"உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மிகவும் பயப்படுவது எதற்காக?"
"மரணம் என்றே நினைக்கிறேன். ஏனென்றால், நான் ஒரு மூன்று மணிநேரம் என்னை அறியாமல், என்னைப் பற்றிய நினைவுகள் ஏதுமின்றி உறங்குகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த 'என்னைப் பற்றிய நினைவுகள் அற்ற நிலை' என்னும் எண்ணமே எனக்கு அச்சத்தைக் கொடுக்கிறது. இறப்பிலும் இதுதானே நடக்கும்?"
ஒரு பேட்டியில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் உதிர்த்த வார்த்தைகள் இவை.
ஒரு பிரபலத்தின் பிறந்த நாளுக்கான வாழ்த்தை, இறப்பு குறித்துப் பேசி தொடங்குவதுபோல சோகம் இருக்கவே முடியாது. 34 வயதில் இந்தியத் திரையுலகின் முக்கியக் கனவுலகமான பாலிவுட்டில் முன்னணி நட்சத்திரமாகச் சுழன்று கொண்டிருந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தைத் தேர்ந்தெடுத்தது காலத்துக்கும் ஆறாத வடு. அவரின் இறப்புக்கான காரணம் இதுவரை புலப்படவே இல்லை என்றாலும் டிரக் மாஃபியா, நெப்போடிஸம் தொடங்கி பலதரப்பட்ட சர்ச்சைகளை அது கிளப்பிவிட்டது.

ஆனால், தற்கொலையைத் தாண்டி, அவரின் வாழ்க்கைப் பயணத்தை உற்று நோக்கினால் அது போராடும் இளைஞர்கள் பலருக்கும் மாபெரும் உத்வேகத்தைக் கொடுக்க வல்லது. வாரிசுகளின் ஆதிக்கம் நிறைந்த பாலிவுட்டில் எந்தவித பின்புலமும் இல்லாமல் உள்ளே வந்து, முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் பெரிய பட்ஜெட் படங்களின் முதல் சாய்ஸாக ஒரு நடிகர் மாறுவது என்பது சாதாரண விஷயமில்லை.
இளமைக் காலம் முதலே துணிச்சலான முடிவுகளுக்குச் சொந்தக்காரர் சுஷாந்த். டெல்லியில் பொறியியல் படித்துக்கொண்டிருந்தவர், தனக்கான வெளி இது இல்லை என்பதை உணர்ந்து மும்பையின் கூத்துப் பட்டறைகளில் தன்னை இணைத்துக்கொண்டார். 2008-ம் ஆண்டு டிவி உலகம் சாக்லெட் பாயான அந்த இளைஞனை அரவணைத்துக் கொண்டது. குறிப்பிடத்தகுந்த சில முன்னணி இந்தி டிவி சீரியல்களுக்கு அவர்தான் நாயகன். ஆனால், அந்த ஓட்டமும் சுஷாந்தைத் திருப்திப்படுத்தவில்லை.
"என் கதாபாத்திரம் ஒவ்வொரு நாளும் என்ன செய்யும் என்பதை என்னால் முன்னரே கணிக்க முடிந்தது. அதில் எந்தவித ஆச்சர்யங்களும் இல்லை. நான் ஒரே விஷயத்தை எல்லா நாளும் தொடர்ந்து செய்வதாகவே உணர்ந்தேன். ஓடாமல் ஒரே இடத்தில் தேங்கி நிற்பது கவலையைக் கொடுத்தது. அதனால் டிவியை விட்டு வெளியேறினேன்."என்று ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார் சுஷாந்த்.

அவர் நினைத்திருந்தால் இன்னும் பல சீரியல்களில் நாயகனாக, டிவியில் அதிகம் சம்பளம் வாங்கும் மோஸ்ட் வாண்டட் நடிகனாக உலா வந்திருக்க முடியும். ஆனால் அவரின் தேடல் ஒரு நடிகனாக உயர்வதைவிட, ஒரு கலைஞனாக வளர்வதாகவே இருந்தது. பெரிய திரையான சினிமாவின் பக்கம் தன் முயற்சிகளைத் தொடங்கினார். டிவி நடிகர் ஒருவர் திரையுலகுக்கு வந்து வெற்றிகரமாகத் தொடர்ந்து நடிப்பது அத்தனை சுலபமான விஷயமில்லை. ஆனால், மக்கள் அவரை ஏற்றுக்கொண்டார்கள். அதற்கு முக்கியமான காரணம் சுஷாந்த் சிங் தேர்ந்தெடுத்த கதைகள்.
கிடைத்த படத்தில் எல்லாம் நடித்து காசு பார்க்காமல், தான் ஆத்மார்த்தமாக உணர்ந்த கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்தார். சேத்தன் பகத்தின் 'Three Mistakes Of My Life' என்ற நாவலை அடிப்படையாக வைத்து உருவான 'Kai Po Che!' படம்தான் சுஷாந்தின் விசிட்டிங் கார்டு. மூன்று நண்பர்களின் கதையான இதில் கிரிக்கெட், காதல், துரோகம், அரசியல் என எல்லாமே கலந்திருக்கும். சுஷாந்தின் கதாபாத்திரமான இஷான் பட் நம் பால்யகால நண்பன் யாரோ ஒருவனை நினைவுபடுத்தி நெகிழச் செய்யும். பின்னர் 'Shuddh Desi Romance' என்ற காதல் படத்தில் சாக்லெட் பாயாக வந்தவர், ஆமீர் கானின் 'PK' படத்தில் பாகிஸ்தானிய இளைஞனாகத் தோன்றி கண்களைக் குளமாக்கினார்.
பாலிவுட்டின் முன்னணி இயக்குநரான திபாகர் பேனர்ஜி, வங்காள இலக்கியத்தின் மிக முக்கியப் படைப்பான 'பியோம்கேஷ் பக்ஷி' என்ற பாத்திரத்தைத் திரைக்குக் கொண்டு வர நினைத்தார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்தது சுஷாந்த்தைத்தான். ஆங்கிலத்தில் எப்படி ஷெர்லாக் ஹோம்ஸோ, தமிழில் எப்படித் 'துப்பறியும் சாம்பு'வோ அதேபோல்தான் வங்காளத்தில் இந்த 'பியோம்கேஷ் பக்ஷி'. அந்தப் பாத்திரத்தை அச்சு அசலாக, அதற்கான முதிர்ச்சியுடன் திரையில் கொண்டு வந்தார் சுஷாந்த் சிங்.

இதுவரை சுஷாந்த் அடித்தது எல்லாம் வெறும் பவுண்டரி மட்டுமே. அடுத்து அவர் அடித்த மாபெரும் சிக்ஸர்தான் அவர் எத்தகையதொரு நடிகர் என்பதைக் காலத்துக்கும் சொல்லும். ஆம், தோனியின் பயோபிக்கான 'M.S.Dhoni: The Untold Story'-இல் சுஷாந்த் தொட்டது நடிப்பின் மாபெரும் உச்சம். உடல்மொழி, வசன உச்சரிப்புத் தொடங்கி எண்ணவோட்டங்கள் வரை தோனியாகத் தன்னை நினைத்துக்கொண்டார், தோனியாகவே வந்து நின்றார்.
ரயில்நிலைய பெஞ்சில் டிடிஆராக உட்கார்ந்துகொண்டு, "வாழ்க்கை இப்படியே போயிடுமா சார்?" என்று தன் உயர் அதிகாரியிடம் அவர் கேட்கும்போது பல போராடும் இளைஞர்கள், தங்களின் பிரதிபலிப்பாகத்தான் சுஷாந்ததைத் திரையில் கண்டனர். சுஷாந்த் சிங் இறந்தபோது தோனியின் ரசிகர்களே கதறி அழுததும், ஒரு வெறுமையை உணர்ந்ததும் அவரின் நடிப்புக்கான விருதுதான். "ஏன் இப்படியொரு முடிவு சுஷாந்த்?" என்பதே பலரின் ஆதங்கமாக இருந்தது, இப்போதும் இருக்கிறது.
தோனி பயோபிக்குக்குப் பிறகு சாம்பல் பள்ளத்தாக்கின் கொள்ளையர்களின் வாழ்வைப் பேசும் முக்கிய அரசியல் படமான 'சோன்சிரியா'வில் (Sonchiriya) நடித்தார் சுஷாந்த். படத்தில் சீனியரான மனோஜ் பாஜ்பாய் இருந்தும், சுஷாந்தின் நடிப்பு பல விமர்சகர்களைக் கவர்ந்தது. கல்லூரி வாழ்க்கையை நினைவுகூரும் 'Chhichhore' படத்தில் நாயகனாக நடித்த சுஷாந்த் சிங் அதில் வயதான அப்பா, துடிப்பான கல்லூரி மாணவன் என இரண்டு பரிமாணத்தில் தோன்றியிருப்பார். இதில் சோக முரண் என்னவென்றால் அந்தப் படமே தற்கொலை கூடாது என்று அறிவுறுத்தும் கதையம்சம் கொண்டது என்பதுதான்.

சுஷாந்த் சிங்கின் கடைசி படமான 'தில் பெச்சாரா' அவரின் இறப்புக்குப் பிறகு ஓடிடி-யில் வெளியானது. ஆங்கிலப் படமான 'The Fault In Our Stars' என்ற படத்தின் ரீமேக்கான இதில் ரஜினி ரசிகராக நடித்திருப்பார் சுஷாந்த். இதில் நாயகன், நாயகி இருவருமே குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டு மரணத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பார்கள். ஆனாலும், 'வாழ்க்கை வாழ்வதற்கே' என அர்த்தம் பொதிந்த, மகிழ்ச்சியான, காதலில் திளைக்கும் வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். படத்தின் இறுதியில் சுஷாந்தின் கதாபாத்திரம் இறக்கும்போது நம்மையும் அறியாமல் அதை அவரின் நிஜ வாழ்க்கையோடு பொருத்திப் பார்த்துக் கொள்வோம். அது அவரின் இழப்பின் வலியை மேலும் அதிகரிக்கச் செய்தது.
ஒரு நடிகர் என்பதைத் தாண்டி, சுஷாந்தின் இழப்புக்குப் பலரும் கசிந்துருகக் காரணம், சுஷாந்த் அவர்களுக்குத் திரையில் காட்டியது தான் நடித்த படத்தின் கதாபாத்திரத்தை மட்டுமல்ல. பல இளைஞர்களின் அன்றாட வாழ்க்கைப் பிரதிபலிப்பை! 'The Boy Next Door' என்ற ஆங்கில சொல்லாடலுக்குப் பொருந்திப் போகிற ஒரு நடிகர் சுஷாந்த். சிறு வயதில் நம் ஊரில் நாம் அண்ணாந்து பார்த்து வியந்த கிரிக்கெட் விளையாடும் ஏதோ ஒரு அண்ணனை அவரின் முகமும், நடிப்பும் நமக்கு நிச்சயம் நினைவூட்டும். குறுகிய காலமே வாழ்ந்தாலும் சுஷாந்த் ஏற்படுத்திய தாக்கம் அத்தகையது.
21 ஜனவரி - அவரின் பிறந்தநாள் இன்று!

"நமது பிறப்பையோ, இறப்பையோ நம்மால் தீர்மானிக்க முடியாது. ஆனால், எப்படி வாழவேண்டும் என்பதை நாம் தீர்மானிக்கலாம்!"- சுஷாந்த் சிங்கின் கதாபாத்திரம் 'தில் பெச்சாரா' படத்தில் சொல்லும் வசனம் இது.
இதைப் படிக்கும்போதோ கேட்கும்போதோ ஒன்று மட்டுமே நமக்குத் தோன்றுகிறது. உங்களின் இந்த வார்த்தைகளை நீங்களே கேட்டிருக்கலாமே சுஷாந்த்?