Published:Updated:

"கொரோனா தடுப்பூசி தொடர்பான வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம்!"- சல்மான் கான் அறிவுரை

கொரோனா தொடர்பான வதந்திகளை பொதுமக்கள் நம்பவேண்டாம் என்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வரவேண்டும் என்றும் நடிகர் சல்மான் கான் கேட்டுக்கொண்டுள்ளார்.

மகாராஷ்டிராவில் சிறுபான்மை சமுதாய மக்கள் கொரோனா தடுப்பூசி குறித்த அச்சம் காரணமாக அதனை எடுத்துக்கொள்ள தயங்கி வருகின்றனர். இதனால் சிறுபான்மையினர் இருக்கும் பகுதியில் மட்டும் முழுமையாக தடுப்பூசி போட முடியாத நிலை இருக்கிறது. இதையடுத்து அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வருவதற்கு நடிகர் சல்மான் கானின் உதவி கோரப்படும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே தெரிவித்திருந்தார்.

Salman Khan
Salman Khan

இது தொடர்பாக ராஜேஷ் தோபே அளித்த பேட்டியில், "இங்குள்ள முஸ்லிம் மக்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள தயக்கம் காட்டுக்கின்றனர். அவர்களைத் தடுப்பூசி எடுத்துக்கொள்ள சம்மதிக்க வைக்க நடிகர் சல்மான் கான் மற்றும் மதத் தலைவர்களின் உதவி கோரப்படும்" என்றார்.

இதேபோன்று மும்பை மேயர் கிஷோரியும், "எப்போது தடுப்பூசி போடப்பட்டாலும் பல்வேறு மத நம்பிக்கைகள் காரணமாக அப்பணி தாமதம் அடைகிறது. அனைத்து மக்களும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள நடிகர் சல்மான் கான் ஊக்கப்படுத்தவேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று நடிகர் சல்மான்கான் பொதுமக்கள் அச்சம் இன்றி, வதந்திகளை நம்பாமல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வதன் மூலமே உங்களையும், உங்களது குடும்பத்தையும், சமுதாயத்தையும் பாதுகாப்பாக வைத்துகொள்ள முடியும் என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

நடிகர் சல்மான் கான் மும்பையில் தனது தொண்டு நிறுவனம் மூலம் ஏராளமான சமூக சேவைகளை செய்து வருகிறார். எந்த உதவியாக இருந்தாலும் முதல் ஆளாக நின்று உதவிகளை செய்து வருகிறார். இதனால் மும்பை மேயர் மட்டுமல்லாது அமைச்சர் ராஜேஷ் தோபேயும் கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் சல்மான் கான் உதவியை நாடி இருக்கின்றனர். மும்பையில் 100 சதவிகிதம் அளவுக்கு முதல் தடுப்பூசியை மக்கள் போட்டுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சகோதரி மகளுடன் சல்மான்கான்
சகோதரி மகளுடன் சல்மான்கான்

இதற்கிடையே நடிகர் சல்மான் கான் தனது சகோதரியின் மகளுடன் சேர்ந்து குரங்கிற்கு வாழைப்பழம் கொடுக்கும் வீடியோ ஒன்று வைரலாகி இருக்கிறது. சல்மான்கான் அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். சல்மான் கானின் மருமகள் குரங்கிற்கு வாழைப்பழம் கொடுத்துவிட்டு கைதட்டி சிரிப்பது போன்று அந்த வீடியோ அமைந்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு