Election bannerElection banner
Published:Updated:

ஒரு பெண்ணை கடத்துறாங்க... ஆனா, அது பெண் அல்ல பேய்?! #Roohi விமர்சனம்

கார்த்தி
roohi
roohi

ராஜ்குமாருக்கு ஜான்வியைப் பார்த்ததும் காதல் என்றால், வருணுக்கோ ஜான்வியின் பேய் வெர்ஷனைப் பார்த்ததும் காதல்!

இரண்டு கிட்னாப்பர்கள், ஒரு பெண்ணைக் கடத்துகிறார்கள். அப்படிக் கடத்திய பெண் ஒரு பேய் என்றால்..? கடத்தியவர்கள் சந்திக்கும் பிரச்னைகளும், அந்தப் பெண்ணை மீட்க அவர்கள் நடத்தும் போராட்டமும்தான் 'ரூஹி' திரைப்படம்.

room
room

ஊரில் இருக்கும் பெண்களைக் கடத்தி, அவர்களை திருமணத்துக்கு நிர்ப்பந்திக்கிறது ஒரு ரௌடி கும்பல். அந்தக் கும்பலை அடித்து நொறுக்கி தட்டிக் கேட்பவர்தான் ஹீரோவா என கேட்கிறீர்களா அதுதான் இல்லை. அந்த ரௌடியிடம் வேலை பார்க்கிறார்கள் ஹீரோ ராஜ்குமார் ராவும், அவரின் நண்பர் வருண் ஷர்மாவும். அடுத்த அசைன்மென்ட்டாக அவர்கள் ஜான்வி கபூரைக் கடத்த, அப்படிக் கடத்தப்பட்ட பெண் நிஜத்தில் பேய் எனத் தெரிந்தால்... அடுத்து நடக்கும் திக் திக் ஹ்யூமர்தான் திரைப்படம். இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு பாலிவுட் இப்படிக் கடத்திக்கொண்டு சென்று பெண்களை திருமணம் செய்யும் முறையை காமெடி என எடுப்பார்கள் என தெரியவில்லை. திருந்துங்கள் ப்ளீஸ்.

திருமணத்துக்கு முந்தைய இரவில் மணமகன் தூங்கினால், அவளுக்குப் பேய் பிடித்துவிடும் என்னும் நாட்டுப்புற கதைதான் ஒன்லைன். இதேபோன்ற பேய்க்கதையை அடிப்படையாக வைத்து ராஜ்குமார் ராவ் நடிப்பில் 2018-ல் வெளியானது 'ஸ்த்ரீ' படம். அவருக்குக் கிட்டத்தட்ட இதேபோன்ற ஒரு கதாபாத்திரம்தான் இதிலும் என்றாலும், இன்னும் செம லோக்கலாய் நடித்து அசத்தியிருக்கிறார். கிராமத்து நடையில் ஆங்கிலம் முதல் ஒவ்வொரு மேனரிஸமும் பக்கா!

Roohi
Roohi

ரெட்டைக் கதிரே தோஸ்தாக வருண் ஷர்மா. ராஜ்குமாருக்கு ஜான்வியைப் பார்த்ததும் காதல் என்றால், வருணுக்கோ ஜான்வியின் பேய் வெர்ஷனைப் பார்த்ததும் காதல். 'காதல் பேய்' பிடித்தாடும் ஒவ்வொரு தருணத்திலும், வருணும் வருணுக்கான பழைய ரொமான்ஸ் பாடல்களும் செம பொருத்தம். வித்தியாச விநோத இந்தியாவை காட்சிப்படுத்தும் வெள்ளைக்காரராக அலெக்ஸ் ஓ நெய்ல் (அட, நம்ம 'மதராசப்பட்டினம்' வில்லன்). பேயாகவும், அப்பாவி பெண்ணாகவும் ஜான்வி கபூர். சிறப்பாக நடித்திருக்கிறார். இந்தியாவில் ஒரே சமயத்தில் பல்வேறு நூற்றாண்டுகளில் வாழும் மனிதர்களை நாம் காண முடியும் என அலெக்ஸ் அடிக்கும் கவுன்ட்டர்தான் படத்தின் மூடநம்பிக்கைகளுக்கான பதில்.

'இது டைட்டானிக் ரோஸ் இல்லப்ப எமிலி ரோஸ்' போன்ற ரொம்பவே அந்நியமான ஒன்லைனர்களையும் ராஜ்குமாரின் மேனரிசம் கரையேற்றிவிடுகிறது. எம்மதமும் சம்மதமில்லை என எல்லா மதத்தையும் பேய் வழி நக்கல் அடித்திருப்பதும் செம! ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் காட்டுக்குள் சுற்றிக்கொண்டே இருக்கும் கதாபாத்திரங்களும், திரைக்கதையும் நம்மை மொபைலைப் பார்க்க வைக்கிறது. அதேபோல், பேய் இருக்கோ இல்லையோ பேய் மீதான பயம் பலருக்கும் இருக்கும். ராஜ்குமார் ராவ் தவிர பெரும்பாலான நடிகர்கள், 'அப்புறம் பேயி, நைட்டு படத்துக்குப் போலாமா' டோனில் டீல் செய்வது ஒரு கட்டத்துக்கு மேல் கடுப்பேற்றுகிறது.

Roohi
Roohi

எங்கேயோ கேட்டது போல் இருந்தாலும், சச்சின் ~ ஜிகார் இசையில் வரும் 'கிஸ்டான்' பாடல் அட்டகாச மெலடி. திருமண பந்தம், மூடநம்பிக்கைகள், ஆண் சார்ந்து பெண் இருப்பது போன்ற கதை முழுக்க வரும் பழைமைவாத குவியல்களுக்கு எதிராக படம் சொல்லும் க்ளைமேக்ஸ் அல்ட்டி! அப்படி ஒரு போல்டான க்ளைமாக்ஸுக்காக மட்டும் இந்தப் படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பாராட்டலாம். செம ஜாலியான ஒரு பேய் காமெடி படத்துக்குச் செல்லலாம் என்றால், 'ரூஹி'க்குத் தாராளமாக 'ஹாய்' சொல்லலாம்.

படத்தின் டிரெய்லர்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு