சமீபத்தில் நடிகர் அனுபம் கெர் நடித்து வெளியாகி இருக்கும் படம் `தி காஷ்மீர் பைல்ஸ்'. பாஜக ஆளும் மாநில அரசுகள் படத்திற்கு வரிச்சலுகை வழங்கி வருவதோடு படத்தை வெகுவாகப் பாராட்டி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி பாஜக பாராளுமன்றக் குழு கூட்டத்தில் அனைவரும் `தி காஷ்மீர் பைல்ஸ்' படத்தை பார்க்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதில் ஒரு படி மேலே சென்று அரசு ஊழியர்கள் அனைவரும் தி காஷ்மீர் பைல்ஸ் படத்தை பார்க்கவேண்டும் என்று கூறி அசாம் அரசு அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது. அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தனது அமைச்சரவை சகாக்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் சென்று கவுகாத்தியில் உள்ள திரையரங்கில் இப்படத்தை பார்த்தார். பின்னர் சர்மா அளித்த பேட்டியில் படத்தை வெகுவாகப் பாராட்டினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதோடு அரசு ஊழியர்கள் அனைவரும் இப்படத்தை பார்க்கவேண்டும் என்றும், மறக்காமல் படம் பார்த்த பிறகு டிக்கெட்டை மறுநாள் தங்களது அதிகாரிகளிடம் கொண்டு வந்து தாக்கல் செய்யவேண்டும் என்றும், அரசு ஊழியர்கள் இப்படத்தை காண்பதற்காக அரை நாள் விடப்படுவதாக முதல்வர் சர்மா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அசாமில் படத்திற்கு கேளிக்கை வரி விதிக்கப்படுவதில்லை என்பதால் தி காஷ்மீர் பைல்ஸ் படத்திற்கு வரி விலக்கு அளிக்கவேண்டிய அவசியம் இல்லை என்றும் முதல்வர் சர்மா குறிப்பிட்டுள்ளார்.