Published:Updated:

ஆணாதிக்கத்தின் மீது விழுந்த ஒற்றை `அறை'... டாப்ஸியின் #Thappad படம் சொல்லும் செய்தி என்ன?

Thappad
Thappad

``ஒரு 'அறை'விட்டதுக்கு விவாகரத்து ஓவர்ல...?" இப்படி நினைத்தால் இந்த #Thappad படம் உங்களுக்குத்தான்!

எல்லாம் சுபம். இறுதியில் அல்ல, தொடக்கத்தில்! அம்ரிதா - விக்ரம், இந்த அன்பான கணவன் மனைவியின் வாழ்க்கை அப்படித்தான் தொடங்குகிறது. அம்மாவைப் போல பார்த்துக்கொள்ளும் மாமியார், அன்பான பக்கத்து வீட்டுப் பெண்மணி, அவளின் டீன்ஏஜ் மகள், குடும்ப உறுப்பினர் போன்ற வேலையாள், பாசம் குறையாத அம்மா, அப்பா, தம்பி... என எல்லாமே சரியாக இருக்கும் வாழ்க்கையில் ஒரேயொரு பிரச்னை. ஒரு பார்ட்டியில் அத்தனை பேர் முன்னிலையிலும் அலுவலக டென்ஷன் காரணமாக அம்ரிதாவை விக்ரம் அறைந்துவிடுகிறான். எல்லாம் சரியாக இருக்கும் திருமண வாழ்க்கையை விவாகரத்தில் முடித்துக்கொள்ள, ஒரு மனைவி தன் கணவனை விட்டுப் பிரிந்துசெல்ல, இந்த `ஒரு அறை' என்பது போதுமான காரணமா?

தப்பட்
தப்பட்
`எது தேவையோ அதுவே தர்மம்' என்பதை மாற்றி `எது சரியோ அது மட்டுமே தர்மம்' என்று வலியுறுத்துகிறது இந்த `தப்பட்'.

தன் மூன்று வருட உழைப்பு, சிறு வயதிலிருந்தே கண்ட கனவு, நிஜமாகும் தருணத்தில் அந்த வாய்ப்பு கார்ப்பரேட் அரசியலுக்குப் பலியாகும்போது எந்த மனிதனுக்கும் கோபம், விரக்தி வருவது மிகவும் இயல்பான ஒன்று! அந்தக் கோபத்தை தன் மனைவி அமிர்தாவின் கன்னத்தில் இறக்கி வைத்துவிடுகிறான் விக்ரம். அதுவும் பலரின் முன்னிலையில்!

கணவன் மனைவியை அடிப்பது என்பதை சகஜமான ஒரு நிகழ்வாய் பார்க்கும் நம் இந்தியக் குடும்பக் கட்டமைப்பில், எல்லாம் சரியானதொரு வாழ்க்கையில், உணர்ச்சிவசத்தில் ஒரேயொரு முறை கன்னத்தில் அறையும் இந்த விக்ரமின் செயல் ஒரு பெரிய விஷயமே இல்லைதான். இதுவரை நாம் பார்த்த சினிமாக்களில்கூட `அவரு என் புருஷன். என்ன அடிப்பாரு, கொல்லுவாரு... நீங்க தலையிடாதீங்க' என்றுதான் பெண்களை வசனம் பேச வைப்பார்கள். திரையரங்கில் இருக்கும் ஆண்களும் அதற்கு ஆர்ப்பரிப்பார்கள். இப்படியான மனிதர்களுக்கு, அவர்களின் ஆணாதிக்க மனோபாவத்துக்கு பளாரென `அறை'விடுகிறது அமிர்தா எடுக்கும் முடிவு!

டாப்ஸி - தப்பட்
டாப்ஸி - தப்பட்

உணர்ச்சிவசத்தில் கொலை செய்தாலும் கொலைதான் எனும்போது அதற்குத் தண்டனை உண்டு எனும்போது மனைவியை உடல்ரீதியாக ஒரு நொடி துன்புறுத்துவதும் தவறுதானே? மற்றும் அது ஒரு கூட்டத்தின் முன்னர் எனும்போதும் அந்தப் பெண் உளவியல் ரீதியாக சந்திக்கப்போகும் பிரச்னைகளையும் கருத்தில்கொண்டுதானே ஆக வேண்டும்? அதற்கு அந்தக் கணவனின் ஆணாதிக்க மனோபாவம் பதில்சொல்லித்தானே ஆகவேண்டும்? - இப்படிப் பல விவாதங்களைக் கிளப்புகிறது `தப்பட்'.

அம்ரிதாவாக டாப்ஸி. தொடர்ந்து சவாலான, சமுதாயத்துக்குத் தேவையான ஸ்க்ரிப்ட்களைத் தேடித் தேடி செய்யும் டாப்ஸி, `தப்பட்' போன்றதொரு கதையை டிக் செய்ததில் எந்த ஆச்சர்யமும் இல்லை. இயல்பானதொரு குடும்பத்தலைவியாக, அன்பானதொரு மனைவியாக நாம் பார்த்துப் பழகிய `மனிதி'களைக் கண் முன் நிறுத்துகிறார்.

Pavail Gulati, Taapsee Pannu
Pavail Gulati, Taapsee Pannu
Thappad

அந்த `அறை' சம்பவத்துக்குப் பிறகு உளவியல் ரீதியாக அவர் சந்திக்கும் பிரச்னைகளை வசனங்கள் எதுவுமின்றி வெறும் முகபாவனைகளால் வெளிப்படுத்துகிறார். அதிலும் அந்த பார்ட்டிக்குப் பிறகு, தன் வெறுப்பை, இயலாமையை முகத்தில் நிறுத்திக்கொண்டு வீட்டு வேலைகளைச் செய்வது, ஓர் இடத்தில் கட்டுப்படுத்த முடியாமல் வெடித்து அழுவது என நேர்த்தியான நடிப்பு. பின்னர், தன் வளைகாப்பின்போது தன் மகளைப் போல பார்த்துக்கொண்ட மாமியாரிடம் கண்ணீர் மல்க அவர் பேசும் நீண்டதொரு வசனக் காட்சி, அத்தனை யதார்த்தம்! தான் எடுத்த முடிவு சரியானது என உறுதியாக நம்பும் ஒரு பெண்ணின் தெளிவை அம்ரிதாவாக மிகச்சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார் டாப்ஸி. கணவராக பவைல் குலாதி. செய்த தவற்றைக்கூட உணராமல், மற்றவர்களைப் பற்றி சிந்திக்காமல் எப்போதும் ஒருவித படபடப்புடன் சுற்றும் கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்.

ஒரு கமர்ஷியல் இயக்குநராக தன் கரியரைத் தொடங்கிய இயக்குநர் அனுபவ் சின்ஹா (`ரா ஒன்' புகழ்), பின்னர் `முல்க்', `ஆர்டிகள் 15' என சீரியஸ் மோடுக்கு கியரை மாற்றினார். தற்போது அவரின் இந்த `தப்பட்' படமும் அதன் நீட்சியே! `முல்க்' படத்தில் மதப் பிரச்னை, `ஆர்டிகள் 15'-ல் சாதிப் பிரச்னை எனத் தொட்டவர், `தப்பட்' படத்தில் பாலினப்பிரச்னையை (ஆண், பெண் - ஆணாதிக்கம்) தொட்டிருக்கிறார் எனலாம்.

இதுவரை `அனுபவ் சின்ஹா' எனத் தன் பெயரைப் பயன்படுத்தி வந்தவர், பெண்ணியம் பேசும் இந்தப் படத்துக்கு மட்டும் தன் தாயின் பெயரை தன் பெயரில் இணைத்துக்கொண்டு `அனுபவ் சுசீலா சின்ஹா'வாக மாறியிருக்கிறார்.
Vikatan
தேவை கருணை அல்ல; நீதி! - ARTICLE 15

கிட்டத்தட்ட டீசர், டிரெய்லர் என இரண்டிலுமே இதுதான் கதை என்று சொல்லிவிட்ட பிறகு இரண்டரை மணி நேரம் படம் பார்ப்பவர்களை உட்கார வைக்க வேண்டும். சவால்தான் என்றாலும் அதைத் திருப்திகரமாகச் செய்திருக்கிறார்கள் அனுபவ் சின்ஹா மற்றும் மிருண்மயி லகூ. ஒரு `அறை', அதனால் பிரிந்துசெல்ல நினைக்கும் மனைவி என ஒரு வரிக்கதையை வைத்துக்கொண்டு இதை அம்ரிதாவின் உலகில் இருக்கும் எல்லாப் பெண்களின் கதையுமாக, சொல்லப்போனால் இவ்வுலகின் எல்லாப் பெண்களின் கதையுமாகச் சாமர்த்தியமாகக் கட்டமைத்திருக்கிறார் இயக்குநர்.

தினமும் கணவனின் துன்புறுத்தலுக்கு ஆளாகும் அம்ரிதா வீட்டுப் பணிப்பெண், கணவனை இழந்த பிறகு யாரையும் ஏற்க விரும்பாமல் துணிச்சலாக வாழும் பக்கத்து வீட்டுப் பெண், குடும்ப வாழ்க்கையை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு வாழும் அம்ரிதாவின் அம்மா, தன் குடும்ப வாழ்க்கையில் பிரச்னை இருந்தாலும் மருமகளை தன் மகள் போல பார்த்துக்கொள்ளும் மாமியார், அம்ரிதாவின் முடிவு சரியென அவளுக்குத் துணை நிற்கும் அம்ரிதாவின் தம்பியின் காதலி, முதலில் கணவனுக்கு அடங்கி, பொதுப் புத்தியிலிருந்துவிட்டு பின்னர் தனக்குச் சரியெனப்பட்டதைச் செய்யும் அம்ரிதாவின் வழக்கறிஞர் என அத்தனை பெண் பாத்திரங்களையும் இயல்பாக வார்த்திருக்கிறார் இயக்குநர்.

சரி, ஒட்டுமொத்தமாகப் பெண்கள் நல்லவர்கள், ஆண்கள்தான் குற்றவாளிகள் என்று முத்திரை குத்துகிறதா `தப்பட்' என்றால் அதற்கு விடையாக வருகிறது அம்ரிதாவின் அப்பா கதாபாத்திரம். தன் மகள் எந்த முடிவு எடுத்தாலும் அதிலிருக்கும் நியாயத்தை உணர்ந்து நடந்துகொள்வது, தன் காதலியை மிரட்டும் மகனை அந்தப் பெண்ணிடம் மன்னிப்புக் கேட்கச்சொல்லி அதட்டுவது என ஒரு ரோல்மாடல் அப்பாவாக குமுத் மிஷ்ரா சரியாகப் பொருந்திப் போகிறார்.

பொதுவாக இப்படியான படங்களில், அதுவும் விவாகரத்தை மையமாக வைத்துவரும் படங்களில் அனல் பறக்கும் நீதிமன்ற விவாதக் காட்சிகள் இடம்பெறும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உந்துசக்தியாக வழக்கறிஞர், நண்பர் என ஏதோவொரு கதாபாத்திரம் கட்டமைக்கப்பட்டிருக்கும். இப்படியான க்ளிஷேக்களைத் `தப்பட்' தெளிவாகத் தவிர்த்திருக்கிறது.

Taapsee Panu in Thappad
Taapsee Panu in Thappad

இடைவேளைக்கு முன்னர், தான் இப்போது என்ன செய்ய வேண்டும் என அம்ரிதா தனிமையில் யோசிக்கும் காட்சிகள் அதற்குப் பின்னர் நீளும் கலந்துரையாடல்கள் ஆகியவற்றை இன்னமும் கொஞ்சம் குறைத்திருந்தால் `நாடகத்தன்மை' ஏற்படுவதைத் தவிர்த்திருக்கலாம்.

என்னதான் இது ஒரு மேல்தட்டுப் பெண்ணின் கதை மட்டுமல்ல என்பதை மறைக்க பலதரப்பட்ட பெண்களின் வாழ்வைக் காட்டியிருந்தாலும், இப்படியொரு பிரச்னைக்கு அம்ரிதாவின் இந்த முடிவை எல்லா வர்க்கத்தின் பெண்களும் எடுக்க முடியுமா என்பது இன்றைய சமுதாயக் கட்டமைப்பில் மிகப்பெரிய கேள்விக்குறியே! அப்படியே எடுத்தாலும் அதனால் ஏற்படும் பின்விளைவுகளைச் சமாளிக்க முற்படும்போது அம்ரிதாவைப் போல நியாயத்தின் பக்கம் மட்டுமே நிற்க முடியுமா என்பதும் யோசிக்கவேண்டிய ஒன்றுதான். ஆனால், நிற்க வேண்டும் என்பதுதான் `தப்பட்' நமக்குச் சொல்லவரும் சேதி!

மொத்தத்தில், செய்த தவற்றுக்காகத் துளியும் வருந்தாமல், அதைச் சரி செய்ய முயலாமல், மன்னிப்புக்கூட கேட்காமல் அதை நியாயப்படுத்த மட்டுமே காரணங்கள் தேடும் ஆணாதிக்க மனோபாவத்துக்கு சிண்டு முடிந்து பளாரென ஓர் `அறை' விடுகிறது இந்த `தப்பட்'.
அடுத்த கட்டுரைக்கு