Published:Updated:

`நேர்கொண்ட பார்வைக்கு நேரெதிர் பார்வை!' - `Section 375' பேசுவதும் மறந்ததும்!

Section 375
Section 375

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் சூழலில், ஆயிரம் விரைவு நீதிமன்றங்களை அரசே அமைக்க முடிவெடுத்திருக்கும் நிலையில், இப்படியொரு படம் தேவையா?

ஆண்டுகள் கடந்தும் முடித்துவைக்கப்படாமல் 1.66 லட்சம் பாலியல் குற்ற வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கின்றன. 'இந்த வழக்குகளை விரைந்து முடித்து வைக்க மத்திய அரசு ஆயிரம் புதிய விரைவு நீதிமன்றங்களைக் கொண்டுவரவுள்ளது' என்கிற பிரேக்கிங் நியூஸ் தொலைக்காட்சியில் பளிச்சிட்டுக்கொண்டிருந்த சமயத்தில்தான் ‘Section 375 marzi ya zabardast' திரைப்படத்தைப் பார்க்கச் சென்றேன்.

மாஸ் ஹீரோ ஃபார்முலாவை உடைத்ததா அஜித்தின் `நேர்கொண்ட பார்வை’..?
நிரபராதி ஒரேயொருவர் துன்பப்பட்டால்கூட அதற்கு ஒட்டுமொத்த சமூகமும் பொறுப்பு.
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வீ.ஆர்.கிருஷ்ணய்யர்

தூக்குத்தண்டனைக்கு எதிராகத் தனது இறுதி நிமிடங்கள் வரை குரல்கொடுத்த கிருஷ்ணய்யரின் புகைப்படம் மாட்டப்பட்ட நீதிமன்ற அறையில்தான் ‘Section 375’ இந்தித் திரைப்படத்தின் முக்கால்வாசி காட்சிகள் இடம்பெறுகின்றன. படத்தின் டைட்டில் குறிப்பிடுவதுபோல பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான சட்டத்தை இந்தத் திரைப்படம் விவாதிக்கிறது.

ரிச்சா மற்றும் அக்‌ஷய் கண்ணா section 375
ரிச்சா மற்றும் அக்‌ஷய் கண்ணா section 375

இரண்டு வழக்கறிஞர்கள், விசாரணைக்கூண்டு, அனல் பறக்கும் விவாதங்கள் எனக் காட்சிக்குக் காட்சி ‘பிங்க்’ / ’நேர்கொண்ட பார்வை’ திரைப்படங்களை இந்தப் படம் நினைவூட்டுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால், அந்தத் திரைப்படத்துக்கு நேரெதிர் நிலைப்பாட்டை ’Section 375’ திரைப்படம் எடுத்திருக்கிறது.

ஒரு பிரபல திரைப்பட இயக்குநர், தனக்குக் கீழ் வேலைபார்க்கும் பெண்ணைப் பாலியல் வன்முறை செய்வதாகக் கதை தொடங்குகிறது. இது அந்தத் தனிநபர்கள் தொடங்கி சமூகத்தின் ஒவ்வொரு படிநிலை வரை என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்தும் நீதிமன்றக் காட்சிகளுக்கு இணைகோடாகக் காட்டியிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணாக மீரா சோப்ரா நடித்திருக்கிறார். இவர் `நிலா’ என்கிற பெயரில் தமிழிலும் சில படங்களில் நடித்தவர். இயக்குநர் கதாபாத்திரத்தில் ராகுல் பட். குற்றவாளிக்கும் பாதிக்கப்பட்டவர் தரப்புக்குமாக வாதாடும் வழக்கறிஞர்களாக அக்‌ஷய் கண்ணாவும் ரிச்சா சத்தாவும் நடித்துள்ளனர்.

ஒரே நாடு, ஒரே மொழி... பெரியார் சொன்னது என்ன தெரியுமா?#HBDPeriyar141
மீரா சோப்ரா
மீரா சோப்ரா

இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 375 என்றால் என்ன, பெண்களுக்கு எதிரான எது மாதிரியான வன்முறையெல்லாம் இந்தத் தண்டனைச் சட்டப்பிரிவில் அடங்கும், பணி இடத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை நம் சமூகம் எப்படி அணுகுகிறது, பிரிவு 375-ன் விதிமுறைகள் என்ன, அதை போலீஸ் முதல் நீதிபதிகள் வரை எப்படிக் கையாளுகிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் படம் முழுக்க ஆங்காங்கே பேசுகிறார்கள்.

’சட்டமும் நீதியும் ஒன்றல்ல, வெவ்வேறு! சட்டத்துக்கு வடிவம் உண்டு, நீதிக்கு வடிவம் இல்லை’ என்கிற வசனத்துடன் படம் தொடங்குகிறது. பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகச் சித்ரவதை செய்து கொல்லப்பட்ட நிர்பயாவின் வழக்கு அந்தக் காட்சியில் விவாதிக்கப்படுகிறது. வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் ஆறு பேரில் ஒருவர் மட்டும் '18 வயது நிரம்பாதவர்' என்பதற்காக சிறார் சீர்திருத்த மையத்தில் மூன்று வருடங்கள் சிறை வைக்கப்பட்டார். 18 வயது நிரம்ப சில மாதங்களே இருந்த காரணத்தால் நீதிமன்றம், சட்டத்தின்படி அவரை மற்ற குற்றவாளிகளுடன் சரிசமமாகப் பார்க்க மறுத்தது. 18 வயது நிரம்ப சில மாதங்களே இருந்த காரணத்தால்தான் அவர் உயிர்பிழைத்தார்.

ராகுல் பட்
ராகுல் பட்

அங்கே வென்றது சட்டம்தானே தவிர நீதியல்ல... நிர்பயாவுக்கான நியாயமும் கிடைக்கவில்லை என்கிற கருத்தை முன்வைத்து படம் தொடங்குகிறது. இவ்வளவு வலுவாகப் படம் தொடங்குகிறதே என்று நாம் சுதாரித்து அமர்ந்தால் இறுதிக் காட்சிகள் நெருங்க நெருங்க திரைப்படம் அவ்வளவு சறுக்கியிருக்கிறது.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் சூழலில், ஆயிரம் விரைவு நீதிமன்றங்களை அரசே அமைக்க முடிவெடுத்திருக்கும் நிலையில் இப்படியொரு படம் தேவையா என்கிற கேள்வியே இங்கு பிரதானமாக வேண்டியிருக்கிறது. பெரும்பாலான பாலியல் குற்ற வழக்குகளில் குற்றவாளிகளுக்கு எதிராகத் தவறாகவே தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன என்கிற தொனியில் படம் நகர்கிறது.

54 மணி நேரம்,130 மைல்கள்!- புற்றுநோய்க்கு எதிராக எதிர்நீச்சலடித்த `சூப்பர் உமன்’

ஆனால், கள நிலவரம் அப்படியில்லை. இந்தியாவில் இன்னும் 70 சதவிகித பாலியல் வன்கொடுமை வழக்குகளுக்குத் தீர்ப்பு வழங்கப்படவில்லை. போதுமான ஆதாரங்கள் இருந்தும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் மற்றும் சாட்சிய சாதகங்களைக் காரணம் காட்டி இவர்தான் குற்றவாளி என நிருபிக்க முடியாமலேயே இந்த வழக்குகள் அத்தனையும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றன.

நிர்பயாவுக்கு அடுத்து இந்திய அளவில் அனைவரையும் உலுக்கிய கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலையில், கண் முன்னேயே அத்தனை சாட்சியங்கள் இருந்தும் வழக்கு முடிந்து தீர்ப்பு வழங்க ஒருவருடத்துக்கும் மேலானது. அதிலும் குற்றவாளிகளில் மூவருக்கு ஆயுள் தண்டனை மற்ற மூவருக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை. ஒரு குழந்தையின் வன்மரணத்துக்கு இதுதான் நீதியா? இந்த நீதி எந்த வகையில் குற்றவாளிகளைச் சீர்படுத்தும் ஒன்றாகவும் குற்றவாளிகளைப் பாதிக்கும் வகையிலும் அமைந்திருக்கிறது?

நிர்பயா வழக்கிலேயேகூட 2016-ம் ஆண்டில் சிறார் சீர்திருத்த மையத்திலிருந்து விடுவிக்கப்பட்ட அந்தக் குற்றவாளி தற்போது டெல்லி தேசிய நெடுஞ்சாலை ஒன்றின் தாபாவில் வேலை செய்துகொண்டிருக்கிறார். அவரின் முதலாளிக்கு அவரைப் பற்றிய கடந்த கால விவரங்கள் எதுவும் தெரியாது. சிறையில் இருந்த காலத்தில்கூட தனது தவறுக்கு அவர் சிறிதும் வருந்தவில்லை என்கின்றனர் காவல்துறையினர்.

பன்வாரி தேவியுடன் நடிகை ரிச்சா
பன்வாரி தேவியுடன் நடிகை ரிச்சா

இன்னும் சொல்லப்போனால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 375 உருவாகக் காரணமாக இருந்த பன்வாரி தேவி வழக்கில்கூட அவரைப் பாலியல் வன்கொடுமை செய்த ஆண்கள் இன்றுவரை சுதந்திரமாகத்தான் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். இருந்தும் பன்வாரி தேவி 22 வருடங்களாகத் தனது போராட்டத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார். நாடறிந்த வழக்குகளிலேயே இதுதான் நிலை என்னும்போது, அறியப்படாத வழக்குகளின் மீதான அலட்சியம் எப்படியாக இருக்கும் எனச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

திரைப்படத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் ஹிரால் காந்தியாக நடித்திருக்கும் ரிச்சாவே ஒரு காட்சியில் இதைக் குறிப்பிடுகிறார். அவருடன் மறுவாதம் செய்வதற்காகவே ‘இந்தியாவை 200 வருடமாக ஆண்ட பிரிட்டிஷ் அரசாங்கமேகூட தமது நாட்டில் 7 சதவிகிதம் வரையிலான பாலியல் குற்ற வழக்குகளைதான் முடித்து வைத்துள்ளது’ என வசனம் இடம்பெறுகிறது. இங்கிலாந்து 7 சதவிகிதக் குற்றங்களுக்குதான் நீதி வழங்கியிருக்கிறது என்பதற்காக நமது நாட்டில் 70 சதவிகித வழக்குகள் கிடப்பில் கிடப்பதை நியாயப்படுத்திவிட முடியாது.

குழுவினருடன் அஜய் பஹ்ல் (வலது)
குழுவினருடன் அஜய் பஹ்ல் (வலது)

தீர்ப்பே வழங்கப்படாமல் இத்தனை வழக்குகள் இருக்கும்போது, 'குற்றம் செய்யாமலேயே குற்றவாளிகளாக்கப்படுகிறார்கள்', 'தண்டனை கொடுக்கப்படுகிறது' என்கிற வகையில் ஒரு மெயின் ஸ்ட்ரீம் கமர்ஷியல் வெளியில் திரைப்படம் எடுப்பதற்கான தேவை என்ன? எதை நிரூபிக்க முயன்றிருக்கிறார் அஜய் பஹ்ல் எனப் புரியவில்லை. நாடு முழுவதும் '#MeToo' எழுச்சி அலையை ஏற்படுத்தியபோது பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான பெண்களுக்கு தங்களது மன அழுத்தத்தை வெளிப்படுத்த அது ஒரு வாயிலாக அமைந்தது.

அப்போதும் பொதுபுத்தியில் சிலர், "இந்தப் பெண்கள் மீது தவறில்லாமல் அது நடந்திருக்காது. எப்போதோ நடந்ததை இப்போது சொல்ல வேண்டிய தேவை என்ன?” எனக் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார்கள். அவர்களது கேள்வியைத்தான் இரண்டரை மணிநேரத் திரைப்படத்தின் இறுதிக் காட்சிகளாக எடுத்திருக்கிறார் அஜய் பஹ்ல்.

 சினிமா விமர்சனம்: நேர்கொண்ட பார்வை

'#MeToo' விவகாரத்தைப் பகடி செய்யவே இந்தப் படம் எடுக்கப்பட்டது என்றால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி வெளியில் கதறமுடியாமல் மனதளவில் இறந்துகிடக்கும் எத்தனையோ நிர்பயாக்களுக்கும் கத்துவா சிறுமிகளுக்கும் இந்தப் படத்தைத் திரையிட்டுக் காண்பிக்கும் வலிமை இயக்குநர் அஜய் பஹ்லுக்கு வாய்க்கட்டும்.

அடுத்த கட்டுரைக்கு