Published:Updated:

மும்பை: கொரோனா பாதிப்பால் நடிகர் சுனில் ஷெட்டியின் வீடு இருக்கும் கட்டடத்திற்கு சீல் வைப்பு!

சுனில் ஷெட்டி
சுனில் ஷெட்டி

மும்பையில் நடிகர் சுனில் ஷெட்டியின் வீடு இருக்கும் கட்டடத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

மும்பையில் கொரோனா தற்போது கட்டுக்குள் இருக்கிறது. ஆனாலும் தொடர்ந்து கட்டுப்பாடுகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால் வியாபாரிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி இருக்கின்றனர். அடுத்த வாரம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொரோனாவை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தெற்கு மும்பையில் நடிகர் சுனில் ஷெட்டி வசிக்கும் கட்டடத்தில் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தெற்கு மும்பையில் பிரபலமான அல்டமண்ட் ரோட்டில் உள்ள பிரித்வி அபார்ட்மெண்டில் சுனில் ஷெட்டி வசித்து வருகிறார்.

சீல் வைக்கப்பட்ட கட்டடம்
சீல் வைக்கப்பட்ட கட்டடம்
ANI

பொதுவாக ஒரு கட்டடத்தில் 5 பேருக்கு மேல் கொரோனா தொற்று இருந்தால் அக்கட்டிடத்திற்கு சீல் வைப்பது மாநகராட்சி வழக்கமாகும். அந்த வகையில் சுனில் ஷெட்டியின் வீட்டிற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். ஆனால் சுனில் ஷெட்டி குடும்பம் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்கள் குடும்பத்தில் யாருக்கும் கொரோனா இல்லை என்றும் உள்ளூர் வார்டு அதிகாரி கெய்க்வாட் தெரிவித்தார். அக்கட்டடத்திற்கு வெளியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். வெளியிலிருந்து யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை. அதோடு கொரோனா விதிகளை மீறினால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே மும்பையில் கடந்த 3 நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கொரோனா தடுப்பூசி முகாம்கள் மீண்டும் செயல்படத்தொடங்கின. தடுப்பூசி பற்றாக்குறையால் அவை செயல்படாமல் இருந்தன. ஆனால், தனியார் மருத்துவமனையில் மட்டும் தடுப்பூசி போடப்பட்டது. சில மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள கூட்டம் அலைமோதியது. அதிகமானோர் இரண்டாவது தடுப்பூசி கிடைக்காமல் திண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

மகாராஷ்டிரா முழுவதும் 3.65 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மும்பையில் தொடர்ந்து கொரோனா தினத்தொற்று 500 என்ற அளவில் இருந்து கொண்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் தொடர்ந்து கொரோனா தொற்று 10,000 என்ற அளவில் இருப்பதால் மாநில அரசுக்கு உதவ மத்திய குழுவை அனுப்பி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பவார் தெரிவித்தார். இவர் சமீபத்தில்தான் மத்திய அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு