சினிமா
பேட்டிகள்
ஆன்மிகம்
கட்டுரைகள்
Published:Updated:

பாலிவுட்டின் பரபர நாயகிகள்!

ஜான்வி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜான்வி

சினிமா

பாலிவுட்டில் ஒவ்வொரு வருடமும் அத்தனை நாயகிகள் வருகிறார்கள். வந்த வேகத்தில் பலர் காணாமல் போகிறார்கள். சிலரே வரவேற்பு பெற்ற நாயகிகளாக நிற்கிறார்கள். மிகச்சிலரே தோற்றம், வசீகரம் இவற்றையெல்லாம் தாண்டி, தங்கள் நடிப்பின் மூலம் ஜொலிக்கிறார்கள். பாலிவுட்டில் நெபோடிசம் எனப் பேசப்பட்டாலும், ஒவ்வொருவரும் தன்னையும் தன் பெயரையும் சினிமா உலகம் என்ற கல்வெட்டில் பொறிக்க அத்தனை மெனக்கெடுகிறார்கள். சமகால பாலிவுட் நாயகிகளில் இவர்கள் மக்களால் கவனிக்கப்பட்டவர்கள்...

அனன்யா பாண்டே

கரண் ஜோஹர் தயாரிப்பில் வெளியான `ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் 2' படத்தில் டைகர் ஷெராஃபுக்கு ஜோடியாக அறிமுகமானார். படத்துக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்திருந்தாலும், சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து, `பதி பத்தினி அவுர் வோ' என்ற படத்தில் கார்த்திக் ஆர்யனுடன் சேர்ந்து நடித்தார், `லூக்கா சுப்பி' ஹிட்டுக்குப் பிறகு, கார்த்திக் ஆர்யன் நடிக்கும் படமென்பதால் எதிர்பார்ப்பு அதிகமிருக்க, அதைப் படம் சரியாகப் பூர்த்தி செய்தது. முதல் படத்தில் தான் கவனிக்கப்பட்டாலும் படம் ஜெயிக்கவில்லை என்ற அனன்யாவின் வருத்தத்தை இந்தப் படம் துடைத்தது. உடனே அனன்யா பாண்டேவுக்கு ஆஃபர்கள் குவியத் தொடங்கின. இர்ஃபான் கான் நடித்த `அங்ரேஸி மீடியம்' படத்தில் கேமியோ என்ட்ரி கொடுத்தவர், `காலி பீலி' என்ற படத்தின் மூலம் நேரடி ஓடிடி தளத்தில் களமிறங்கினார். தியேட்டருக்காக எடுக்கப்பட்ட இந்தப் படம் ஓடிடி-யில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் `லிகர்' என்ற மல்ட்டிலிங்குவல் படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படம் வெளியாகும்போது, டோலிவுட்டில் பெரிய அதிர்வலையை அனன்யா ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கலாம்.

அனன்யா பாண்டே - மிருணாள் தாக்கூர்
அனன்யா பாண்டே - மிருணாள் தாக்கூர்

மிருணாள் தாக்கூர்

டி.வி சீரியல்களிலிருந்து சினிமாவுக்கு வந்து ஜொலித்த பாலிவுட் நட்சத்திரங்களின் பட்டியலில், மிருணாள் தாக்கூர்தான் சமீபத்திய சென்சேஷன். ஏராளமான டி.வி சீரியல்களில் நடித்து முடித்தவுடன் மராத்தி பட வாய்ப்புகள் வர, அதைச் சரியாகப் பயன்படுத்தினார், மிருணால். இதைத் தொடர்ந்து, `லவ் சோனியா' என்ற படத்தில் நாயகியாக நடிக்க ஆயிரக்கணக்கான பெண்கள் ஆடிஷனில் கலந்துகொள்ள, மிருணாள் அதற்குத் தேர்வானார். இந்தப் படம் திரைப்பட விழாக்களில் விருதுகளைக் குவித்தாலும் தியேட்டரில் சரியான வரவேற்பு இல்லை. ஆனால், இவரது நடிப்பு பேசப்பட்டது. ஹிரித்திக் ரோஷனுடன் `சூப்பர் 30', ஜான் ஆபிரகாமுடன் `பத்லா ஹவுஸ்' என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தன. நெட்ஃபிளிக்ஸில் வெளியான `கோஸ்ட் ஸ்டோரீஸ்' ஆந்தாலஜியில் கரண் ஜோஹர் இயக்கிய பகுதியின் நாயகி மிருணாள்தான். சமீபமாக, அமேஸான் ப்ரைம் தளத்தில் ஃபரான் அக்தருடன் இவர் நடித்த `டூஃபான்' வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. கார்த்திக் ஆர்யனுடன் `டமாகா', ஷாகித் கபூருடன் `ஜெர்ஸி', இஷான் கட்டருடன் `பிப்பா', தமிழில் ஹிட்டான `தடம்' படத்தின் இந்தி ரீமேக், துல்கர் சல்மானுடன் ஒரு மல்ட்டிலிங்குவல் படம் என செம பிஸியாக இருக்கிறார்.

சானியா மல்ஹோத்ரா

`தங்கல்' படத்தில் அமீர் கானின் இரண்டாவது மகளான பபிதா குமாரியாக பாலிவுட்டில் அறிமுகமானார், சான்யா மல்ஹோத்ரா. இந்தப் படத்தில் இவரது நடிப்பு கவனிக்கப்பட்டது. அது பெரிய அங்கீகாரம் கொடுத்ததோடு, அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைத்தன. `படாகா', `பதாய் ஹோ' என இரண்டு காமெடிப் படங்களில் நடித்தார். மல்யுத்த வீராங்கனையாக நடித்து முடித்தவுடன், காமெடி டிராமா கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து, தனக்கான மற்றொரு முகத்தைப் பதிவு செய்தார், சான்யா. பிறகு, நவாஸுதீன் சித்திக்கியுடன் ஒரு காதல் கதை. `போட்டோகிராப்', மூலம் சிறந்த நடிகைக்கான ஃபிலிம்பேர் விருது கிடைத்தது. `சகுந்தலா தேவி', `லூடோ' என குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் ஸ்கோர் செய்திருந்தார். `மீனாட்சி சுந்தரேஸ்வரர்' எனும் நெட்ஃபிளிக்ஸ் படம், அட்லீ இயக்கத்தில் உருவாகும் ஷாரூக் கான் படம், `ஹிட்' எனும் தெலுங்குப் படத்தின் இந்தி ரீமேக் என சான்யா பாலிவுட்டின் தவிர்க்க முடியாத நாயகியாகிவருகிறார்.

சானியா மல்ஹோத்ரா - சாரா அலிகான்
சானியா மல்ஹோத்ரா - சாரா அலிகான்

சாரா அலிகான்

பாலிவுட் நடிகர் சயீப் அலி கானின் மகள். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொலிடிக்கல் சயின்ஸ் பயின்றவர். இதற்கிடையில் சினிமாமீதும், நடிப்பின்மீதும் ஆர்வம் மலர, திரைத்துறையைத் தேர்ந்தெடுத்தார். முதல் படம் சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் `கேதர்நாத்.’ முதல் படத்திலேயே தனது நடிப்பால் பாலிவுட் உலகைக் கவர்ந்த சாராவுக்கு, விருதுகள் பல கைக்கு வந்து சேர்ந்தன. இரண்டாவது படம், ரன்வீர் சிங்குடன் `சிம்பா.’ தெலுங்கில் ஹிட்டான `டெம்பர்' படத்தின் ரீமேக். இதைத் தொடர்ந்து, இம்தியாஸ் அலி இயக்கத்தில் கார்த்திக் ஆர்யனுடன் `லவ் ஆஜ்கல்.’ ரொமான்டிக் டிராமா ஜானரிலேயே பயணித்துக் கொண்டிருந்த சாரா அலிகான், `கூலி நம்பர் 1' என்ற காமெடி டிராமாவில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்தார். தற்போது, ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் அக்‌ஷய் குமார், தனுஷுடன் `அத்ரங்கி ரே' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். எப்போதும் துறுதுறு நாயகியாக திரையில் விளையாடிவரும் சாராவுக்குத் தனி ரசிகர் பட்டாளமே உருவாகியிருக்கிறது. இவர் இன்ஸ்டாவில் அவ்வப்போது பதிவிடும் கிளாமர் போட்டோக்கள் அன்றைய நாளின் ஹாட் டாபிக்காக இருக்கும்.

ஜான்வி கபூர்

ஜான்வி கபூருக்கு அறிமுகம் தேவையில்லை. போனி கபூர் - ஸ்ரீதேவியின் மகள். இவர் சினிமாவுக்கு வருகிறார் என்ற செய்தி இணையத்தைக் கலக்கியது. முதல் படமே `சாய்ராட்' படத்தின் இந்தி வெர்ஷன், `தடக்.’ இந்தப் படத்தின் மூலம் பாலிவுட்டைத் தன் பக்கம் திரும்பிப் பார்க்கவைத்தார். அடுத்து இவர் நடித்த `கோஸ்ட் ஸ்டோரீஸ்' எனும் ஆந்தாலஜிக்கும், `குன்ஜன் சக்ஸேனா' எனும் பயோபிக்குக்கும் கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், ஜான்வியின் லைன்அப்பை அது பாதிக்கவில்லை. ராஜ்குமார் ராவுடன் `ரூஹி' என்ற ஹாரர் - காமெடி படத்தில் நடித்து பரிசோதனை முயற்சி செய்து பார்த்தார். தற்போது ரீமேக் எனும் ஆயுதத்தைக் கையிலெடுத்திருக்கிறார். `கோலமாவு கோகிலா' படத்தின் ரீமேக்கான `குட்லக் ஜெர்ரி'யில் நடித்து முடித்த ஜான்வி, மலையாளத்தில் ஹிட்டான `ஹெலன்' படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்துவருகிறார். போனி கபூர் - ஸ்ரீதேவியின் மகள் என்பது இவருக்கு எந்த அளவுக்கு ப்ளஸ்ஸாக அமைந்ததோ, அதுவே அவருக்குத் தன்னை ஜான்வியாக நிலை நிறுத்திக்கொள்ள பெரிய நெருக்கடியையும் கொடுக்கும். இதைக் கடந்து, மக்கள் மத்தியில் ஜான்வி ஜெயித்துக் காட்ட வேண்டும்.

ஜான்வி கபூர் - தாரா சுடாரியா
ஜான்வி கபூர் - தாரா சுடாரியா

தாரா சுடாரியா

`ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் 2' படத்தில் அறிமுகமான இன்னொரு நாயகி தாரா சுடாரியா. பலவிதமான நடனங்களைக் கற்றுக்கொண்ட இவர், டி.வி ஆங்கராகவும் பணியாற்றியிருக்கிறார். பாடகர், டான்ஸர் எனப் பன்முகத் திறன்கொண்ட தாராவுக்கு ஃபேன்டஸி உருவாக்கமான `அலாதின்' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், அதில் நடிக்க முடியாமல் போனது. அதன் பிறகு வந்த வாய்ப்புதான், `ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் 2.’ டைகர் ஷெராஃபின் முன்னாள் காதலியாக நடித்திருப்பார். இதைத் தொடர்ந்து, `மர்ஜாவான்' படத்தில் வாய் பேச முடியாத மியூசிக் டீச்சராக நடித்திருந்தார். படத்துக்குச் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் இவரது கதாபாத்திரம் கவனிக்கப்பட்டது. தற்போது, தெலுங்கில் சூப்பர்ஹிட்டான `RX 100' படத்தின் பாலிவுட் ரீமேக்கில் நடித்திருக்கும் தாரா, ஜான் ஆபிரஹாமுடன் ஒன்று, மீண்டும் டைகர் ஷெராஃபுடன் ஒன்று என அடுத்தடுத்து படங்கள் வைத்திருக்கிறார்.