நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான தொழிலதிபர் ராஜ் குந்த்ரா, 38.5 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் ஃப்ளாட்களை தன் மனைவி பெயருக்கு மாற்றியுள்ளார். ஆபாசப் பட வழக்கில் சிக்கிய தொழிலதிபர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டு, பிறகு ஜாமீனில் வெளியே வந்தார்.

இவர் மும்பை, ஜூஹு பகுதியில் உள்ள தன் வீட்டை தன் மனைவி பெயருக்கு மாற்றியுள்ளார். மேலும், ஓஷன் வியூ என்ற கட்டடத்தின் தரைத்தளம் உட்பட 5 அடுக்குமாடி குடியிருப்புகளையும் மனைவி ஷில்பா ஷெட்டியின் பெயருக்கு மாற்றியுள்ளார். இவற்றின் மொத்த மதிப்பு 38.5 கோடி.
தற்போது ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா வசிக்கும் வீடும், இந்த வீடுகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடுகளின் உரிமையை தன் பெயரில் இருந்து தன் மனைவி பெயருக்கு மாற்றி பதிந்துள்ளார் ராஜ் குந்த்ரா.

பத்திர பரிமாற்றத்துக்கு 1.9 கோடி ரூபாய் முத்திரை கட்டணம் செலுத்தியதாகவும், ஆவணங்கள் ஜனவரி 21, 2022 அன்று பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ராஜ் குந்த்ரா, ஷில்பா ஷெட்டிக்கு மாற்றிய சொத்துகளின் மொத்த பரப்பளவு சுமார் 5,996 சதுர அடி. தற்போதைய சந்தை மதிப்பில் ஒரு சதுர அடிக்கு ரூ. 65,000 எனக் குறிப்பிடப்பட்டு மதிப்பிடப்பட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன.
- வைஷ்ணவி பாலு