சமீபத்தில் பாலிவுட் நடிகை ஆலியா பட், தனது வீட்டிற்குள் இருந்தபோது அனுமதியில்லாமல் பக்கத்து வீட்டிலிருந்து சில நபர்கள் அவரை புகைப்படம் எடுத்து அதனைப் பத்திரிகைகளிலும் வெளியிட்டு சர்ச்சையாக்கியிருந்தனர். இது குறித்து ஆலியா பட் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்தச் சம்பவம் பற்றி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஆலியா, "நான் மதிய நேரத்தில் எனது வீட்டில் அமர்ந்திருந்தேன். அப்போது யாரோ என்னைப் பார்த்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. உடனே நான் நிமிர்ந்து பார்க்கும்போது எனது வீட்டின் பக்கத்துக் கட்டடத்தின் மாடியில் இரண்டு நபர்கள் கேமராவை வைத்துக்கொண்டு என்னைப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். இதுபோன்ற செயல்கள் ஒருவரின் தனியுரிமையை ஆக்கிரமிக்கின்றன. எப்போதுமே உங்களால் கடக்க முடியாத லிமிட் என்ற ஒன்று உள்ளது. ஆனால் இன்று எல்லா லிமிட்டுகளும் எளிதாகக் கடக்கப்படுகின்றன" என்று கூறியிருந்தார். இதையடுத்து இந்த விவகாரம் பாலிவுட்டில் சர்ச்சையைக் கிளப்பியது. பாலிவுட் பிரபலங்கள் பலரும் புகைப்படக் கலைஞர்களின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ஆலியா பட்டின் கணவரான நடிகர் ரன்பீர் கபூர் இந்தச் சம்பவம் குறித்து நேர்காணல் ஒன்றில் விமர்சித்துப் பேசியுள்ளார். இது பற்றிப் பேசிய அவர், "இது தனியுரிமை மீதான தாக்குதல் என்று கருதுகிறேன். என் வீட்டிற்குள் என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம். அது என்னுடைய வீடு. என் வீட்டிற்குள் புகைப்படம் எடுப்பதற்கு உங்களுக்கு அனுமதியில்லை. இது முற்றிலும் அராஜகமான செயல். இதுபற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை. இந்த விவகாரத்தை நாங்கள் சட்ட ரீதியாக அணுகி, தகுந்த நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம்" என்றார்.

மேலும், பிரபலங்களைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக் கலைஞர்கள் பற்றிப் பேசிய ரன்பீர், "நாங்கள் பிரபலங்களைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக் கலைஞர்களை மதிக்கிறோம். அவர்கள் எங்கள் திரையுலக வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கிறார்கள். அவர்களுக்கும் எங்களுக்கும் ஒரு நெருங்கிய உறவு இருக்கிறது. அவர்கள் எங்களுடன் வேலை செய்கிறார்கள், நாங்கள் அவர்களுடன் வேலை செய்கிறோம். யாரோ ஒருவர் தவறாக நடந்து கொள்வது ஒட்டுமொத்த புகைப்படக் கலைஞர்களின் பெயரையும் கெடுத்துவிடுகிறது" என்று ஆதங்கத்துடன் கூறினார்.