Published:Updated:

மனிதன் vs மிருகம்: வித்யா பாலன் நடிப்பில் அமேஸானில் வெளியாகியிருக்கும் Sherni-யை பார்க்கலாமா?

Sherni ( Amazon Prime Video )

ஒவ்வொருமுறை காட்டுக்குள் செல்லும் போதும் இயக்குநர் அமித் மசூர்கருக்கு புதிய அடர்த்தியான கதைகளைக் காடு பரிசளிக்கிறது. 2017-ம் ஆண்டு நியூட்டனுடன் வந்தவர், இந்த முறை ஷெர்னியை கையில் எடுத்திருக்கிறார்.

Published:Updated:

மனிதன் vs மிருகம்: வித்யா பாலன் நடிப்பில் அமேஸானில் வெளியாகியிருக்கும் Sherni-யை பார்க்கலாமா?

ஒவ்வொருமுறை காட்டுக்குள் செல்லும் போதும் இயக்குநர் அமித் மசூர்கருக்கு புதிய அடர்த்தியான கதைகளைக் காடு பரிசளிக்கிறது. 2017-ம் ஆண்டு நியூட்டனுடன் வந்தவர், இந்த முறை ஷெர்னியை கையில் எடுத்திருக்கிறார்.

Sherni ( Amazon Prime Video )

மனிதன் வெர்சஸ் விலங்கு என்னும் ஒற்றை வரியைக் கொண்டு ஆயிரம் கதைகளை நம்மால் பின்ன முடியும். விலங்குகள் செய்யும் அட்டகாசங்களைக் காட்சிப்படுத்த முடியும். மனிதர்கள்படும் துயரங்களைப் பட்டியலிட முடியும். இந்த விலங்கு மனிதனுக்கு எவ்வளவு அச்சுறுத்தல் தருகின்றது என்பதை விளக்கி, அதற்கான மரணத்தில் நியாயம் கற்பித்துக்கொள்ள முடியும். இவை அனைத்தையும் செவ்வனே செய்கிறது வித்யா பாலன் நடித்திருக்கும் ஷெர்னி (பெண் புலி). ஆனால், படம் பார்த்து முடித்த பின்னர், நம்மை ஒரு ஆழ்ந்த அமைதிக்குள் தள்ளிவிட்டுச் சிரிக்கிறது.

Sherni
Sherni
Amazon Prime

அந்த அடர்ந்த காட்டுப் பகுதியில் புதிதாக வேலைக்குச் சேர்கிறார் வித்யா வின்சென்ட். வித்யாவின் மேல் அதிகாரி, ஆளும் அரசுக்கென சிவப்புக் கம்பளம் விரித்துக் குளிர் காயும் ஒரு சாதாரண அரசு அதிகாரி. காடும், வீடும் கலந்து குவிந்திருக்கும் அந்த பிரதேசத்தில் புலி ஒன்று வயதான ஒருவரைக் கொன்றுவிடுகிறது. மக்களுக்குள் பயம் பற்றத் தொடங்குகிறது. சாமர்த்தியமான அந்தப் பெண் புலி , அதன் இரைகளில் கவனமாக இருக்கிறது. தேர்தல் நெருங்க நெருங்க, ஆளும் கட்சியும் , ஆளத் துடிக்கும் கட்சியும் புலியைக் கொண்டு அவர்களின் வெற்றிக்கான கோடுகளைத் தீட்டுகிறார்கள். தனியார் வேட்டைக்காரர்களை அனுமதிக்கிறார்கள். சட்டங்கள் காற்றில் வீசப்படுகின்றன. மீண்டும் மனிதக் கொலைகள் அரங்கேறுகின்றன . கனத்த மவுனத்துடன் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறது புலி. மனித ரத்த வாடை, சமூகத்தின் நாசிக்குள் சென்று அதனைத் திக்குமுக்காடச் செய்கிறது. சமூக கூட்டு மனசாட்சிக்கான விலையை வழக்கம்போல், நாம் எதிர்பார்க்கும் தருணம் ஒன்றில் தந்துவிட்டு அனைத்தையும் எப்போதும் போல் வேடிக்கைப் பார்க்கத் தொடங்கிவிடுகிறது வனம்.

வித்யா வின்சென்ட்டாக வித்யா பாலன். நிஜத்துக்கு அருகினில் கதை பயணிக்க வேண்டும் என்பதற்காகவே, வித்யாவின் தாயாரை கேரளத்தவராக சித்தரித்திருக்கிறார்கள். தனியார் பள்ளி ஒன்றில் விலங்கியல் பாடம் எடுக்கும் ஹஸன் நூரானியாக விஜய் ராஸ். பாட்டுப் பாடிக் கொண்டும், கவிதைகள் சொல்லிக்கொண்டும் பொழுதைக் கழிக்கும் சீனியர் அதிகாரி பன்சாலாக பிஜேந்திர கலா. வேட்டைக்கார பிண்டுவாக சரத் சக்ஸேனா. ̀ அந்த பாவத்த எங்க மேல எழுதீடாதீங்க ' என சொந்தங்களை இழந்த பின்னும் பேசும் கிராமத்து ஜோதியாக சம்பா மண்டல். அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

குடும்பச் சூழ்நிலையால் வேலையை விட முடியாத அழுத்தம், ஆணாதிக்க மனநிலையைத் தூக்கிச் சுமக்கும் அலுவலகம், அதிகார வர்க்கத்தின் கோர முகம், மக்களின் கூட்டு மனசாட்சி அத்துமீறல் என அனைத்தையும் சமாளிக்கும் பொறுப்பு வித்யா பாலனுக்கு. காட்டுக்குள்ளும் தன் சிம்மாசனத்தில் அழுந்த அமர்ந்திருக்கிறார் வித்யா. தான் வீட்டில் பிடிக்காமல் வளர்க்கும் பூனையில் இருந்து காப்பாற்றத் துடிக்கும் புலி வரை அவர் கதாபாத்திரம் முழுக்க அத்தனை உவமைகள். வெறுமனே man vs WIld என ஒரு மணி நேர ஷூட்டிங்கோடு முடியும் காட்சிகள் அல்ல ̀ஷெர்னி'. சமூகத்தின் கூட்டு மனசாட்சிக்கு எதிராக காய்களை நகர்த்திக்கொண்டிருக்கும் களம். கொஞ்சம் பிசகினாலும், வித்யாவும், நூரானியும் கதாபாத்திரங்களாகவே விமர்சிக்கப்படுவார்கள். ஆனாலும், அதை லாவகமாகக் கடந்து சாதித்திருக்கிறார்கள் விஜய் ராஸும், வித்யா பாலனும்.

Sherni
Sherni
Amazon prime

பாலியல் கொலைக் குற்றவாளிக்கான சமூகத்தின் தீர்ப்பு எப்போதும் மரண தண்டனைதான். பொது சமூகத்தின் கூட்டு மனசாட்சிகள் எதிர்பார்ப்பதும் அதுதான். மரண தண்டனைக்கு எதிரானவர்கள் கூட இதுமாதிரியான விஷயங்களில் அமைதியாக இருந்துவிடுவார்கள். காரணம் , இது இருமுனை கத்தி. கொஞ்சம் தவறினாலும், பேசுபவரின் நெஞ்சிலேயே இறங்கிவிடும். ஆனால், அந்த கோட்டில் சரியாக நின்று இலக்கை நோக்கி அடித்திருக்கிறார் கதையை எழுதிய ஆஸ்தா திகு. மனிதர்களைத் தொடர்ச்சியாக கொல்லும் ஒரு புலி. நாம் பராமரிக்கும் கால்நடை விலங்குகளைக் கொன்றாலே, கம்பும் தீப்பந்தமுமாய் கிளம்பும் சூழலில் அதை மிருகக் காட்சி சாலைக்கு கொண்டு செல்ல முயல்கிறது ஒரு குழு. இரு அரசியல் தலைவர்களும், தத்தமது செல்வாக்கின் வழி வேட்டைக்காரர்களை இறக்குகிறார்கள். தேர்தல் நேரம் என அரசும் கள்ள மெளனம் சாதிக்கிறது. இப்படியானதொரு சூழலில், மிருகத்தின் மீது நம்மை பரிவு கொள்ளச் செய்ய வேண்டும்.

மிருகங்களுக்கான வாழ்விடங்களை நாம் எவ்வளவு சூரையாடி இருக்கிறோம் போன்றவற்றை போகிற போக்கில் பொட்டில் அடித்துவிட்டுச் செல்கிறார்கள். புலிகளையும், சிறுத்தைகளையும் கொல்ல தடையிருக்கும் இந்தியாவில் இன்றளவிலும், man eater என வகைமைப்படுத்தப்பட்ட புலிகளைக் கொல்ல முடியும். தேசிய புலிகள் பாதுகாப்பு மையம், man eater என்னும் வார்த்தையைக் கூட இப்போதெல்லாம் பயன்படுத்த அனுமதிப்பதில்லை. மனிதர்களுக்கு அச்சுறத்தல் விளைவிப்பவை என்று தான் வகைமைப்படுத்துகிறார்கள். அதே போல் வேட்டைக்காரர்களையும் அனுமதிப்பதில்லை. ஆனாலும் , சட்டம் இதனை அனுமதிக்கிறது. மயக்க ஊசியைக் கொண்டு முதலில் சுடும் பழக்கம் கூட நடைமுறையில் இல்லை. கண்ணியமான மரணங்களை மனிதர்கள் யாருக்கும் பரிசளிக்க விரும்புவதில்லை.

Sherni
Sherni

அனைவருக்கும் சமமான சூழலில் தான் போட்டிகளை நடத்த வேண்டும் என்பது தான் மரபு. ஆனால், கைகளில் துப்பாக்கிகளை ஏந்திக்கொண்டு ஐந்தறிவு மிருகங்களைக் கொல்ல ஆயுத்தமாவதை வீரம் என ஆண்டு ஆண்டுக்காலமாய் பதிவு செய்துவைத்திருக்கிறோம். வாய்ப்பு மறுக்கப்பட்ட மனிதனையும், வாய்ப்புகளால் கொளுத்து நிற்கும் மனிதனையும் ஒரே தராசில் வைக்காதீர்கள் என்று சொன்னாலே இன்னும் ஏன் வைக்கக்கூடாது என கேட்கும் சமூகத்தில், மிருகங்களுக்கு நாம் நியாயமான சூழலை அதைக் கொல்லும் தருவாயிலும் கூட அமைத்துத் தருவதில்லை என்பதைக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் அமித் மசூர்கர். இன்னொன்று நாமாகவே சில மிருகங்களின் மீது பாசமும், சிலவற்றின் மீது வெறுப்பும் கொண்டிருப்போம். மலைப்பாம்பு மானை விழுங்கினால், மானைக் காப்பாற்றுபவனை தெய்வமாக பார்க்கும் தேசமிது. சர்ச்சையான காட்டுப் பகுதி என சொன்னாலும் அதனுள் செல்லும் மனிதனையோ, கால்நடைகளையோ வேட்டையாடிவிட்டால், அந்த மிருகத்துக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்பதுதான் எழுதப்படாத அறம்.

கதையில் சில நிமிடங்களே வந்தாலும், இங்கு ஒரு காடு இருந்தது என விஜய் ராஸ் சொல்லும் கதை அச்சம் கொள்ளச் செய்யும் ஒன்று. புலி மீண்டும் தன் காட்டுப் பாதையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது என வித்யாபாலன் நினைத்துக்கொண்டிருக்க, "இல்லை அங்கு ஒரு பிரச்னை" என்பார் விஜய் ராஸ். செம்புச் சுரங்கமாக அந்த இடத்தை கூறு போட்டு வைத்திருக்கும் அரசாங்கம். புலியிருக்கும் காட்டுக்கும், அது செல்ல வேண்டிய தேசிய பூங்காவுக்கும் இடையே, நெடுஞ்சாலைகளையும் தொழிற்சாலைகளையும் வெட்டி வைத்துவிட்டு, புலிகளின் மீது குற்றம் சுமத்திக்கொண்டிருக்கிறோம் என்பார் விஜய். வசனங்கள் ஏதுமின்றி 360 டிகிரியில் சுழலும் ராகேஷ் ஹரிதாஸின் கேமரா இந்திய சினிமாவில் முக்கியமான ஒன்று. "நாம காட்டுக்குள்ள 100 முறை போனா, ஒரு தடவை புலியைப் பார்த்துடலாம். ஆனா, அந்த 99 தடவையும் புலி நம்மள பார்த்திருக்கும்" போன்ற வசனங்கள் கதைக்கு மேலும் பலம் சேர்க்கின்றன.

Sherni
Sherni

இரண்டாண்டுகளுக்கு முன்னர் அவ்னி (T1) புலியை மனிதர்கள் சுட்டுக்கொன்ற சம்பவத்தை படம் நினைவு கொள்ளச் செய்கிறது. 13 மனிதர்களைக் கொன்ற புலியை பல்வேறு திட்டமிடல்களுக்குப் பின்னர் கொன்றனர். அதன் குட்டிகளை பாதுகாப்பு மையத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த கதையிலும் அந்த சம்பவத்துடன் நிறைய ஒற்றுமைகள்.

ஒவ்வொருமுறை காட்டுக்குள் செல்லும் போதும் இயக்குநர் அமித் மசூர்கருக்கு புதிய அடர்த்தியான கதைகளைக் காடு பரிசளிக்கிறது. 2017-ம் ஆண்டு நியூட்டனுடன் வந்தவர், இந்த முறை ஷெர்னியை கையில் எடுத்திருக்கிறார். நக்ஸல்கள் சூழ்ந்திருக்கும் சட்டீஸ்கர் காடுகளுக்குள் சென்று , சர்ச்சைக்குரிய பகுதிகளில் தேர்தல் நாளன்று ஓட்டுப் பெட்டிகளுடன் செல்வார் நியூட்டன். மத்திய ஆயுத காவல்படை வீரர்களின் எச்சரிக்கையையும் மீறி அவர் தன் மனதுக்கு நேர்மையாக அந்த நாளை எப்படி முடிக்கிறார் என நீளும் நியூட்டன். இந்தியாவில் அருகி வரும் நேர்மையான அரசு அதிகாரிகளை நோக்கி மீண்டும் தன் தேடுதலை முடுக்கிவிட்டிருக்கிறார் அமித் மசூர்கர்.

Sherni
Sherni

இந்த முறை அவர் காவல்துறை அதிகாரி வித்யாவாக வெளி வந்திருக்கிறார். ஆஸ்தா திகு கதை, திரைக்கதை எழுத அதை நேர்த்தியாக இயக்கியிருக்கிறார் அமித். அரசு இயந்திரத்தில் தகுதி இல்லாவிட்டாலும், சொற்படி நடப்பவர்கள் தப்பிப் பிழைப்பார்கள் என்பதையும் உரக்க சொல்லியிருக்கிறார். அதே சமயம், புலிகள் ஏன் இவ்வாறு செய்கின்றன என்பதை இன்னும் சற்று விரிவாக காட்சிப்படுத்தியிருக்கலாம். மனிதர்களைக் கொல்லும் புலிகள் பல சமயங்களில் அவற்றை இரையாகக் கூட எடுத்துக்கொள்வதில்லை. இது போன்ற விஷயங்களை இன்னும் விளக்கமாக பேசி இருக்கலாம்.

மிருகத்துக்கும் மனிதனுக்குமான சண்டையில் மனிதன் வென்றும் ஒருவித இயலாமை கலந்த வெறுமையை உண்டு பண்ணிவிடுகிறது ஷெர்னி. அதற்கும் அந்த மிருகத்தின் பக்கம் துளி நியாயமும் இல்லை. படத்தின் இறுதி நிமிடங்களில் வித்யா பாலன் கண் முன்னர் இருக்கும் அந்த மிருகங்கள், எஞ்சி நிற்கும் சாட்சியங்களாக நிற்கின்றன. ஒரு அட்டகாசமான த்ரில்லரா என்றால் ஷெர்னி அதற்காக எழுதப்படவில்லை. அதே சமயம், படம் முடிந்த பின்னரும், நம்மை ஒருவித துக்கத்தில் தள்ளாட வைக்கிறது ஷெர்னி. அந்த வகையில் மீண்டும் வென்றிருக்கிறார் இயக்குநர் அமித்.