பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, அமெரிக்காவைச் சேர்ந்த பாடகரான நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தன் கணவர் ஜோனஸ் தான், தன்னை அதிகமாக உற்சாகப்படுத்துபவர் என பல மேடைகளில் அவர் புகழ்ந்து பேசியுள்ளார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரியங்கா, நிக்கிற்கு முன்னதாக தனக்கு இருந்த உறவுகள் பற்றி வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

கால் ஹர் டாடி பாட்காஸ்ட்டின் (Call Her Daddy podcast) சமீபத்திய எபிசோடில் `காதல் துணையைத் தேர்ந்தெடுத்ததற்கு ஏதேனும் பேட்டர்ன் இருக்கிறதா?' என பிரியங்காவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், `நான் ஓர் உறவிலிருந்து வேறு உறவுக்கு... அதிலிருந்து மீண்டும் வேறொரு உறவுக்குச் சென்றேன்’ என கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசியுள்ள அவர், `நிக்-கிற்கு முன்னதாக இருந்த என் உறவுகளுக்கு இடையில் நான் இடைவெளி விடவில்லை. என்னுடன் பணிபுரிந்த நடிகர்கள் அல்லது என் படத்தில் நான் சந்தித்த நண்பர்களுடன் நான் எப்போதும் டேட்டிங் செய்தேன். ஓர் உறவு எப்படி இருக்க வேண்டும் என எனக்கு ஒரு யோசனை இருந்தது. அதனால் அதை நான் தேடிக்கொண்டே இருந்தேன். அந்த உறவை பற்றிய யோசனையில் நான் சந்தித்தவர்களை என் வாழ்க்கையில் பொருத்த முயற்சி செய்தேன்.
ஆனால் எதுவும் செட் ஆகவில்லை. நிக் ஜோனஸுக்கு முன்னதாக இருந்த உறவுகளுக்குப் பிறகு, நான் அவற்றிலிருந்து சற்று ஓய்வெடுக்க நினைத்தேன். நான் உறவுகளில் மீண்டும் மீண்டும் ஒரே தவறையே செய்கிறேன் என சிந்தித்தேன். என்னை ஒரு கேர்டேக்கராக கருதுவது மிகப்பெரிய தவறு என்பதைப் புரிந்து கொண்டேன்.

ஒரு கட்டத்தில், நான் என்ன செய்கிறேன்... உறவைத் தேர்ந்தெடுப்பதில் என்னை நானே அழித்துக் கொள்கிறேன். என் குடும்பம் மற்றும் என்னை உண்மையாக நேசிப்பவர்களைத் தவிர வேறு யாருக்கும் நான் கடன்பட்டிருக்கவில்லை என்பதை உணர்ந்தேன்.
நீங்கள் உறவுகளில் இருக்கும்போது, நீங்கள் யார் என்பதை அங்கீகரிப்பதை நிறுத்துகிறீர்கள், உங்கள் சொந்த அடையாளத்தை நீங்கள் மறந்துவிடுவீர்கள் அல்லது உங்களுக்காக நீங்கள் என்ன விரும்புகிறீர்கள், உங்கள் இலக்குகள் என்ன என்பதை அறிந்து கொள்வதை நிறுத்துகிறீர்கள், பிறகு நீங்கள் கண்ணுக்குத் தெரியாதவராகிறீர்கள். நானும் என் உறவுகளில் கண்ணுக்குத் தெரியாததாக உணர ஆரம்பித்தேன். அதனால் அவற்றில் இருந்து வெளியேறிவிட்டேன்” என பிரியங்கா பகிர்ந்துள்ளார்.