ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் தொடர்பான வழக்கில் சிக்கி பிறகு அண்மையில் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் ஷாருக் கான் மற்றும் அவரது குடும்த்தினர் கடந்த சில வருடங்களாகவே வருத்தத்தில் இருந்தனர். இதன் காரணமாக ஷாருக் கானால் சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் போனது. இதையடுத்து ஷாருக் கான் தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கி தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகியுள்ளார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான அவரது 'பதான்' திரைப்படம் பெரும் வசூலைக் குவித்து பாலிவுட்டுக்கே ஒரு நல்ல கம்பேக்கைக் கொடுத்திருக்கிறது.
இதையடுத்து அட்லி இயக்கத்தில் உருவாகிவரும் 'ஜவான்' படத்தின் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ட்விட்டரில் ஒருவர் ஷாருக் கானிடம், "நீங்கள் ஓய்வுபெற்ற பிறகு உங்களுக்கு அடுத்த பெரிய நட்சத்திரம் யார்?" என்று கேட்டுள்ளார். அதற்கு ஷாருக் கான், "நான் ஒருபோதும் நடிப்பிலிருந்து ஓய்வு பெற மாட்டேன். ஒருவேளை என்னை வீழ்த்த நினைத்தால், நான் முன்பைவிடவும் அதிரடியான கம்பேக்கைத் தருவேன்" என்று கூறியுள்ளார். ஷாருக் கானின் பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.