பிரபல பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டி, சென்னை எக்ஸ்பிரஸ், தில்வாலே, சிம்பா, சூர்யவன்ஷி, போல் பச்சன் போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியிருக்கிறார். தற்போது அவரது இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'சர்க்கஸ்' (Cirkus). இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட ரோஹித் ஷெட்டி பாலிவுட் திரையுலகம் குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
பாலிவுட் திரையுலகம் குறித்து பேசிய அவர், "நாங்கள் பலமாகத்தான் இருக்கிறோம். ஆனால் எங்களது திறமைகளின் சக்தியை நாங்கள் புரிந்துக்கொள்ளவில்லை. பாலிவுட்டைப் பொறுத்தவரை பிரச்னை என்னவென்றால், இங்கு ஒற்றுமையில்லை. மக்கள் நம்மை நேசிக்கிறார்கள்.

நாம் நினைத்தால் நிறைய மாற்றங்களை பாலிவுட்டில் கொண்டுவர முடியும். ஆனால் நாம் ஒருபோதும் ஒன்றுபடுவதில்லை. 1500 கோடி மக்களில் 10 கோடி மக்களை கூட நம்மால் சென்றடைய முடிவதில்லை. தியேட்டர் வியாபாரத்தை எப்படி அதிகரிப்பது, அரசாங்கத்துடன் இணைந்து எப்படிப் பணியாற்றுவது போன்ற சில விஷயங்கள் குறித்து நாம் சிந்திப்பதில்லை. கலாச்சார ஒற்றுமை என்பதும் இங்கு இல்லை" என்று பாலிவுட் திரையுலகம் குறித்து தெரிவித்திருக்கிறார்.