நடிகர் சிரஞ்சீவி புதிதாக `காட்ஃபாதர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கௌரவ வேடத்தில் நடித்துக்கொடுக்க வேண்டும் என்று சிரஞ்சீவி சல்மான்கானிடம் கேட்டுக்கொண்டார். உடனே மறுகேள்வியே கேட்காமல் நடித்துக்கொடுக்க சம்மதம் தெரிவித்தார் சல்மான் கான். அதன் படப்பிடிப்புக்காக சல்மான் கான் சமீபத்தில் ஐதராபாத் வந்திருந்தார். அவரை சிரஞ்சீவி மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்றார். படப்பிடிப்பின்போது இதில் நடித்துக்கொடுக்க தயாரிப்பாளர் தரப்பில் ரூ.20 கோடி சம்பளம் கொடுக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. சம்பளம் வாங்க முடியாது என்று சல்மான் கான் தெரிவித்திருக்கிறார். கட்டாயம் பணத்தை வாங்கிக்கொள்ள வேண்டும் என்று சிரஞசீவியும், தயாரிப்பு நிர்வாகமும் கேட்டுக்கொண்டது.

இதனால் அதிருப்தியடைந்த சல்மான் கான் பணம் கொடுப்பேன் என்று கட்டாயப்படுத்தினால் இப்படத்தில் இருந்து வெளியேறிவிடுவேன் என்று எச்சரித்தார். சல்மான் கானும் சிரஞசீவியும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள் ஆவர். எனவே இப்படத்தில் நடிக்க தனக்கு சம்பளம் எதுவும் தேவையில்லை என்று சல்மான்கான் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அவரது பதிலைக் கேட்டு படப்பிடிப்பு குழுவினர் வாயடைத்துப்போய் நின்றனர். சல்மான் காட்ஃபாதர் படத்தில் 20 நிமிட காட்சியில் நடிக்கிறார். கடந்த சில நாட்களாக சல்மான் கான் இடம்பெறும் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. லூசிபெர் என்ற மலையாள படத்தை மையமாக வைத்து காட்ஃபாதர் படம் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் நயன்தாரா மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.