Published:Updated:

`கான்'களை விஞ்சும் `மான்’ - யார் இந்த ஆயுஷ்மான்?

"என் முதல் படம் வெளியான பிறகு, நான் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு என்னிடம் அப்போது இல்லை. அதுதான் அடுத்தடுத்த தோல்விகளுக்குக் காரணமாக அமைந்தது" - ஆயுஷ்மான் குரானா

National Award winner Ayushmann Khurrana
National Award winner Ayushmann Khurrana

அண்மைக் காலங்களில், பாலிவுட் பாட்ஷாக்களாகக் கருதப்படும் ஷாருக் கான், சல்மான் கான் போன்றவர்களின் படங்கள்கூட ரசிகர்களின் வரவேற்பைப் பெறவும், வசூலைக் குவிக்கவும் தவறுகின்றன. ஆனால், ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான 'அந்தாதுன்', 'பதாய் ஹோ', ‘ஆர்டிகள் 15’ திரைப்படங்கள் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றன. இவை மூன்றுமே தமிழில் விரைவில் ரீமேக் செய்யப்படவிருக்கின்றன என்பது கூடுதல் தகவல். வசூலை மட்டும் குவிக்காமல், தற்போது ’அந்தாதுன்’ படத்துக்காக, சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுவிட்டார். கான்களை விஞ்சும் மானாக இருக்கும் இந்த ஆயுஷ்மான் யார்?

Vicky Donor
Vicky Donor

சண்டிகரில் ஒரு ஜோதிடருக்கு மகனாகப் பிறந்தவர்தான் ஆயுஷ்மான். சிறு வயதில் இருந்தே அவருக்கு சினிமா மீதுதான் ஆர்வம். தான் பார்த்து சிலாகித்த படங்களில் வரும் கதாநாயகன் போல ஒரு நாள் தானும் நடிகன் ஆக வேண்டும் என நினைத்தார். ஒரு சாதாரண நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்த ஆயுஷ்மானுக்கு பாலிவுட்டின் இரும்புக் கதவுகள் அவ்வளவு எளிதில் திறக்கவில்லை. 20 வயதில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கெடுத்து வெற்றி பெற்றார். அதன் பிறகு, ஒரு நாடகக் குழுவில் சேர்ந்து அவர்களோடு ஐந்து ஆண்டுகள் பயணித்தார். தன்னை ஒரு சிறந்த நடிகனாக மாற்றியதில் பெரும் பங்கு நாடகங்களுக்கு உண்டென பல இடங்களில் அவர் குறிப்பிட்டுள்ளார். பிறகு, டெல்லியில் ஒரு வானொலியில் ஆர்.ஜே-வாகப் பணிபுரிந்த ஆயுஷ்மானுக்கு, 2008-ம் ஆண்டு தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. தனக்குக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் வெற்றிக்கான படிகளாக மாற்றி பல முயற்சிகளோடு முன்னேறினார். அந்த முயற்சிகளின் பலனாக 2012-ல் ஷூட்ஜித் ஷிர்க்கார் இயக்கத்தில் வெளியான 'விக்கி டோனர்' படம் மூலமாக பாலிவுட்டில் கதாநாயகனாக அறிமுகமானார். முதல் படத்திலேயே விந்தணு தானம் செய்பவராக நடித்த ஆயுஷ்மானுக்கு பல தரப்பிலிருந்து பாராட்டுக்களும் விருதுகளும் குவிந்தன. ஆனால், அதன் பிறகு பாலிவுட் வாழ்க்கை அவர் நினைத்ததுபோல் அமையவில்லை.

அடுத்தடுத்து அவர் நடித்த மூன்று படங்கள் தோல்வியடைந்தன. "என் முதல் படம் வெளியான பிறகு, நான் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு என்னிடம் அப்போது இல்லை. அதுதான் அடுத்தடுத்த தோல்விகளுக்குக் காரணமாக அமைந்தது" என ஒரு பேட்டியில் தெரிவித்தார் ஆயுஷ்மான். தோல்விப் பட நாயகன் என்ற முத்திரையிலிருந்து அவரை விடுவித்தது 2015-ம் ஆண்டு வெளியான 'தம் லகா கே ஆயிஷா' திரைப்படம். விருப்பமில்லாமல் குண்டான பெண்ணைத் திருமணம் செய்து, பிறகு, அவளைப் புரிந்துகொள்ளும் கணவராக நடித்திருந்தார் ஆயுஷ்மான். இந்தப் படத்தின் வெற்றி அவர் வாழ்க்கையின் அடுத்த இன்னிங்க்ஸை தொடங்கி வைத்தது. அதன் பிறகு தனக்கென ஒரு தனி ரூட்டைப் பிடித்துக்கொண்டு பாலிவுட்டில் வலம் வரத் தொடங்கினார்.

Vikatan
Badhaai Ho
Badhaai Ho

சமூகத்தில் நாம் பேசத் தயங்கும் பேச மறுக்கும் விஷயங்களை தன் படங்களின் கதைக்களமாக மாற்றிக்கொண்டார் ஆயுஷ்மான். அந்த வரிசையில் தமிழில் வெளியான 'கல்யாண சமையல் சாதம்' படத்தின் இந்தி ரீமேக்கான ’ஷுப் மங்கள் சாவ்தன்’ படத்தில் நடித்தார். இந்தப் படம் மூலம்தான், ஆயுஷ்மான் எந்த மாதிரியான கதாபாத்திரங்களிலும் நடிப்பார் என்கிற கருத்து பரவலானது.

பிறகு, தான் இதுவரை நடிக்காத த்ரில்லர் ஜானரில் ஒரு படம் பண்ண வேண்டும் என நினைத்தார். அப்படி அவருக்கு அமைந்த படம்தான் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளிவந்த 'அந்தாதுன்'. பார்வை இல்லாத ஒரு பியானோ கலைஞனாக ஆயுஷ்மான் நடித்த அந்தக் கதாபாத்திரம் அவருக்கு பாராட்டுகளை மட்டுமன்றி சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் தற்போது பெற்றுத் தந்திருக்கிறது.

Vikatan
Andhadhun
Andhadhun

தன்னுடைய அப்பா அம்மாவுக்கு மீண்டும் ஒரு குழந்தை பிறக்கப் போகிறது என அறிந்து திகைக்கும் மகனாக 'பதாய் ஹோ' படத்தில் நடித்திருந்தார் ஆயுஷ்மான். நாம் பேசவே தயங்கும் இந்த விஷயத்தை குடும்பம் குடும்பமாகப் பார்த்து ரசிக்கும் ஒரு காமெடி படமாக நமக்கு தந்தார் இயக்குநர் அமித் ஷர்மா. படத்தில் தனக்கான முக்கியத்துவம் குறைவாக இருந்தாலும் ஒரு நல்ல படத்தில் தானும் ஒரு பங்காக இருக்க வேண்டுமென ஆயுஷ்மான் நினைத்தார்.

நடிப்பு மட்டுமன்றி ஒரு பாடகராகவும் பாலிவுட்டில் வெற்றி வாகை சூடியவர் ஆயுஷ்மான். தனக்குள் இருக்கும் எழுத்து ஆர்வத்தை அவ்வப்போது கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் சமூக வலைதளங்களில் வெளியிடுவார். இதற்கென அவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இணையத்தில் உள்ளது.

Article 15
Article 15
தேவை கருணை அல்ல; நீதி! - ARTICLE 15

சமீபத்தில் வெளிவந்த 'ஆர்டிகள் 15' திரைப்படத்தில் சாதிய கொடுமைகளுக்கு எதிராகப் போராடும் ஒரு போலீஸாக நடித்திருந்த ஆயுஷ்மான், தன் படங்கள் ஏதாவதொரு சமூக பிரச்னைக்கு எதிராகக் குரல் எழுப்பவதை விரும்புவதாகவும் அதை ஒரு நல்ல படமாகத் தருவதில்தான் தனக்கு மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார். தன் படங்களில் எப்போதும் கதைதான் முக்கியம் என நினைக்கும் ஆயுஷ்மான், இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத முகமாக மாறி வருகிறார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ’நீங்கள் ஒரு நட்சத்திர நாயகனாக உயர்வதில் விருப்பமில்லையா’ என்ற கேள்விக்கு, ’கண்டிப்பாக இல்லை’ என மறுக்கும் ஆயுஷ்மான், தான் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்கும் வரை தன்னை கண்டிப்பாக மக்கள் ரசிப்பார்கள் என நம்பிக்கையோடு கூறுகிறார். நம்பிக்கையோடு வெற்றிப் பயணம் தொடரட்டும். வாழ்த்துகள் ஆயுஷ்மான்!