Published:Updated:

"மக்கள் விரும்பினால் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன்!"- `தலைவி' கங்கனா ரணாவத்

மக்கள் விரும்பினால் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன் என்று பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சர்ச்சைகளுக்கு பெயர் போன பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து 'தலைவி' என்ற படத்தில் நடித்துள்ளார். அப்படம் விநாயகர் சதுர்த்தியான இன்று திரைக்கு வந்தது. இப்படத்திற்கு மல்டிபிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர்கள் ஸ்க்ரீன்களை ஒதுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர். ஓடிடி தளத்தில் 'தலைவி' படத்தை நான்கு வாரங்கள் கழித்துதான் வெளியிடவேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர். அப்பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு படம் தற்போது வெளியாகி இருக்கிறது.

'தலைவி' படம் குறித்து கங்கனா ரணாவத் அளித்த பேட்டியின் போது, "எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் திட்டம் உண்டா?" என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்தவர்,

"நான் தேசியவாதி. நாடு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை பேசுவேன். எனவே மக்கள் நான் அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதாக நினைக்கின்றனர். அது ஒன்றுபோல் இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படி இல்லை. ஏனென்றால் நான் அரசியல்வாதி கிடையாது. நான் பொறுப்புள்ள குடிமகனாக பேசுகிறேன். மக்களால் பிரபலப்படுத்தப்பட்ட நான் மக்களின் உரிமைக்காகவும், நாட்டிற்காகவும் பேசுகிறேன்.

கங்கனா ரணாவத்
கங்கனா ரணாவத்

நான் அரசியல்வாதியாவேனா இல்லையா என்பது எனது கையில் இல்லை. மக்களின் ஆதரவு இல்லாமல் பஞ்சாயத்துத் தேர்தலில் கூட உங்களால் வெற்றி பெற முடியாது. அரசியலில் சேருவதாக இருந்தால் மக்கள் என்னை விரும்புவதாக இருக்கவேண்டும். இப்போது நல்ல நடிகையாக இருப்பதாக நினைக்கிறேன். இதில் எனக்கு மகிழ்ச்சி. எதிர்காலத்தில் மக்கள் விரும்பி என்னை தேர்ந்தெடுத்தால் நான் அதனை நிச்சயம் அன்போடு ஏற்றுக்கொள்வேன்.

மக்களின் மனதில் இடம்பிடிப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை திரையில் அரசியல்வாதியாக நடித்தபோது தெரிந்து கொண்டேன். அரசியல்வாதிகள் மிகவும் சக்திவாய்ந்தவர்கள் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அவர்கள் அடிமட்டத்தில் என்ன செய்தார்கள் என்று மக்களுக்குத் தெரிவதில்லை. அரசியல் என்பது சதுரங்கம் விளையாடுவது போன்றது. உங்களது நண்பர்கள் உங்களது எதிரியாக மாறலாம். உங்களது உயிருக்கு அச்சுறுத்தலாக அமையலாம். இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் அரசியல்வாதிகள் குறித்து கணித்துவிடுகிறோம். அவர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறார்கள் என்பதை மறந்துவிடுகிறோம்" என்று தெரிவித்தார்.

கங்கனா ரணாவத்
கங்கனா ரணாவத்

இதற்கிடையே பாலிவுட் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் நடிகை கங்கனா மீது தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கை ரத்து செய்யமுடியாது என்று மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கங்கனா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது. இதில் தற்போது வழங்கப்பட்ட தீர்ப்பில் கங்கனா மனுவை கோர்ட் டிஸ்மிஸ் செய்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு