
மீண்டும் கலகலப்பு, ஒரு சீரியஸ் மெசேஜ் என விருந்து வைத்திருக்கிறார் ஆயுஷ்மான் குரானா.
கூட்டுக் குடும்பத்தின் திருமண நிகழ்வு ஒன்றுக்கு தன் நண்பனுடன் ஊருக்கு வரும் மகன், தன்பால் ஈர்ப்பாளன் என்றும் உடன் வந்தவன் நண்பனல்ல, அவனின் காதலன் என்றும் குடும்பத்தினருக்குத் தெரியவந்தால்..? பிற்போக்குத் தன்மை ஊறிப்போன கதாபாத்திரங்கள் இப்படியொரு சூழ்நிலைக்கு சீரியஸ் முகம் காட்டுவதாய் நினைத்துக்கொண்டு காமெடி கதகளி ஆடினால்..?
2017-ல் வெளியான ‘சுப் மங்கள் சாவ்தான்’ (நம்மூர் ‘கல்யாண சமையல் சாதம்’) படத்தின் கிளைக்கதையாக ‘சுப் மங்கள் ஷ்யாதா சாவ்தான்’ (கல்யாணம்னா இன்னும் ஜாக்கிரதையா இருக்கணும்).

மீண்டும் கலகலப்பு, ஒரு சீரியஸ் மெசேஜ் என விருந்து வைத்திருக்கிறார் ஆயுஷ்மான் குரானா. தொடர்ந்து வித்தியாசமான கதைகளைத் தேடிப்பிடிக்கும் ஆயுஷ்மான் இதில் இன்னும் உச்சம் தொட்டிருக்கிறார். ‘கே’ பார்ட்னராக முற்போக்கான சிந்தனைகள் கொண்ட கார்த்திக்காக நம் மனதில் சுலபமாக வந்து அமர்கிறார். ஆனால், கடந்த மூன்று படங்களாக காமெடித் தூக்கல் டெம்ப்ளேட் க்யா ஷாப்? தொடர் வெற்றியைத் தக்கவைக்கப் போராட்டமா?
“எப்ப இருந்து நீங்க ஒரு ‘கே’னு முடிவு பண்ணுனீங்க?” “எப்ப இருந்து நீங்க ஒரு ‘கே’ இல்லன்னு முடிவு பண்ணுனீங்க?” “கூகுள்ல பார்த்தேன். பாலினத்துக்கும் (செக்ஸ்) பால்பண்புக்கும் (Sexuality) எந்தச் சம்பந்தமும் இல்லையாமே!”
படத்தில் ஆங்காங்கே ஓவர்டைம் பார்க்கும் நாடக வசனங்களுக்கு அப்பாற்பட்டு இப்படியான அரசியல் தெளிவுடன் ஒலிக்கும் வசனங்கள், ஆச்சர்யப்பட வைக்கின்றன. அதிலும் குறிப்பாக, சிக்னலில் நிற்கும் வண்டியில் ஒரு காதலி தன் காதலன் தோளில் சாய்ந்திருக்கும் தோரணையைப் பார்த்துவிட்டு ஆயுஷ்மானும் தன் காதலன் தோளில் அவ்வாறே சாய்ந்து கொள்வது, படம் சொல்லவரும் மொத்த விஷயத்தையும் ஒரே ஷாட்டில் சொல்லி விடுகிறது. அந்த ரயில் முத்தக் காட்சியிலும் அவ்வளவு யதார்த்தம்! பார்ட்னர் அமன் திரிபாதியாக வரும் ஜிதேந்திரா குமார், ஆயுஷ்மான் அளவுக்குத் திரையை ஆக்கிரமிக்கும் நடிகராக எந்தக் காட்சியிலும் புலப்படவில்லை என்றாலும் இப்படியான ஒரு துணிச்சலான கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்ததற்காகவே அவரைப் பாராட்டலாம். ஆயுஷ்மானுக்கு அடுத்து ஸ்கோர் செய்வது அவரின் அப்பாவாக, ‘பதாய் ஹோ’ படத்தில் அமைதியாகவே இருந்து அப்ளாஸ் அள்ளிய கஜராஜ் ராவ். இதில் அமனின் அப்பாவாக, வேளாண் விஞ்ஞானியாக மீண்டும் அதகளம் செய்திருக்கிறார். இணையம் பார்த்துத் தன்பால் ஈர்ப்பு பற்றி விளக்குபவரிடம் ‘இந்த 4G, 5G-க்கெல்லாம் முன்னாடியே இந்தத் திரிபாதி வந்துட்டான்’ என்று புளிப்புக்காட்டுவது, கூட்டுக்குடும்பக் கலாட்டாக்களில் தன் தம்பியை மிரட்டிக் காரியத்தைச் சாதித்துக்கொள்வது எனக் கலகலப்பூட்டுகிறார்.
சென்ற பாகத்துக்குத் திரைக்கதை மற்றும் வசனம் எழுதிய ஹித்தேஷ் கேவல்யாவிற்கு இதில் இயக்குநராக புரொமோஷன். நாடகத் தன்மையை மட்டும் கொஞ்சம் குறைத்திருக்கலாமே ஹித்தேஷ்?
20 கோடி என்கிற சின்ன பட்ஜெட்டில் , மீண்டும் சொல்லி அடித்திருக்கிறார் சமகாலத்தின் ஹிட் நடிகரான ஆயுஷ்மான்!