சுஷாந்த் சிங்... ஒரு பெருங்கனவை நோக்கிய பயணம் பாதியில் முடிந்தது ஏன்?! #SushanthDay

"நான் தோத்துப்போனா எல்லாரும் பரவால்லைனு சொல்றாங்க. என்னோட வெற்றியை என்னால முழுசா அனுபவிக்க முடியல. எதோ ஒரு இன்கம்ப்ளீட் ஃபீல்..."
பாலிவுட் நடிகரும், எம்.எஸ்.தோனி பயபோக்கில் தோனியாக வாழ்ந்தவருமான சுஷாந்த் சிங்கின் பிறந்தநாள் இன்று. கடந்த ஆண்டு ஜூன் மாதம் நிகழ்ந்த சுஷாந்த் சிங்கின் மரணம், இந்தியா முழுக்கவே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாலிவுட்டில் நெப்போட்டிஸம், காதல் பிரச்னை, போதை மருந்து எனப் பலவிவகாரங்கள் பேசப்பட்டு இன்றுவரை அவரது மரணம் சந்தேகத்துக்குரியதாகவே இருக்கிறது.
`M.S. Dhoni: The Untold Story' படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் பேசும் வசனங்கள், இளைஞர்களுக்கான ஊக்க மாத்திரைகள். இந்தப் படத்தில், "என்னுடைய வாழ்க்கை இப்படியே போய்டுமோன்னு பயமா இருக்கு" என்று சொல்வார் சுஷாந்த். உண்மையில் இந்த வசனம், சுஷாந்த்தின் வாழ்க்கையிலும் நிஜமாகவே நடந்ததுதான் சோகம்.
பீகாரில் பிறந்து வளர்ந்த சுஷாந்த், டெல்லியில் இன்ஜினீயரிங் படித்தவர். படிப்பில் அதிக ஆர்வம் கொண்டவர், எழுதிய அனைத்து நுழைவுத் தேர்வுகளிலும் தேர்ச்சிபெற்று அசத்தியிருக்கிறார். டெல்லியில் படிக்கும்போது, நடனத்தின் மேல் ஆர்வம் வந்து, நடனக்குழுவில் இணைந்து, அதன்பின் நாடகம், டி.வி, சினிமா எனப் படிப்படியாக பாலிவுட்டில் முன்னேறி வந்திருக்கிறார்.
குஜராத் நிலநடுக்கம், குஜராத் இனப்படுகொலைகளை மையமாகக் கொண்டு வெளியான 'Kai po che' படம்தான் சுஷாந்தின் முதல் படம். மொத்தம் 12 படங்களில் நடித்திருக்கிறார். இளம் நடிகராக இருந்தும் ரொமான்ட்டிக் படங்கள் நடிப்பதில் பெரிய ஆர்வம் சுஷாந்த்துக்கு இல்லை. தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு படமும் வெவ்வேறு கதைக்களங்களைக் கொண்டவையாக இருக்க வேண்டும் என்பதுதான் அவரது கொள்கையாக இருந்திருக்கிறது.

ஆமீர் கானின் `பிகே' படத்தில் பாகிஸ்தானியாக மிகச் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் சுஷாந்த். லீட் ரோல் என்பதல்ல, அந்தக் கதையில் தனக்கான முக்கியத்துவம் இருந்தால், அது சிறியது பெரியது எனப் பார்க்காமல் நடிப்பதுதான் சுஷாந்த்தின் வழக்கம்.
சுஷாந்த்தின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் `M.S. Dhoni: The Untold Story'. இந்தப் படத்துக்காக, தோனியாக நடிப்பதற்காக கிட்டத்தட்ட தோனியாகவே மாறினார் சுஷாந்த். தோனியுடன் அதிக நேரம் செலவிட்டு, தோனியின் மேனரிஸங்கள் கற்று, அவரின் கிரிக்கெட் வீடியோக்கள் பார்த்து, அதன்படியே பேட்டிங் ஸ்டைலைப் பிடித்து என இந்தப் படத்துக்காக சுஷாந்த்தின் உழைப்பு மிகப்பெரியது. அந்த உழைப்பும், மெனக்கெடலும் அப்படியே படத்தில் தெரியும். இந்தப் படம் இந்தியா முழுமைக்குமான நடிகராக சுஷாந்த்தை மாற்றியது.
தோல்வி என்பது தவறல்ல... தோற்ற பின் மீண்டெழ வேண்டும் என்பதை சொல்லித்தர வேண்டும் என்று சொன்ன படம்தான் இவரின் `Chhichhore'. படத்தில் தற்கொலைக்குத் தூண்டப்படும் மகனுக்கு வாழ்க்கையைப் பற்றிய புரிதலையும், வாழ்வின் மீதான நம்பிக்கையையும் ஏற்படுத்தும் தந்தையாக நடித்திருப்பார் சுஷாந்த்.
இவரின் `டிரைவ்' 2018-ல் வெளியாகியிருக்க வேண்டிய படம், கிரியேட்டிவ் டீமுக்குள் பிரச்னைகள் இருந்ததால் ரிலீஸ் ஆகவில்லை. படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கரண் ஜோஹருக்கு படத்தின் அவுட்புட் பிடிக்காமல்போக, பல காட்சிகள் மாற்றப்பட்டன. அதன்பிறகு 2019-ல் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு அதுவும் நடக்காமல், கடந்த ஆண்டு நவம்பரில் நேரடியாக நெட்ஃபிளிக்ஸில் வெளியானது. படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை.

கடைசியாக அவர் நடித்து, அவர் இறப்பிற்குப்பின் ஹாட்ஸ்டாரில் வெளியானப் படம் Dil Bechara. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வாழ்நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் இருவர் காதலில் இணைந்தால் எப்படியிருக்கும் என்பதுதான் 'தில் பெச்சாரா' படத்தின் கதை.
சுஷாந்த்தின் படங்கள் பலவும் வெற்றி - தோல்வி - ஏமாற்றம் - இறப்பு என வாழ்க்கையின் மீதான மனிதனின் போராட்டத்தைப் பற்றிப் பேசியவைதான். சுஷாந்த்தின் படங்களில் எல்லாம் இறப்பு குறித்தும், தோல்வி குறித்தும் தத்துவார்த்தமாக எதாவது பேசப்பட்டிருக்கும். இயற்கையாகவே சுஷாந்துக்கு அப்படிப்பட்ட படங்கள் அமைந்திருந்தது பேராச்சர்யம்தான். கடைசிப்படமான 'தில் பெச்சாரா'விலும் மரண வலியோடு புன்னகைக்கும் 'மேனி' (Manny) என்ற கேன்சர் நோயாளியாக வாழ்ந்திருக்கிறார் சுஷாந்த்.

''நான் தோத்துப்போனா எல்லாரும் பரவால்லைனு சொல்றாங்க. என்னோட வெற்றியை என்னால முழுசா அனுபவிக்க முடியல. எதோ ஒரு இன்கம்ப்ளீட் ஃபீல்'' என 'தில் பெச்சரா'வில் சுஷாந்த் பேசும் வசனம் மனதை உருக்கும். இப்படத்தில் தன்னை ஒரு சூப்பர் ஸ்டார் ரசிகனாக வெளிப்படுத்திக்கொள்வார் சுஷாந்த். சூப்பர் ஸ்டாரின் சிகரெட் பிடிக்கும் ஸ்டைல், அவரை போன்றே நடித்து ஷார்ட் ஃபிலிம் எடுக்கும் காட்சிகள் என படம் முழுவதும் சூப்பர் ஸ்டாராக வாழத் துடித்திருப்பார்.
வாழ்வின் மீதான நம்பிக்கையைத் தன் படங்களின் வழியே விதைத்த சுஷாந்த் சிங் ராஜ்புத், சொந்த வாழ்வில் சில ஏமாற்றங்களைத் தாங்கமுடியாமல் விழுந்ததுதான் அதிர்ச்சி. ஆனாலும், தன்னுடைய சினிமாக்களின் வழியே எப்போதும் வாழ்வார் சுஷாந்த் சிங்!