Published:Updated:

காதலுக்குள் காமம்... காமத்துக்குள் இசை... மூன்றும் கலந்து காக்டெய்ல் ஆனால்! #8YearsofRockstar

ரன்பீர் கபூர்
News
ரன்பீர் கபூர் ( ராக்ஸ்டார் )

இங்கே காதலை அறிமுகப்படுத்துவதற்கான காரணம், காதலால் கவிஞனான ஒருவனின் கதையைத்தான் இப்போது பார்க்கப்போகிறோம். இம்தியாஸ் அலி எனும் கலைக்காதலன் இயக்கிய `ராக்ஸ்டார்' படம் வெளியாகி 8 வருடங்கள் நிறைவடைந்துவிட்டன. அதைப் பற்றிய ஒரு சிறப்புப் பகிர்வு!

எப்பேற்பட்டவனையும் கவிஞனாக்குவது காதல். அந்தக் காதல் ஒருவனுக்குள் பிரவேசித்துவிட்டால் அது அவனைத் தாக்கும், தலைகீழாகப்போட்டுத் திருப்பும். ஆத்மார்த்தமான காதல், ஒருவனது மனத்தை ஆட்கொண்டுவிட்டால், அது ஆட்டி வைத்ததற்கெல்லாம் ஆடுவதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை. பேரண்டத்தில், பல்வேறு பரிமாணங்களில் காதல் பரவிக்கிடந்தாலும், இங்கே காதலை அறிமுகப்படுத்துவதற்கான காரணம், காதலால் கவிஞனான ஒருவனின் கதையைத்தான் இப்போது பார்க்கப்போகிறோம். இம்தியாஸ் அலி எனும் கலைக்காதலன் இயக்கிய `ராக்ஸ்டார்' படம் வெளியாகி 8 வருடங்கள் நிறைவடைந்துவிட்டன. அதைப் பற்றிய ஒரு சிறப்புப் பகிர்வு இங்கே.

ரன்பீர் கபூர்
ரன்பீர் கபூர்
ராக்ஸ்டார்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இப்படத்தில், நால்வரை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். அந்த நால்வருமே ராக்ஸ்டார்தான். முதல் ராக்ஸ்டார் இம்தியாஸ். ரன்பீர் கபூர் இரண்டாம் ராக்ஸ்டார். ரன்பீரின் குரலாகப் பின்னிருந்து பாடிய மோஹித் சௌகான், மூன்றாம் ராக்ஸ்டார். மொத்தப் படத்தின் உயிரான ரஹ்மான் எனும் இசை அரக்கனே படத்தின் முக்கியமான ராக்ஸ்டார். காதல் தரும் பலதரப்பட்ட உணர்வுகளைத் தனது இசையின் மூலம் வெளிக்காட்டியிருப்பார் மனிதர். படத்தின் நாயகனான ஜனார்த்தனுக்கு இசை ஞானம் எப்படி உதிக்கும்... அதிலிருக்கும் ஆழமும் அடர்த்தியும் அவனுக்கு எவ்வாறு விளங்கும்... இசையைத் தேடி அலைகிறான், சமோசா சாப்பிடுகிறான், ஏன் அவனைப் பெற்ற அம்மா அப்பா, உயிருடன் இருக்கிறார்கள் என வருத்தம்கொள்கிறான். அந்த வருத்தத்தை நிவர்த்திசெய்ய, அவன் படிக்கும் கல்லூரியின் கேன்டீன் முதலாளியான கட்டானா பாயிடம் வலிகளை உணர வழி கேட்கிறான். ஒரே வார்த்தையில், `காதல்' என்கிறார் கட்டானா பாய்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அவன் படிக்கும் கல்லூரியின் பேரழகியான ஹீரைக் காதலிக்க முடிவுசெய்கிறான். முதலில் திட்டி விரட்டும் ஹீர், ஜனார்த்தன் செய்யும் சேட்டைகள் பிடித்துப்போய், தனக்கிருக்கும் குட்டிக் குட்டி ஆசைகளை ஜனார்த்தனிடம் சொல்கிறாள். அவளுக்கிருக்கும் முதல் ஆசை, `ஜங்க்ளி ஜவானி' எனும் அடல்ட் ஒன்லி படத்தைப் பார்ப்பது. அதில் ஆரம்பித்து, மட்டமான சரக்கடிப்பது, சாலையோரச் சுவரில் சிறுநீர் கழிப்பவர்களைப் பின் பக்கம் அடிப்பது, இறுதியாக காஷ்மீர் செல்வதென ஹீரின் குட்டி ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றிவைக்கிறார், ஜனார்த்தன். இவையனைத்தும் நடப்பது, ஹீரின் கல்யாண வேலைகளுக்கு மத்தியில். ஒருபக்கம் ஹீரின் ஆசைகளை நிறைவேற்றிவிட்டு, மறுபக்கம் ஹீரின் வீட்டோடு ஒரே ஆளாக இருந்து கல்யாண வேலைகளைப் பார்க்கிறான், ஜனார்த்தன்.

Rockstar
Rockstar

காதல், ஒருவரை இறுகப் பற்ற ஒரு நொடிப் பொழுதில் நிகழ்கின்ற கண் பார்வை போதுமே. இவ்வளவு நடந்தும் இருவருக்குமிடையே காதல் நெருப்பு பற்றிக்கொள்ளாதா என்ன? பின், இவர்களுக்கிடையே கருவுற்றிருக்கும் காதலை, அந்த இறுக்கமான கட்டிப்பிடிப்பே உறுதிசெய்கிறது. ஹீரின் திருமணத்துக்கு வருகைதந்திருக்கும் அவரது நண்பர்களுக்கு, ஜனார்த்தனை `ஜோர்டான்' என அறிமுகம் செய்துவைக்கிறாள் ஹீர். ஜனார்த்தனும் அப்பெயரை முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறான். காதலும் விதைக்கப்பட்டுவிட்டது. ஹீரும் தனது திருமணத்துக்குப் பிறகு அவனுக்கு பிரிவைப் பரிசளித்து, பிராகுக்குப் பறந்துவிடுகிறாள். இவன் வேண்டி விரும்பிய வலிகள் அனைத்தும் மெள்ள மெள்ள இவனை இறுக்கமாகப் பிடித்துக்கொள்கின்றன. இவனது காதல் விஷயம் தெரிந்த பின், குடும்பத்தினரால் வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

போவதறியாது நடைப் பயணத்தை மேற்கொள்ளும் ஜோர்டானின் கால்கள், மசூதிக்கு அவனை அழைத்துச்செல்கிறது. இவ்விடம் ரஹ்மானுக்கு ரொம்பவே பரிச்சயம். ஜோதா அக்பரில் `குவாஜா மேரே குவாஜா'வைப் போல், `யா நிஸாமுதீன்' என ஆரம்பித்து `குன் ஃபாயா குன்' என ஒலித்தது ரஹ்மானின் குரல். வானத்தைப் பார்த்த பின், ஜோர்டானின் சிந்தனைகள் நொடிப் பொழுதில் எங்கெங்கோ அலைபாயும். நம்முடைய நினைவலைகளும் ஜோர்டானுடனும், ரஹ்மானின் இசையோடும் நீந்தத்தான் செய்யும். தடுக்க முடியாது. அரபி மொழி, தங்களுடைய ரம்மியமான இசையின்மூலம் அல்லாவை அழைக்கும் இஸ்லாமிய நண்பர்கள், போர்வைக்குள் தஞ்சம் புகுந்திருக்கும் வழிப்போக்கர்கள் ஆங்காங்கே... இவர்களுக்கு மத்தியில் நடந்து வரும் ஜோர்டான், அவர்களோடு தன்னையும் நுழைத்துக்கொள்கிறான்.

ராக்ஸ்டார்
ராக்ஸ்டார்

தெய்வீகம் நிறைந்திருக்கும் அச்சூழலில், ஒலிக்கும் அனைத்து வாத்தியங்களையும் கேட்கிறான்... படிக்கிறான், ஜோர்டான். இவையெல்லாம் நடக்கும் முன்பும், ஹீரை சந்திக்கும் முன்பும் அவன் இசையமைத்துப் பாடியிருக்கிறான்தான். ஆனால், அந்தச் சமயத்தில் இவனிடமிருந்து வந்த இசைக்கும், தற்போது வரும் இசைக்கும் நிறைய வித்தியாசப்பட்டது. உணர்வுகளை மட்டுமே விதைத்துச் செல்லும் காதலுக்கும், அதனுடன் கூடிவரும் மொழியற்ற இசைக்கும் அவ்வளவு வலிமை. அதற்குப் பின் இசையின் ஆழத்தை அளந்துபார்க்கத் துணிகிறான். திசைகளெங்கும் விரவிக்கிடக்கும் இசையைத் தனது கிட்டாரில் ஒன்று சேர்க்கிறான். இசையும் மகிழ்ச்சியோடு இவனைக் கட்டியணைத்துக்கொள்கிறது.

ஜோர்டானின் பெயர் பிரபலமாகிறது. அப்போது, பிராக்கிற்கு இசைக்கச்சேரி செய்ய வாய்ப்பு வருகிறது. காதலைக் கடந்து செல்ல எப்பேர்ப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டாலும், கடலெனத் தேங்கியிருக்கும் நினைவுகளைப் புரட்டிப்பார்க்க அவளை நினைவுபடுத்தும் ஒற்றை வார்த்தை போதுமே. அப்படித்தான் பிராக் எனும் வார்த்தை இவனைப் புரட்டிப்போடுகிறது. `பிராக் செல்ல என்ன வேண்டுமானாலும் செய்கிறேன்' எனத் தான் வேலைபார்க்கும் நிறுவனத்துக்கு கையெழுத்திட்டுக் கிளம்புகிறான், ஜோர்டான். பின், ஹீரையும் சந்திக்கிறான். அனீமியாவால் பாதிக்கப்பட்டு துவண்டுபோயிருக்கும் ஹீரின் முகம், ஜோர்டானைப் பார்த்ததும் தெளிவடைகிறது. ஜோர்டானும் அவளை அழைத்துக்கொண்டு பிராக்கிலிருக்கும் அவளின் குட்டி ஆசைகளை நிறைவேற்றச் செல்கிறான்.

Rockstar
Rockstar

ஜோர்டான் அவளைத் தொடும்போது, அவள் நெளிகிறாள், கொஞ்சம் கொஞ்சமாகத் தேருகிறாள். அதற்கு இருவரும் `மேஜிக் டச்' என்ற பெயரையும் வைத்துக்கொள்கிறார்கள். துவண்டு போய்ச் சோர்ந்து நடந்த ஹீர், ஜோர்டானிடமிருந்து வெளிப்படும் கதகதப்பில் மெள்ள மெள்ள மீண்டெழுகிறாள். ஜோர்டானுக்கு இது ஆச்சர்யமல்ல. ஏற்கெனவே தெரிந்தவைதான். காதலும், இச்சையும் இவர்களைப் பிணைத்துப்போடுகின்றன, ஜோர்டானின் நினைவலைகள் இன்னும் நீள்கிறது. ஹீருக்கோ, அந்த நீட்சியில் பயணிக்க உடன்பாடில்லை. தன் இல்லற வாழ்க்கைக்கும் காதலுக்கும் நடுவில் நின்று தத்தளிக்கிறாள். ஜோர்டானுடன் காமம் நிகழ்ந்த பின், தன்னுடைய உடைமைகளை எடுத்துக்கொண்டு நடு ரோட்டில் ஓடுகிறாள். இவனும் தொல்லை செய்யாமல் பின் தொடர்ந்து வருகிறான். ஹீர் நிற்கிறாள், மருகுகிறாள், கட்டியணைக்கிறாள், தூரம் செல்கிறாள். நோயிடமிருந்து விடுதலைபெற்ற ஹீர், காதலுக்குள் சிறைப்படுகிறாள். இருவருக்குமிடையேயான உறவு அம்பலப்படுகிறது. சந்தர்ப்ப சூழலால் ஜோர்டான் சிறைப்படுகிறான். மீண்டும் தனது ஊருக்கே அனுப்பிவைக்கப்படுகிறான். ஜோர்டான் மீது கடுமையாகக் கோபப்படுகிறாள், ஹீர். இசை மறுபடியும் இவனுக்குள் பிறக்கிறது.

இம்முறை காதல் விதைத்த வலி, ஜோர்டானுக்கு நிறைய இசையைக் கற்றுக்கொடுக்கிறது. மக்கள் கொண்டாடும் இசைக் கலைஞனாகப் பிறப்பெடுக்கிறான். எழுப்பப்பட்டிருக்கும் கட்டடங்களுக்கு மத்தியிலிருக்கும் மைதானத்தில் பாடிக்கொண்டிருக்கும் ஜோர்டான், ஒரு குட்டிக் கதை சொல்கிறான். "சில வருடங்களுக்கு முன் அடர்ந்த காடு ஒன்று இங்கிருந்தது. பின்னர், நகரமென்ற நாகரிகத்துக்குள் நுழைந்த மனிதன், மரங்களை வெட்டி, காட்டை அழித்தான். வித விதமான வீடுகள், சாலையென்று கட்டியெழுப்பினார்கள். ஆனால், காட்டிலிருக்கும் மரங்களை வெட்டியெடுத்தபோது, இங்கு வாழ்ந்துகொண்டிருந்த பறவைக் கூட்டம் இங்கிருந்து பறந்துவிட்டது. திரும்பி வரவும் இல்லை. அந்தப் பறவைகளை நான் இப்போது தேடிக்கொண்டிருக்கிறேன். யாராவது அதைப் பார்த்தீர்களா...'' என ஜோர்டான் கேட்க, இல்லையெனக் கதறுவார்கள், ரசிகர்கள். இப்படித் தனக்குள் புதைந்திருக்கும் வலிகளை வரிகளாக்கி ராக்ஸ்டார் ஆகிறான், ஜோர்டான்.

ராக்ஸ்டார்
ராக்ஸ்டார்

ஊரே மெச்சும் இந்த இசைக் கலைஞனுக்கு எஞ்சியதெல்லாம் வலிகளும் தனிமையும்தான். வருடங்கள் செல்கின்றன. மீண்டும் ஹீரைப் பார்க்கும் சூழல் ஏற்படுகிறது. ஆனால், இம்முறை ஹீரின் நிலை இன்னும் மோசமாக இருக்கிறது. எலும்புகள் தேய்ந்து, நடப்பதற்கே தெம்பின்றி, படுத்த படுக்கையில் இருக்கும் ஹீரைத் தேடிவந்து தொடுகிறான், ஜோர்டான். முன்பைப் போலவே நெளிகிறாள். ஜோர்டானைப் பார்த்ததும் கோபத்தில் குதித்தாலும் எழுந்து நடக்கத் தெம்பு பிறக்கிறது. வீட்டில் ஆச்சர்யப்படுகிறார்கள். மறுபடியும் ஜோர்டானுக்குள் கலக்கிறாள் ஹீர். உடல்நலத்திலும் தேர்ச்சிபெறுகிறாள். வார்த்தைகளின்றி போர்வைக்குள் நிகழ்ந்த இச்சை முத்தத்தில் ஹீர் கற்பமாகிறாள். உடல்நிலை அபாயகரமான நிலையை அடைகிறது. மறுபக்கம், அக்ரீமென்ட்டின் படி இசைக் கச்சேரியை நடத்த முடியாததால், இவன் பணியாற்றிய நிறுவனம் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜோர்டானை மீண்டும் சிறைப்பிடிக்கிறது போலீஸ். மொத்த ரசிகர்களும் இவனைப் பார்த்து ஆர்ப்பரிக்க, தன் குருவான ஜிம் மோரிஸனைப் போலவே கூட்டத்தின் மத்தியில் நின்று நடு விரலை உயர்த்திக் காட்டுகிறான்.

படத்தின் இறுதிப் பாடலான `நாடான் பரிந்தே'வில் மீண்டும் ஒலிக்கிறது ரஹ்மானின் குரல். முன்பு ஜோர்டான் சொல்லியிருந்த பறவைக் கதையின் நீட்சிதான் இப்பாடல். தூரதேசம் பறந்திருக்கும் பறவையை வீடு திரும்பச் சொல்லி மன்றாடுவதே அந்தப் பாடல். எப்பேர்ப்பட்ட சூழலிலும், இவன் பாடுவதையும் இசைப்பதையும் நிறுத்தவேயில்லை. இவையனைத்தும் ஜோர்டான் புகழுக்காகச் செய்யவில்லை. தன் வலியை வெளிப்படுத்தும் வழியாக ஜோர்டான் தேர்ந்தெடுத்தது இசையை. அந்தப் பாடலோடும் ரூமியின் கோட்பாட்டுடனும் படம் முடியும்.

Rockstar
Rockstar

இவன் கண்களுக்கு மட்டுமே தெரியும் நினைவுகளுக்கு, இசையை வைத்து வடிவம் கொடுக்கத் தொடங்கினான். பறந்துசென்ற பறவை, என்றேனும் ஒரு நாள் வீடு திரும்பும் என இசைத்துக்கொண்டேயிருந்தான். இப்படியான காவியத்தை நம்மிடையே விதைத்துச் சென்ற இம்தியாஸுக்கும், மொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள்.