பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நேற்று காலையில் அவசரமாக வேலைக்கு புறப்பட்டுச் சென்றார். ஆனால் வழியில் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக்கொண்டார்.
குறிப்பிட்ட நேரத்தில் படப்பிடிப்புக்குச் செல்லவேண்டிய நெருக்கடியில் இருந்தார். உடனே காரை விட்டு இறங்கி அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனத்தில் உதவி கேட்டு அதன் பின்னிருக்கையில் அமர்ந்து பயணம் செய்தார். இரு சக்கர வாகனத்தை ஓட்டியவரும், அதில் அமர்ந்து பயணம் செய்தவரும் ஹெல்மெட் அணியவில்லை. வாகனத்தை ஓட்டியவர் தொப்பி அணிந்து இருந்தார்.
ஆனால் ஹெம்லெட் இல்லாமல் பயணம் செய்த புகைப்படத்தை அமிதாப்பச்சன் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதோடு குறிப்பிட்ட நேரத்தில் பணிக்குச் செல்ல உதவிய மஞ்சள் டி-சர்ட் அணிந்த இரு சக்கர வாகன ஓட்டிக்கு நன்றி தெரிவித்திருந்தார். அதோடு நடிகை அனுஷ்கா சர்மாவும் இருசக்கர வாகனத்தில் பின்னிருக்கையில் அமர்ந்து பயணம் செய்வது போன்ற வீடியோ வைரலாகப் பரவியிருக்கிறது.

இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் இருவரும் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்திருப்பது குறித்து மும்பை டிராபிக் போலீசாரிடம் கேள்வி எழுப்பியிருந்தனர். மோட்டார் வாகனச் சட்டப்படி இருசக்கர வாகனத்தின் பின்னிருக்கையில் அமர்ந்து பயணம் செய்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து பயணம் செய்யவேண்டும். அப்படி பயணம் செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்.
அமிதாப்பச்சன் மற்றும் அனுஷ்கா சர்மா ஹெல்மெட் இல்லாமல் பயணம் செய்தது குறித்து நெட்டிசன்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ள மும்பை போலீஸார் இது குறித்து டிராபிக் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்படும் என்று பதிவிட்டுள்ளனர். அமிதாப்பச்சன் `புராஜெக்ட் கே' உட்பட பல படங்களில் மிகவும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.