பிரபல பாலிவுட் நடிகரான சஞ்சய் தத், கடந்த இரண்டு ஆண்டுகளாகப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு நீண்ட போராட்டத்திற்குப் பிறகு குணமாகி மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் இவர் வில்லனாக நடித்திருந்த 'KGF-2' படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து தொடர்ந்து பல படங்களில் நடிக்கத் திட்டமிட்டுள்ளார். நேற்றைய தினம் (மே 25) சஞ்சய் தத்தின் தந்தை சுனில் தத்தின் 17வது நினைவு நாள். இதையொட்டி தந்தையுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த அவர், தந்தையின் நினைவு குறித்து உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
அதில் "மென்மையாகவும், கண்டிப்புடனும் என்னை நீங்கள் எப்போதும் வழிநடத்திப் பாதுகாத்து வந்தீர்கள். தக்க சமயத்தில் எனக்கு பக்கபலமாகவும், ஆதரவாகவும், முன் உதாரணமாகவும் இருந்துள்ளீர்கள். ஒரு மகன் விரும்பக்கூடிய சிறந்த தந்தை நீங்கள். நீங்கள் எப்போதும் என் இதயத்தில் வாழ்ந்து கொண்டுடிருப்பீர்கள்" என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவிற்கு அவரின் ரசிகர்கள், திரைத்துறை பிரபலங்கள் வைரலாகப் பரவி வருகிறது.