சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பிரியங்கா சோப்ராவின் வீடியோ ஒன்று வைரலானது. அதில் ராம் சரண் இந்தியில் அறிமுகமான 'சன்ஜீர்' படத்தில் சேர்ந்து நீங்கள் நடித்திருக்கிறீர்கள். அந்த வகையில் அவர் நடித்த 'ஆர்.ஆர்.ஆர்' படத்தைப் பார்த்திருக்கிறீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு பிரியங்கா, "நான் அந்தப் படத்தைப் பார்க்கவில்லை. எனக்குப் படங்கள் பார்க்க நேரம் கிடைப்பதில்லை. ஆனால் நிறையத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பேன்" என்று பதிலளித்திருக்கிறார்.
‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தைப் பார்க்கவில்லை என்று கூறிய பிரியங்காவை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். காரணம் கடந்த ஜனவரி மாதம் நடந்த 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவின் முன்னோட்டமாக 'ஆர்.ஆர்.ஆர்' திரையிடப்பட்டது. அந்நிகழ்ச்சியை பிரியங்கா தொகுத்து வழங்கியிருந்தார்.

"இந்தியத் திரைப்படப் பயணத்தில் என்னுடைய பங்களிப்பு இருந்தது ரொம்ப மகிழ்ச்சி. ‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழுவுக்கு வாழ்த்துகள்” எனத் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி சில நாள்களுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில் ‘ஆர்.ஆர்.ஆர்’ தமிழ்ப் படம் என்று கூறியிருந்தார். அதனையும் சுட்டிக்காட்டி, "படம் பார்க்காமல் எப்படி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினீர்கள்?" என்று பிரியங்கா சோப்ராவைப் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.