நடிகை ராதிகா ஆப்தே, பிரகாஷ்ராஜின் 'தோனி' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இதையடுத்து ஆல் இன் ஆல் அழகு ராஜா, கபாலி ஆகிய படங்களில் நடித்து பிரபலமடைந்தார். தற்போது பாலிவுட் படங்களில் நடிப்பதில் மிகவும் பிஸியாக இருக்கிறார்.
பல்வேறு துணிச்சலான கதாபாத்திரங்களில் நடிக்கும் ராதிகா, பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் படங்களில் விரும்பி நடித்து வருகிறார். அப்படி இவர் நடித்து மிசஸ். அண்டர்கவர் திரைப்படம் நேற்று ஓ.டிடி யில் வெளியாகியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு இந்தப் படம் தொடர்பான புரொமோஷன் இன்டர்வியூவில் பேசிய ராதிகா ஆப்தே, சினிமா துறையில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை பற்றி பகிர்ந்துள்ளார்.
அதில் பேசிய அவர், ``சினிமாதுறையில் பலர், நடிகைகளை உருவகேலி செய்து வருகின்றனர். குறிப்பாக, இதை அவர்கள் தங்கள் உரிமையாகக் கருதுகின்றனர். இதே போன்ற உருவகேலி அவமானம் எனக்கும் நடந்துள்ளது.
சினிமாதுறையில் நுழைந்த பலர் என்னிடம், `ஏன் உங்களுக்கு நல்ல மூக்கு இல்லை?', `ஏன் உங்கள் மார்பகங்கள் பெரிதாக இல்லை?' என்றெல்லாம் கேட்டனர். உடலை சரி செய்தால் சினிமா வாய்ப்புகள் தருவதாகவும் கூறினார்கள். இப்படியான பேச்சுகளால் நிறைய பட வாய்ப்புகளை இழந்தேன்.
அதேபோல் சினிமாவில் கால் பதித்த பிறகு, 2- 3 கிலோ உடல் எடை அதிகரித்ததால் ஒரு பட வாய்ப்பை இழந்தேன். இப்போது விழிப்புணர்வு காரணமாக சில ஆண்டுகளாக நாங்கள் இதை பற்றி வெளிப்படையாக பேசுகிறோம்” என்றவர்,

``மக்களின் உணர்வுகள் விசித்திரமானவை. பத்லாபூர் படம் வரைக்கும் நான் கிராமத்துப் பெண்ணாக மட்டுமே நடிக்க முடியும் என மக்கள் நினைத்தனர். அதற்கு பிறகு பாலியல் காமெடிகளில் மட்டுமே என்னால் நடிக்க முடியும் என நினைத்தனர். அதனால் அதை நான் நிறுத்திவிட்டேன். ஆனால் மக்கள் என்னை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி நான் சிந்திக்கவில்லை, கவலைப்படவில்லை. எனக்கு நல்ல ரோல் கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன்” என்று கூறியுள்ளார்.