பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா பாடகர் நிக் ஜோனஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் வாடகைத்தாய் மூலம் பெண் குழந்தை ஒன்றைப் பெற்றுக்கொண்டார். குழந்தையின் பிரசவத்தில் சிக்கல் இருந்ததால் சில நாள்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்தது. இதனால் குழந்தையின் முகத்தை பிரியங்கா சோப்ரா நீண்ட நாள்களாக வெளியுலகத்துக்குக் காட்டாமல் இருந்தார்.

இந்நிலையில் பிரியங்கா சோப்ரா, தனது கணவர் நிக் ஜோனஸ் மற்றும் அவரின் சகோதரர்கள் கலந்துகொண்ட 'வாக் ஆஃப் ஃபேம்' (Walk of Fame) நிகழ்ச்சியில் தனது மகளோடு கலந்து கொண்டார். நிக் ஜோனஸ் சகோதரர்களின் மனைவிகளும் பிரியங்கா சோப்ராவுடன் அமர்ந்திருந்தனர். இதில் பிரியங்கா சோப்ரா தனது மகள் 'மால்தி மேரி சோப்ரா ஜோனஸ்' முகத்தை முதன்முறையாகப் பத்திரிகையாளர்களுக்குக் காட்டினார். அதோடு குடும்பத்தோடு குரூப் போட்டோ எடுக்கும்போதும் குழந்தையின் முகத்தை அனைவருக்கும் காட்டினார்.
நிகழ்ச்சியில் மால்தி தனது தாயாரின் மடியில் அமர்ந்திருந்தாள். பிரியங்கா சோப்ரா தனது மகளின் முகம் தெரியும் வகையில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படங்களைத் தனது சோஷியல் மீடியாவிலும் பகிர்ந்து கொண்டார். அவரின் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தற்போது பிரியங்கா சோப்ரா அமெரிக்காவில் ஹாலிவுட் படங்களில் மட்டுமே அதிகம் கவனம் செலுத்தி வருவதால் பாலிவுட்டுக்கு வருவதை வெகுவாகக் குறைத்துக்கொண்டுள்ளார். அமெரிக்காவிலிருந்து கொண்டு நடிப்பதோடு மட்டுமல்லாமல் சொந்தமாக அழகு சாதன பொருள்கள் மற்றும் ஆடைகள் விற்பனை செய்யும் தொழில் நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். பிரியங்கா சோப்ரா மட்டுமல்லாது பாலிவுட்டில் ஆமிர் கான், ஷாருக்கான், கரண் ஜோஹர் உட்படப் பலரும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.