பிரபல குணச்சித்திர நடிகரான பிரகாஷ் ராஜ், தற்போது சிவம் நாயர் மற்றும் ஜெய்பிரத் தேசாய் இயக்கத்தில் உருவாகியுள்ள `Mukhbir' என்ற இந்தி மொழி ஸ்பை-திரில்லர் வெப்சீரிஸில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இது நாளை, நவம்பர் 11-ம் தேதி (நாளை) 'ZEE5' ஓ.டி.டி தளத்தில் வெளியாகவிருக்கிறது. இதையொட்டி நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ், தற்போது சிறிய பட்ஜெட் படங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது என்றும் கோவிட் பெருந்தொற்று காலம் சினிமாவில் இருந்த மாஃபியா கும்பல்களைப் புறந்தள்ளிவிட்டது என்றும் பேசியுள்ளார்.

இது பற்றிப் பேசிய அவர், "இந்த கோவிட் பெருந்தொற்று காலத்தில் மக்கள் நல்ல கன்டென்ட் இருக்கும் திரைப்படங்களைப் பார்க்கத் தொடங்கிவிட்டனர். இதனால் கன்டென்ட் இல்லாத போலியான திரைப்படங்கள் குறைந்து வருகின்றன. கன்டென்ட்தான் திரைப்படத்தின் ராஜாவாக மாறியிருக்கிறது. சினிமா என்பது மனிதன் கண்டுபிடித்த சமீப காலத்திய மொழி. அது ஒரு நதியைப் போலப் பாய்ந்து கொண்டிருந்தது. அதை இரண்டு அல்லது இரண்டரை மணி நேரம் ஓடும் கதையாக மாற்றினர். அதைத் திரையரங்குகளில் மட்டுமே காண முடியும் என்ற எழுதப்படாத விதியை சில சினிமா மாஃபியா கும்பல்கள் கொண்டு வந்தனர்.
இதைத் தொலைக்காட்சி, ஓ.டி.டி போன்றவற்றில் ஒளிபரப்பும் போது தடுக்க வேண்டும் என்று சினிமா மாஃபியாக்கள் நினைத்தனர். ஆனால், கோவிட் பெருந்தொற்றுக் காலம் இந்த மாஃபியா கும்பல்களைப் புறந்தள்ளிவிட்டது. மக்கள் நல்ல கன்டென்ட்களைப் பார்க்கத் தொடங்கிவிட்டனர். நிறைய நல்ல கன்டென்ட்களும் வெளிவரத் தொடங்கிவிட்டன. சிறிய பட்ஜெட் படங்களுக்கு 'ஓ.டி.டி' மூலம் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. இதுதான் இந்த சினிமாவின் சிறப்பு" என்று கூறினார்.