சினிமா
Published:Updated:

அறைந்தால் விவாகரத்து!

டாப்ஸி
பிரீமியம் ஸ்டோரி
News
டாப்ஸி

உங்கள் இணையை, விரக்தியின் உச்சத்தில் இருக்கும்போது நீங்கள் அறைந்தாலும், அதுவொரு தவறு.

ரு திருமணமான பெண் எவற்றையெல்லாம் அனுசரித்துச் செல்லலாம்; எவற்றையெல்லாம் அனுசரித்துச் செல்லக்கூடாது? அது ஏன் ஒரு பெண்ணுக்கு மட்டும் வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளிலும் இப்படியான அனுசரித்துச் செல்லும் சம்பிரதாயங்கள் தொடர்கின்றன என்பதைச் சமூகத்தின்முன் அழுத்தமான கேள்விகளாய் முன்வைக்கிறது ‘தப்பட்.’

புத்தகங்கள் படிப்பது, நடனம் ஆடுவது போன்றவற்றில் ஆர்வம் இருந்தாலும், திருமணத்துக்குப் பின்னர் ஒரு `முழு நேர மனைவி’யாக, கணவனைக் கவனித்துக்கொள்ளும் நபராக மாறிப்போகிறார் அம்ரிதா (தாப்ஸி). வீட்டின் வாசலில் நாளிதழ் போடப்படுகிறது; அலாரம் அடிக்கிறது; அம்ரிதா எழுகிறாள்; எலுமிச்சை இலைகளை வெட்டி ஒரு காபி போடுகிறாள்; ரம்மியமான வானத்தை ஒரு புகைப்படம் எடுக்கிறாள்; கணவரை எழுப்புகிறாள்; பணிவிடை செய்கிறாள்; அவர் கார் ஏறும் வரை வந்து அவருக்கு பர்ஸும், மதிய உணவும் தருகிறாள்; இப்படியாக ‘ஆண்கள் தன் இணையாய் ஏற்கும்; விரும்பும் ஒரு பெண்.’ ஒரு பார்ட்டியில் பணியில் ஏற்பட்ட ஒரு திடீர் விரக்தியால், அம்ரிதாவை அனைவரின் முன்னிலையிலும் அறைந்து விடுகிறார் அவள் கணவர். நிலைகுலைந்து போகும் அம்ரிதா, சில நாள்களில் வீட்டை விட்டு வெளியேறி விவாகரத்து செய்ய முடிவெடுக்கிறாள். ‘ஒரே ஓர் அறைக்காக ஒரு பெண் மணவிலக்கு பெறலாமா?’ என்று உங்களுக்குள் ஒரு கேள்வி எழுமே, அதைத்தான் விரிவாகப் பேசுகிறது ‘தப்பட்.’

டாப்ஸிக்கு கனமான வேடம். கச்சிதமாக நடித்திருக்கிறார். படத்தின் இறுதியில் தன்னைத் தாயைப் போல் கவனித்துக்கொண்ட மாமியாரிடம் கசிந்துருகி அம்ரிதா பேசும் வசனம் அனைத்துப் பெண்களுக்குமானது. `நான் அந்தச் சம்பவத்துக்குப் பின் அவரைக் காதலிக்கவில்லை. ஆனால், அதற்கு முன்புவரை அவருக்குச் செய்த அனைத்துமே காதலால்தான். அதனால், எனக்கு ஜீவனாம்சம் வேண்டாம்’ என டாப்ஸி சொல்வது அனைத்து ஆண்களுக்குமானது.

டாப்ஸி
டாப்ஸி

தப்பட் திரைப்படத்தின் ஆகப்பெரும் பலம் அது, அம்ரிதாவின் கதையோடு நின்று விடுவதில்லை என்பதுதான். மகிழ்ச்சியான திருமண வாழ்வை அனுதினமும் கொண்டாடும் அம்ரிதாவின் தாய்; அன்பான கணவர் இறந்தபின், அவரைப்போன்ற ஒருவரை இதுவரை கண்டதில்லை என அவரையே நினைத்து உருகும், அம்ரிதாவின் பக்கத்து வீட்டுப் பெண்; கணவரால் தினமும் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் அம்ரிதா வீட்டுப் பணிப்பெண்; அம்ரிதாவுக்கு ஆயிரம் அறிவுரையும், எனர்ஜி பூஸ்டர்களையும் அள்ளி வீசினாலும், தன் வீட்டில் ஆணாதிக்கக் கணவருக்கு அடங்கிச் செல்லும் அம்ரிதாவின் வழக்கறிஞர் - இப்படி வெவ்வேறு வாழ்க்கை வாழும் பெண்களின் வாழ்க்கை முறையைப் படத்தின் முதல் காட்சியாய் வைத்து ஆச்சர்யப்படுத்துகிறார் இயக்குநர் அனுபவ் சின்ஹா. `முல்க்’ படத்தின் மூலம் இந்து - இஸ்லாமிய பிரச்னை; `ஆர்ட்டிக்கிள் 15’ மூலம் சாதிய வன்முறை போன்றவற்றை அழுத்தமாய்ப் பேசியவர், இதில் ஆணாதிக்கப் பிரச்னையைக் கையில் எடுத்திருக்கிறார்.

மணவிலக்கு பெற முடிவெடுக்கும் அனைத்துப் பெண்களும் எதிர்கொள்ளும் வாக்கியம், `கொஞ்சம் அனுசரித்துச் சென்றிருக்கலாம்’ என்பதுதான். பணிச்சூழலில் பாலியல் அத்துமீறல்களைப் பொறுத்துக்கொள்ளாமல் புகார் கொடுக்கும் பெண்ணை, ‘பிழைக்கத் தெரியாதவள்’ என்று சொல்வதைப் போன்றதுதான் இதுவும். ஆண்களை ‘சகித்துக்கொள்வது’ என்பது பெண்களின் கடமையாக்கப்பட்டிருக்கிறது. பொது இடங்களில் எவ்வளவு கோபம் வந்தாலும் ஒரு பெண் ஆணைக் கையோங்கி அடிப்பதில்லை. எவ்வளவு கிளர்ச்சியோ, மது அருந்தும் சூழலோ ஏற்பட்டாலும் ஒரு பெண் ஆணைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதில்லை.

உங்கள் இணையை, விரக்தியின் உச்சத்தில் இருக்கும்போது நீங்கள் அறைந்தாலும், அதுவொரு தவறு. அதற்குரிய மன்னிப்பைக் கேளுங்கள். அந்தத் தவற்றை இனி நடக்காதவாறு பார்த்துக்கொள்ளுங்கள் அல்லது அதைச் சரி செய்ய முற்படுங்கள். கோபமும், கையோங்குவதும் ஆணுக்கான ஆயுட்கால உரிமை என நினைத்து நகராதீர்கள் என்பதைச் சொல்வதுதான் `தப்பட்.’