Published:Updated:

"அவை ஆபாச வீடியோக்கள் அல்ல!"- கணவர் ராஜ் குந்த்ராவுக்கு ஆதரவாக ஷில்பா ஷெட்டி வாக்குமூலம்!

ஷில்பா ஷெட்டி
ஷில்பா ஷெட்டி

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி வீட்டில் போலீஸார் 6 மணி நேரம் சோதனை நடத்திய நிலையில் ஹாட்ஷாட் ஆப்பில் இடம் பெற்று இருக்கும் வீடியோக்கள் ஆபாச படங்கள் அல்ல என்று ஷில்பாஷெட்டி தெரிவித்துள்ளார்.

நடிகை ஷில்பாஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா ஆபாச வீடியோ எடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனால் அவரின் போலீஸ் காவல் வரும் 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ராஜ் குந்த்ராவை அவரது வீட்டிற்கு போலீஸார் அழைத்து சென்றனர். அங்கு போலீஸார், நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா ஆகியோர் முன்னிலையில் 6 மணி நேரம் தீவிர சோதனை நடத்தினர். அதோடு நடிகை ஷில்பாவிடமும் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் போலீஸார் ராஜ் குந்த்ராவின் ஆபாச வீடியோ பற்றிய விபரம் தெரியுமா என்பது குறித்து கேட்டனர். அதோடு ராஜ் குந்த்ராவின் வியான் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து ஷில்பா ஷெட்டி கடந்த ஆண்டு பதவி விலகி இருந்தார். அதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் விசாரித்தனர்.

ராஜ் குந்த்ரா - ஷில்பாஷெட்டி
ராஜ் குந்த்ரா - ஷில்பாஷெட்டி

ஹாட்ஷாட்டில் இடம்பெற்று இருக்கும் வீடியோக்கள் குறித்து கேட்டதற்கு, அந்த வீடியோக்கள் அனைத்தும் காமம் சார்ந்தவை (Erotica) என்றும், அவை ஆபாச வீடியோக்கள் இல்லை என்றும் ஷில்பா ஷெட்டி தெரிவித்தார். அதோடு இது போன்ற வீடியோக்கள் நெட்ஃபிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் போன்ற ஒடிடி தளங்களிலும் அதிக அளவில் காணப்படுவதாகவும், ஹாட்ஷாட்டில் இருக்கும் வீடியோக்களை விட மிகவும் மோசமான வீடியோக்கள் மற்ற ஓடிடி தளங்களில் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இந்த ஹாட்ஷாட் ஆப்பை தனது கணவர் முழுமையாக இயக்கவில்லை என்றும், போலீஸார் தெரிவிக்கும் ஆபாச வீடியோக்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்தார். ஆபாச வீடியோக்கள் தயாரிப்பு எதிலும் தான் ஈடுபடவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ராஜ் குந்த்ரா விவகாரம்: நடிகைகளை மிரட்டி மும்பையில் ஆபாச பட ஷூட்டிங்... லண்டனில் அப்லோடிங்!

ராஜ் குந்த்ராவும் இந்தத் தொழில் அனைத்தையும் லண்டனில் இருக்கும் பிரதீப் பக்‌ஷிதான் செய்வதாகவும் தனக்கு இதில் எந்த வித தொடர்பும் இல்லை என்றும் போலீஸாரிடம் தெரிவித்தார். ஆனால் ராஜ் குந்த்ராவின் இந்த வாக்குமூலத்தை போலீஸார் நம்பவில்லை. ராஜ் குந்த்ராவிற்கு ஆபாச வீடியோ மோசடியில் தொடர்பு இருக்கிறது என்பதற்கு தங்களிடம் முழுமையான ஆதாரம் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். ராஜ் குந்த்ரா தனது மைத்துனர் பிரதீப்பின் பெயரை, பெயருக்குத்தான் பயன்படுத்தி வந்ததாகவும், முழு தொழிலையும் ராஜ் குந்த்ராதான் செய்து வந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

மேலும் இந்த ஆபாச வீடியோ மோசடியில் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு நேரடியாக எந்த வித தொடர்பும் இல்லை என்றும், இந்த வீடியோக்களில் தொடர்புடைய நடிகைகள் யாரிடமும் ஷில்பா ஷெட்டி பேசவில்லையென்றும், அவர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்திருக்கவில்லை என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
விசாரணைக்குப் பிறகு அழைத்துச் செல்லப்படும் குந்த்ரா
விசாரணைக்குப் பிறகு அழைத்துச் செல்லப்படும் குந்த்ரா

இதற்கிடையே ராஜ் குந்த்ரா தன்னை கைது செய்து இருப்பதற்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது ராஜ் குந்த்ராவின் வழக்கறிஞ்சர் போந்தா ஆஜராகி, ஹாட்ஷாட்டில் இடம் பெற்று இருக்கும் வீடியோவில் முழுமையான தாம்பத்தியதில் ஈடுபடுவது போன்ற வீடியோக்கள் எதுவும் இடம் பெறவில்லை. இது போன்ற வீடியோக்கள் ஏற்கெனவே நெட்ஃபிளிக்ஸ் மற்றும் அமேசான் தளங்களில் காணப்படுகிறது என்று வாதிட்டார்.

இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள் எது ஆபாசமானது எது ஆபாசமற்றது என்பதை யார் முடிவு செய்கிறார் என்று கேட்டனர். பின்னர், இது தொடர்பான விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
அடுத்த கட்டுரைக்கு