு பார்க்க அனுப்பப்பட்ட 'ரா' அதிகாரியின் கதை. இந்தப் படம் உளவுத்துறை அதிகாரிகளுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் முதலில் திரையிடப்பட்டு, பிறகு வெளியானது. தீவிரவாதம் பற்றி பல திரைப்படங்கள் நடித்த ஜான் ஆபிரஹாம், இதிலும் கச்சிதமாக நடித்திருந்தார்.

6
இந்தியாஸ் மோஸ்ட் வான்டட்

இந்தியாஸ் மோஸ்ட் வான்டட்

அர்ஜுன் கபூர் நடிப்பில், ராஜ்குமார் குப்தா இயக்கத்தில் வெளியானது, 'இந்தியாஸ் மோஸ்ட் வான்டட்' திரைப்படம். இந்தியாவின் ஒசாமா பின்லேடன் என்றழைக்கப்பட்ட யாசின் பட்கல் இந்திய முஜாஹிதீன் அமைப்பின் தலைவராக இருந்தவர். 2013-ம் ஆண்டு இந்தியா - நேபால் எல்லையில் யாசின் பட்கல் கைது செய்யப்பட்ட நிகழ்வுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டது இப்படம்.

7
பாரத்

பாரத்

ஒவ்வொரு ஆண்டும் ஈத் பெருநாள் அன்று தன் படத்தை வெளியிடும் வழக்கத்தைக் கொண்ட சல்மான் கான், இந்த ஆண்டு வெளியிட்டுள்ள திரைப்படம் 'பாரத்.' தலைப்பிலேயே தேச பக்தியை வெளிப்படுத்தும் இந்தப் படம், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையில் பிரிந்துபோன குடும்பத்தைப் பற்றியது. 'ஆறிலிருந்து அறுபதுவரை' திரைப்படத்தைப்போல, 'பாரத்' 7 வயதில் இருந்து 70 வயது வரை சல்மான் கானின் வாழ்க்கையை, இந்தியாவின் வளர்ச்சியோடு பேசுகிறது. படத்தின் மீதான விமர்சனங்களைக் கடந்து, 'பாரத்' வெளியான முதல் நாளிலேயே 42 கோடி ரூபாய் வசூலை அள்ளியது.

அடுத்த கட்டுரைக்கு