ஆலியா பட் தனியாக அவரது அறையில் இருக்கும் போது, பக்கத்துக் கட்டட மொட்டை மாடியில் இருந்த இரண்டு ஆண்கள் அவரைப் புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதனைக் கண்டு ஆத்திரமடைந்த ஆலியா, `ஒருவரின் தனியுரிமை மீறப்படுகிறது' என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு ஆலியா பட்டிற்கு இந்தி திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
இப்போது ஆலியாவின் கணவரும் நடிகருமான ரன்பீர் கபூர் தனியார் சேனல் ஒன்றில் கலந்து கொண்ட நேர்காணலில், அதிகாரபூர்வமாக இந்த நிகழ்வை எதிர்கொள்ள இருப்பதாகக் கூறியுள்ளார்.
அவர் பேசுகையில், ``ஆலியா பட்டை படமெடுப்பது, அவரது தனியுரிமை மீதான படையெடுப்பு. என்னுடைய வீட்டிற்குள் நீங்கள் புகைப்படம் எடுக்கக்கூடாது. என்னுடைய வீட்டினுள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், அது என்னுடைய வீடு. முற்றிலும் எந்தவொரு அனுமதியுமின்றி புகைப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது.

இதைக் கையாள்வதற்கான சரியான சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். நான் அதைப் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. ஆனால் அது மிகவும் அசிங்கமானது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.