Published:Updated:

நடிகர்களைத் துரத்தும் தற்கொலை எண்ணங்கள்... காரணங்கள்!

சுஷாந்த் , சுஷீல் கெளடா மற்றும் அஷுதோஷ் பக்ரே
சுஷாந்த் , சுஷீல் கெளடா மற்றும் அஷுதோஷ் பக்ரே

இந்த மூவரின் இறப்புக்கும் மன அழுத்தம்தான் காரணம் என சொல்லப்பட்டாலும் உண்மை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஜூன் மாதம் 14-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இந்திய திரையுலகம் முழுவதையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. யாரும் எதிர்பாராத இச்சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இவரது இறப்பில்தான் நெப்போட்டிஸம் என்ற வார்த்தை தேசம் முழுவதும் பேசுபொருளானது. எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் பீகார் மாநிலத்தில் இருந்து மும்பை வந்து நாடகங்களில் நடித்து பிறகு, பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோக்களில் முக்கியமானவராகத் தன்னை மாற்றிக்கொண்டார், சுஷாந்த். குறிப்பாக, தோனியுடைய பயோபிக்கில் நடித்த பிறகு, மிகவும் பிரபலமானார். அவர் நடித்த கடைசி படமான `தில் பெச்சாரா' திரைப்படம் ஜூலை 25-ம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியானது. அதில் ரஜினியின் தீவிர ரசிகனாக நடித்திருந்தார்.

சல்மான் கான், கரண் ஜோஹர், ஆலியா பட் உள்ளிட்ட பாலிவுட்டின் முக்கிய புள்ளிகளால்தான் சுஷாந்த் பல படங்களில் இருந்து நீக்கப்பட்டார் என அவர்கள் மீது விமர்சனங்களை வைத்துக்கொண்டிருந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் சுஷாந்த்தின் தந்தை பீகாரில் தற்போது தொடர்ந்துள்ள வழக்கால் இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது. அதில் சுஷாந்த்தின் காதலில் ரியா சக்ரபர்த்தி விசாரணைக்கு உள்ளாகி இருக்கிறார். ஆனால், தற்போது வரை சுஷாந்த் இறப்பிற்கு இதுதான் காரணம் என எதையும் உறுதிப்படுத்த முடியவில்லை. இவரின் இறப்பிற்கு பிறகு, ஏராளமான சினிமா பிரபலங்கள் டிப்ரஷன், நெப்போடிஸம் ஆகியவை பற்றி சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.

சுஷாந்த் சிங் ராஜ்புத்
சுஷாந்த் சிங் ராஜ்புத்

ஜூலை 8-ம் தேதி கன்னட நடிகர் சுஷீல் கெளடா என்பவர் தன்னுடைய நண்பர் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். 30 வயதேயான அவர், டிவி சீரியல்களில் பிஸியாக இருந்தார். குறிப்பாக, `அந்தப்புரா' என்ற சீரியல் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. `சலகா' எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் லாக்டெளன் காரணமாக வெளியாகாமல் நிற்கிறது. கன்னட நடிகர் துனியா விஜய் இயக்கும் முதல் படம் இது.

சுஷீல் இறப்பு பற்றி துனியா விஜய் பேசியபோது, ``நான் அவரை முதலில் பார்த்தபோது அவர் ஒரு ஹீரோ மெட்டீரியல் என்று நினைத்தேன். தொடர் இறப்புகள் இந்த ஆண்டு முடிவடையாது என்று நினைக்கிறேன். கொரோனா வைரஸால் மக்கள் பயப்படுவது மட்டுமல்ல, நம்பிக்கையையும் இழக்கிறார்கள். ஏனெனில் வாழ்க்கையை நல்லபடியாக நடத்துவதற்கு அவர்களுக்கு வேலை இல்லை. இந்த நெருக்கடியான சூழலை சமாளிக்க மன வலிமையுடன் இருக்க வேண்டும்" என்றார். சுஷீல் இறந்ததற்கும் மன அழுத்தம்தான் காரணம் என சொல்லப்படுகிறது. ஆனால், உண்மை என்ன என்பதையும் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

சுஷீல் கெளடா
சுஷீல் கெளடா

இந்த இரு இறப்புகளைத் தொடர்ந்து, புதன்கிழமை மதியம் மராத்தி நடிகர் அஷுதோஷ் பக்ரே அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட செய்தி வெளியானது. `பகார்’, `இசார் தர்லா பக்கா’ உள்ளிட்ட மராத்தி படங்களில் நடித்தவர். 32 வயதான இவர் மராத்தி சீரியல் நடிகை மயூரி தேஷ்முக்கை 2016-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவருடைய இறப்பு மராத்தி திரையுலகில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு காரணமும் மன அழுத்தம்தான் எனக் கூறப்படுகிறது. அவர் இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்பு, அஷுதோஷ் பக்ரே தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு மனிதன் ஏன் தற்கொலை செய்துகொள்கிறான் என்பதைப் பற்றிய வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கின்றது.

இந்த லாக்டெளனில் சேதுராமன், விசு, பரவை முனியம்மா, ஒளிப்பதிவாளர் பி.கண்ணன், பாலிவுட் நடிகர்கள் ரிஷி கபூர், இர்ஃபான் கான், மலையாள இயக்குநர் சச்சி, மலையாள நடிகர் அனில் முரளி என பலர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தனர். சுஷாந்த், சுஷீல், அஷுதோஷ் ஆகியோர் தற்கொலை செய்துகொண்டனர். ஆனால், இந்த மூவரின் இறப்புக்கும் மன அழுத்தம்தான் காரணம் எனச் சொல்லப்பட்டாலும் உண்மை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

அஷுதோஷ் பக்ரே
அஷுதோஷ் பக்ரே

பல நடிகர்கள் தங்களுடைய பேட்டியில், ``சினிமா நடிகர்கள் என்றால் நிறைய பணம் வைத்திருப்பார்கள். அதனால், அவர்களது வாழ்க்கையில் எந்த கஷ்டமும் இருக்காது; சந்தோஷமாக இருப்பார்கள் என நினைக்கிறார்கள். ஆனால், எங்களுக்குள்ளும் ஏராளமான கவலைகள், சோகங்கள், பிரச்னைகள் இருக்கின்றன. ஒவ்வொருத்தருக்குள்ளும் இருக்கிற மன வலிமைதான் அவ்வாறான நெருக்கடியான சூழல்களில் இருந்து நம்மை காப்பாற்றும்" எனக் கூறியிருப்பதை இங்கே குறிப்பிட வேண்டியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு