பாலிவுட்டில், பிரபலமான தொலைக்காட்சித் தொடர் நடிகராக இருந்தவர் சித்தாந்த் சூர்யவன்ஷி. 46 வயதானவ்ர் குஷும், வாரிஸ், சூர்யபுத்ர கர்ன் உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி தொடர்களிலும் சில படங்களிலும் நடித்துள்ளார். அவர் கடந்த வாரம் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து கொண்டிருந்தபோது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
தற்போது சித்தாந்த் சூர்யவன்ஷியின் மகள் டிசா (Diza) தனது தந்தையுடனான நினைவுகள் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், "எனது முழு உடலும் மரத்துப் போய்விட்டது. நீங்கள் இருக்கும்போது நான் உங்களின் பாதுகாப்பில் இருந்தேன். என் அப்பாவை யாரும் தொட முடியாது, அவர் என்னுடையவர் மட்டுமே.
நீங்கள் எப்போதும் எனக்கு ஒரு சிறந்த நண்பராக இருந்திருக்கிறீர்கள். சிறுவயதில் என்னுடைய எல்லாப் பிரச்னைகளையும் கேட்டு, எனக்கு அறிவுரை கூறியிருக்கிறீர்கள். 'டிசா, நீ அப்பாவின் பெருமை' என்று என்னிடம் கூறுவார். வாழ்க்கையில் எல்லாவற்றையும் செய்யும் திறன் கொண்டவள் என்று என்னை உணரச் செய்திருக்கிறீர்கள். பல வாக்குறுதிகளை உங்களுக்கு அளித்துள்ளேன். அதற்காக நான் கடினமாக உழைப்பேன். நான் உங்களை மிஸ் செய்கிறேன். அப்பா ப்ளீஸ் மகிழ்ச்சியாகத் தொடர்ந்து என்னை வழிநடத்துங்கள்" என்று அவர் உருக்கமாகப் பதிவிட்டிருந்தார்.