Published:Updated:

பேய் பிடிக்கப்போய் காமெடியையும் சேர்த்தே பிடிக்கும் கதை... Bhoot Police படம் எப்படி?

Bhoot Police
News
Bhoot Police

பேய் விரட்டும் சாமியார்களாக ஊரை ஏமாற்றும் இரண்டு சகோதரர்களின் பாதையில் நிஜமாகவே ஒரு பேய் குறுக்கே வந்தால்..? சயிஃப் அலிகான், அர்ஜுன் கபூர், யாமி கௌதம், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் நடித்திருக்கும் 'Bhoot Police' படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கிறது.

விபூதி வைத்யா (சயிஃப் அலிகான்), சிரௌஞ்சி வைத்யா (அர்ஜுன் கபூர்) சகோதரர்கள் தங்களின் வேனில் பயணம் செய்தவாறே ஊர் ஊராகச் சென்று பேய் ஓட்டுகிறார்கள். அதாவது அப்படி நடித்து ஊரை ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறார்கள். இவர்களின் பாதையில் நிஜ பேய் ஒன்றை ஓட்டும் அசைன்மென்ட்டுடன் குறுக்கிடுகிறார் மாயா (யாமி கௌதம்). தரம்சாலாவில் இருக்கும் அவர்கள் கிராமத்தில் உலவும் 'கிச்கண்டி' எனும் பேயை இந்தச் சகோதரர்கள் பிடித்தார்களா என்பதே கதை.
Bhoot Police
Bhoot Police

மூத்த சகோதரன் விபூதியாக சர்ப்ரைஸ் சயிஃப். படத்தின் காமெடி காட்சிகளுக்குப் பொறுப்பேற்று கதையைச் சுவாரஸ்யமாக நகர்த்தியிருக்கிறார். பேய் ஓட்டுவதை நம்ப வைக்க டிரிக்ஸ் செய்வது, பேய் போனவுடன் அதன் ஆன்மா ஜூஸ் என பானையில் கொக்கக் கோலாவைப் பிடிப்பது, பேய் ஓட்டும் ஸ்தலத்தில் உள்ளாடையுடன் ஓடுவது, ஓட்டை வேனில் உலகமே சுற்றும் வாலிபனைப் போல ஃபீல் செய்வது, பாசக்கார அண்ணனாக அடாவடித்தனம் செய்வது என ஒரு பெரிய ரவுண்டே அடித்திருக்கிறார். ஆங்காங்கே ஓவர் ஆக்டிங் ஃபீல் கொடுத்தாலும் படமே சீரியஸாக எங்கேயும் நகரவில்லை எனும்போது அது தனியாக உறுத்தவில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நடிக்கவே தெரியாத நெப்போட்டிஸ வாரிசு என தன் ஒவ்வொரு பட ரிலீஸின்போதும் ரசிகர்களால் வசைபாடப்படும் அர்ஜுன் கபூருக்கு தன் நடிப்புத் திறனைப் பறைசாற்ற உதவும் மிக முக்கியமான வேடம். இலக்கில் பாதி கிணற்றைத் தாண்டியிருக்கிறார். அண்ணன் சயிஃப்புடன் முறுக்கிக்கொண்டு திரியும்போது ஈர்க்கிறார் என்றாலும், பேயோட்டும் சீரியஸான காட்சிகளில் கூட தேமேவென நிற்கிறார். கத்துவது, ஓடுவது மட்டுமே நடிப்பில்லை ப்ரோ!

யாமி கௌதம், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் என இரு நாயகிகள். யாமி கௌதம் பாத்திரம் படு சீரியஸாக சுற்ற, ஜாக்குலின் பாத்திரம் அதற்கு நேர் எதிர். காமெடிக்கு என டீ எஸ்டேட் தொழிலாளர்கள் குடும்பம், எஸ்டேட் மேனேஜர் எனச் சில பாத்திரங்கள். நிறைய இடங்களில் சிரிக்கவே வைத்திருக்கிறார்கள். குறிப்பாக இன்ஸ்பெக்டர் செடிலாலாக வரும் ஜாவேத் ஜஃப்ரி கிச்சு கிச்சு மூட்டுகிறார்.

Bhoot Police
Bhoot Police
நேபாளிய நம்பிக்கையான 'கிச்கண்டி' எனும் பேயைப் பாலிவுட்டுக்கு இறக்குமதி செய்திருக்கிறார்கள். பேய் குறித்த வர்ணனையும், அதன் பயமுறுத்தும் நடவடிக்கைகளும் சுவாரஸ்யத்தைக் கிளப்பியிருக்கின்றன. ஆனால் பேயின் பிளாஷ்பேக் அத்தனை அழுத்தமானதாக மனதில் நிற்கவில்லை. சென்டிமென்ட் தூக்கல் என்றாலும், அதை சில நொடிகளில் கடந்துவிடுகிறோம்.

ட்விஸ்ட் எனச் சிலவற்றை வைத்திருக்கிறார்கள். அவற்றையும் நாம் அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே கணித்துவிடுகிறோம். பேய்ப் படம் என்றாலும் தொடக்கம் முதலே பல இடங்களில் காமெடியில் மட்டுமே கவனம் செலுத்தியிருப்பதால், காமெடி க்ளிக்கான அளவுக்கு ஹாரர் ஃபீல் கிடைக்கவில்லை. இதனாலேயே பேயே வந்து துரத்தினாலும் அதையும் நாம் காமெடியாகவே கடந்துபோகிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜெய கிருஷ்ண கும்மடியின் ஒளிப்பதிவு தரம்சாலா டீ எஸ்டேட்களின் அழகை அள்ளி வந்திருக்கிறது. காமெடி என்றாலும் பெரும்பாலும் இரவு நேரக் காட்சிகள் என்பதால் அந்த அமானுஷ்ய உணர்வு ஆங்காங்கே தொடர்கிறது. அதற்குக் காரணம் படத்தின் ஒளிப்பதிவும், ஒலிப்பதிவும்தான். திரைக்கதை எழுதியவரில் ஒருவரான பூஜா லதா சுர்தியே படத்தொகுப்பும் செய்திருக்கிறார். இரண்டு மணி நேரப் படத்தில் தேவையற்ற காட்சிகள் என எதுவுமில்லை என்பது பலம்.

Bhoot Police
Bhoot Police
அண்ணன், தம்பி, அப்பா எனக் குடும்பமே பேய் ஓட்டுகிறது, அப்பாவின் டைரியில் பேய் ஓட்டுவதற்கான குறிப்புகள் எனக் கதை நீண்டவுடன், 'இது அதுல்ல' என ஹாலிவுட் டிவி சீரிஸான 'சூப்பர் நேச்சுரல்' தொடருக்கு நம் மனம் சென்றுவிடுகிறது.

பழங்கால காருக்குப் பதில் இங்கே வேன், அதேபோல டைரி, ஊர் ஊராக அலையும் அண்ணன், தம்பி, அப்பாவின் பழைய கேஸ் என அதன் ஒன்லைனை அப்படியே பாலிவுட் ஜெராக்ஸ் அடித்திருக்கிறார்கள். நியாயமே இல்லீங்கண்ணா!

Bhoot Police
Bhoot Police

ஆனால், ஹாரர் காமெடி எனும் ஜானர் எப்போதுமே கமர்ஷியலாகக் க்ளிக்காகக்கூடிய ஒன்று என்பதால், இங்கும் அந்த மேஜிக் நடக்கவே செய்கிறது. சீரியஸாகப் போட்டு எதையும் குழப்பாமல், மெசேஜ் சொல்கிறேன் என்றெல்லாம் திசைதிருப்பாமல், பொழுதுபோக்கு காமெடி ஒன்றை மட்டுமே மனதில் வைத்து கேம் ஆடியிருக்கிறார்கள். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.

ஒரு ஜாலி கேலி சினிமா பார்க்க விரும்புபவர்களை இந்த 'பூத் போலீஸ்' நிச்சயம் ஈர்க்கும்.