கோவிட் பெருந்தொற்றினால் நாட்டின் எல்லா தரப்பு மக்களின் வாழ்வாதாரங்களும், தொழில்களும் கடுமையாகப் பாதிப்படைந்தன. இதில் சினிமா துறையும் கடுமையான பாதிப்பைச் சந்தித்து.
கோவிட் பெருந்தொற்றின் கட்டுப்பாடுகளால் திரையரங்கு மூடப்பட்டு பெரும்பாலான திரைப்படங்கள் ஓ.டி.டி-யில் வெளியாகின. ஓ.டி.டி தளங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. பின்னர், கோவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு திரையரங்குகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும், ஓ.டி.டி-யில் படம் பார்த்துப் பழகிய மக்கள் பிரபல நட்சத்திரங்களின் படங்களை மட்டும் திரையரங்கிற்குச் சென்று பார்க்கலாம், மற்ற படங்களை ஓ.டி.டி-யில் பார்த்தால் போதும் எனும் மனநிலைக்கு வந்துவிட்டனர்.

இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. இது குறித்து ஆய்வு செய்துள்ள 'Ormax Media' நிறுவனம் 'Sizing The Cinema' என்ற தலைப்பில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் நகர் மற்றும் கிராமப்புறம் என சுமார் 15,000 சினிமா பார்வையாளர்களிடம் பாலினம், வயது, இடம் மற்றும் மொழியின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வின்படி ஜனவரி 2020ம் ஆண்டிற்கு முன் 14.6 கோடியாக இருந்த திரையரங்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை, தற்போது 12.2 கோடியாகக் குறைந்துள்ளது. அதாவது சுமார் 2.4 கோடி எனத் திரையரங்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இதுதவிர, 5.8 கோடி எண்ணிக்கை பேர் இந்தி மொழிப் படங்களை விரும்பிப் பார்த்திருக்கின்றனர். இது முந்தைய நிலவரத்தைவிடச் சற்றே குறைவான எண்ணிக்கை என்கிறார்கள். இதற்கு மிக முக்கிய காரணம், பாலிவுட் அடுத்தடுத்த சந்தித்த பெரிய தோல்விகள்தான் என்கின்றனர்.

ஆனால், தமிழ், தெலுங்கைப் பொறுத்தவரை எந்தவொரு பெரும் சரிவும் இல்லாமல் 2.8 கோடி பேர் என்ற எண்ணிக்கையை அவை தொட்டுள்ளன. அதே சமயம், தென்னிந்தியப் படங்கள் இந்திய அளவில் வரவேற்பைப் பெற்றதால், அந்த எண்ணிக்கையில் எந்தவித சிக்கலும் ஏற்படவில்லை. அதிலும் குறிப்பாக, கன்னட மொழியின் திரையரங்கு பார்வையாளர்கள் எண்ணிக்கை முன்பு இருந்ததைவிட 25 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது என்று 'Ormax Media' நிறுவனத்தின் இந்த ஆய்வுகள் கூறியுள்ளன.