Published:Updated:

"லேசான கொரோனா தொற்றுதான். விரைவில் குணமடைய பிரார்த்தியுங்கள்!"- லதா மங்கேஷ்கரின் உறவினர் தகவல்

லதா மங்கேஷ்கர்
News
லதா மங்கேஷ்கர்

92 வயதான பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனாவால் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிராவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. ஏற்கெனவே பாலிவுட் முக்கிய பிரமுகர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் இப்போது பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறது. அவர் பிரீட்ச் கேண்டி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இத்தகவலை லதா மங்கேஷ்கரின் உறவினர் ரச்சனா ஷா தெரிவித்துள்ளார்.

லேசான கொரோனா தொற்றுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், நலமுடன் இருப்பதாகவும், வயது காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமே அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "வைரஸ் தொற்று காரணமாகவே லதா மங்கேஷ்கரை மருத்துவமனைக்குக் கொண்டு வந்தோம். தற்போது குணமடைந்து வருகிறார். அவர் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்தியுங்கள்" என்று தெரிவித்துள்ளார். பாலிவுட் மற்றும் பிற திரையுலகைச் சேர்ந்தவர்களும் அவர் விரைந்து குணமடைய வேண்டுமென பதிவுகளை இட்டுவருகின்றனர்.

லதா மங்கேஷ்கர்
லதா மங்கேஷ்கர்

92 வயதாகும் லதா மங்கேஷ்கர் கடைசியாக 2019ம் ஆண்டு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படத்துறைக்கு வந்த பிறகு இந்தி உட்பட இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார். அதோடு கடந்தமாதம்தான் அவர் சினிமாவிற்கு வந்து 80 ஆண்டுகள் நிறைவடைந்தன. இதனை ஒட்டி ட்விட்டரில் அவர் வெளியிட்ட செய்தியில், "முதன் முறையாக 1941ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி எனது பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு ரேடியோவிற்கு இரண்டு பாடல்களை பாடினேன். அதுதான் நான் பாடுவதை என் தொழிலாகத் தேர்ந்தெடுத்த பின்னர் நான் பாடிய முதல் பாடல்களாகும்." லதாவின் இந்த ட்வீட்டுக்கு இசை ரசிகர்கள் பலரும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz