பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா 2006 ம் ஆண்டிலிருந்து ஐ.நா.வின் யுனிசெஃப் நல்லெண்ணத் தூதராகச் செயல்பட்டு வருகிறார். இவர் சுற்றுச்சூழல், ஆரோக்கியம், கல்வி, பெண்கள் உரிமை உள்ளிட்ட விஷயங்களுக்காக குரல் கொடுத்து வருகிறார்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்தியா திரும்பிய பிரியங்கா சோப்ரா, உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் பெண்களின் பாதுகாப்புக்கு என்று மத்திய அரசு மற்றும் யுனிசெஃப்- ஆல் உருவாக்கப்பட்ட ஒன் ஸ்டாப் சென்டர்களுக்கு சென்று பார்வையிட்டிருக்கிறார். இந்த மையங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும், உத்தரப்பிரதேச மாநிலத்தின் வளர்ச்சியைக் கண்டும் அவர் நெகிழ்ந்து பேசியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், "கடந்த இரண்டு நாட்கள் பயணத்தின் போது, இங்கு ஒரு பெரிய மாற்றத்தைக் கண்டேன். உண்மையில், உத்தரபிரதேசத்திற்கு இந்த மாற்றம் தேவைப்பட்டது. தற்போது உத்தரபிரதேச மாநிலத்தில் அதிக அளவில் பெண்கள் படிக்கிறார்கள், என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர்களில் யாருமே பிரியங்கா சோப்ராவாக வர விரும்பவில்லை... மருத்துவராகவும், பொறியாளர்களாகவும் மாறி குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்டெடுக்க விரும்புகின்றனர்.

மேலும் இங்கு குழந்தைகளின் ஊட்டச்சத்துக்காக ஏராளமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டிலேயே முதல் சத்துணவு செயலி இங்கு தொடங்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் அங்கன்வாடி பணியாளர்கள் மட்டுமின்றி ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளைக் கண்காணிக்க முடியும்.
இங்குள்ள ஒன் ஸ்டாப் சென்டரை பார்வையிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பல பெண்களை இங்கு சந்தித்துப் பேசினேன். இந்த மையங்கள் மூலம் பெண்கள் பல்வேறு உதவிகளைப் பெறுகிறார்கள். நமது பாரம்பரியத்தையும் நவீனத்தையும் பிடித்துக்கொண்டு நாம் முன்னேற வேண்டும். என்று பேசிய பிரியங்கா குழந்தைகளின் கல்விக்காக நடத்தப்படும் திட்டங்களையும், கோவிட் காலத்தில் ஆதரவற்றிருந்த குழந்தைகளுக்கான திட்டங்களையும் பாராட்டி பேசியிருக்கிறார். மேலும் நான் சந்தித்த பெண்களால் மிகவும் ஈர்க்கப்பட்டு இங்கிருந்து உத்வேகத்துடன் திரும்புகிறேன்" என்று நெகிழ்ச்சியாகக் கூறியிருக்கிறார்.