நடிகை சமந்தா தெலுங்கு, பாலிவுட் படங்களில் பிஸியாக இருந்தார். திடீரென அவருக்கு 'மயோசிடிஸ்' என்ற ஒரு வகை சரும நோய் தொற்றிக்கொண்டது. இதனால் சமந்தாவால் படப்பிடிப்புகளில் சரியாகக் கலந்து கொள்ள முடியவில்லை. சிகிச்சைக்காக தென்கொரியா செல்லப்போவதாகச் செய்திகள் வெளியானது. உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதால் உடல் நலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க சமந்தா முடிவு செய்துள்ளார்.

இதற்காகத் தனது சில படங்களைத் தியாகம் செய்யவும் முடிவு செய்துள்ளார். தான் நடித்து வெளிவந்த 'யசோதா' படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் கூட அவர் பெரிதாகக் கலந்து கொள்ளவில்லை. அதோடு ஹைதராபாத் மருத்துவமனையிலும் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். சமந்தா நடித்த வெப்சீரிஸான 'தி பேமிலி மேன்' சீசன் 2-க்கு நல்ல வரவேற்பு இருந்ததால் அதைத் தொடர்ந்து சில பாலிவுட் படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகி இருந்தார்.
ஆனால் தற்போது உடல் நலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்துள்ளார். இதற்காக கமிட்டான பாலிவுட் படங்களிலிருந்து விலகுவதாகச் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களைத் தொடர்பு கொண்டு இது தொடர்பாகத் தெரிவித்திருக்கிறார். இதனால் வேறு நடிகையர்களைத் தேடும் முயற்சியில் அந்தந்த தயாரிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். உடல் நலம் முழுமையாகக் குணமடையும் வரை படப்பிடிப்பிலிருந்து முழுமையாக ஒதுங்கி இருக்க சமந்தா முடிவு செய்திருக்கிறார்.

அதேசமயம் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்து வரும் 'குஷி' படத்தின் படப்பிடிப்பை முடித்துக்கொடுக்கவேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறார். 'குஷி' படத்தின் படப்பிடிப்பு 60 சதவிகிதம் அளவுக்கு முடிந்துவிட்டதாக நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார். படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். சமந்தா விரைவில் குணமடைந்து வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.