1994ம் ஆண்டு ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மலினாவில் `பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியப் பெண்' என்ற பெருமையுடன் கிரீடம் சூடியவர் சுஷ்மிதா சென் (46).
பிரபல பாலிவுட் நடிகையாக இந்தி, தமிழ் எனப் பல படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர். தமிழில் 'ரட்சகன்' மற்றும் 'முதல்வன்' போன்ற படங்களில் நடித்த இவர் 2010ல் ‘துள்க மில் காய (Dulha Mil Gaya)’ என்ற பாலிவுட் படத்தில் கடைசியாக நடித்திருந்தார். அதன்பின், தான் தத்தெடுத்த தனது இரண்டு வளர்ப்பு மகள்களான ரெனி மற்றும் அலீசாவை வளர்ப்பதில் முழுக் கவனம் செலுத்தப்போவதாகக் கூறி கடந்த பத்து ஆண்டுகளாக எந்தப் படங்களிலும் அவர் நடிக்கவில்லை.

இதையடுத்து நீண்ட நாள்களுக்குப் பிறகு `Taali' எனும் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் மும்பையைச் சேர்ந்த சமுக ஆர்வலர் மற்றும் திருநங்கைகளின் உரிமைக்காகக் குரல் கொடுத்து வரும் கௌரி சாவந்த் (Gauri Sawant) என்ற திருநங்கையின் வாழ்க்கை வரலாற்றுப் படமாகும். இப்படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட வேண்டும் எனத் தீவிரமாகப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் தனக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், தற்போது நலமாக இருப்பதாகவும் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சுஷ்மிதா சென்.
இது பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, "இரண்டு நாள்களுக்கு முன் எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர், ஆஞ்சியோபிளாஸ்டி, ஸ்டென்ட் சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து இதயநோய் நிபுணர்கள் 'என் இதயம் வலிமையாக இருக்கிறது' என்று மீண்டும் உறுதிப்படுத்தினர். சரியான நேரத்தில் நீங்கள் அளித்த உதவிக்கும், ஆக்கப்பூர்வமான உங்களின் செயலுக்கும் மிக்க நன்றி. இந்த நல்ல செய்தியை என் நலம் விரும்பிகளுக்கும், ரசிகர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். இப்போது நான் நலமுடன் இருக்கிறேன். மேலும், மீண்டும் வாழ்க்கையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்" என்று கூறியுள்ளார் சுஷ்மிதா சென்.
பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் நேரிலும் போனிலும் நலம் விசாரித்து வருகின்றனர். 2019ம் ஆண்டும் இதே போன்று சுஷ்மிதா சென் உடல் நலம் பாதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில் நான் மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளேன். முடிகள் உதிர்கின்றன என்று கவலையுடன் தெரிவித்திருந்தார். 2020ம் ஆண்டு அளித்திருந்த பேட்டி ஒன்றிலும் தனது உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பது குறித்துத் தெரிவித்திருந்தார்.