பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஸ்டார் அல்ல நடிகன்..!

Ayushmann Khurrana
பிரீமியம் ஸ்டோரி
News
Ayushmann Khurrana

சூப்பர் ஸ்டார்கள் ஓவர்நைட்டில் உருவாகிவிடலாம். வசூல் சாதனைகளே அதற்கு போதும். ஆனால், ஒரு நடிகன் உருவாவது அவ்வளவு சுலபமல்ல.

தற்கு வசூல் சாதனையையும் மீறி நிறைய பாசிட்டிவ் விமர்சனங்கள் வேண்டும். பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர், அவரை ‘ஸ்டார் மெட்டீரியல் இல்லை’ என்றே குறிப்பிட்டார். ஆனால், தற்போது எல்லாவற்றையும் மாற்றி தொடர்ச்சியாக ஆறு ஹிட், தேசிய விருது என கலக்கிக்கொண்டு இருக்கிறார் இந்த சண்டிகர் மாநில நடிகர். ஆயுஷ்மான் குரானா!

ஆயுஷ்மான் நடிகராக மட்டுமல்லாமல் அதனூடே பணம் பண்ணும் வித்தையையும் காம்போவாக கொண்டுவரும் மேட்ச் வின்னர்! இவை எல்லாவற்றையும் கடந்து இப்போதிருக்கும் சூழலில் எதை உரத்துப் பேச வேண்டுமோ, அதை தயவு தாட்சண்யமின்றி பேசுபவர், எழுதுபவர்.

movies
movies

சில வருடங்களுக்கு முன்பு, ரன்பீர் கபூர் பாலிவுட்டில் அசைக்கமுடியாத நடிகனாக வலம் வந்தார். ஆனால், ஏனோ, பின்னாளில் அவரின் சில படங்கள் சரியாக ஓடத் தவறின. அப்போதே அவர் ‘மெதட் ஆக்டர்’ எனப் பெயர் எடுத்துவிட்டாலும் தற்போதைய ‘ஏ தில் ஹை முஷ்கில்’, ‘சஞ்சு’ போன்ற படங்கள்தான் அவரை ஒரு கமர்ஷியல் நடிகராக நிலைநிறுத்தியுள்ளன.

ஆயுஷ்மானைவிட ரன்பீர் சிறந்த நடிகர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், ஆயுஷ்மான் ஒரு மேஜிக் செய்கிறார். அது அவருக்கு மட்டுமே கைவருகிறது. ஆம், ஸ்கிர்ப்ட்களைத் தேர்ந்தெடுக்கும் நேர்த்தி! ஆயயுஷ்மானின் கடைசி 6 படங்களை எடுத்துகொண்டால் எல்லாமே வித்தியாசமான படங்கள்தான். வேறுவேறு ஜானர்கள்தான். தற்கால சூப்பர்ஸ்டார்களைப் போலவே ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராகத் தொடங்கி, பின்பு தொகுப்பாளராகி, சில காலம் மேடை நாடகங்களில் நடித்து, அதையே விசிட்டிங் கார்டாக வைத்து ஹீரோவானவர்தான் ஆயுஷ்மான். முதல் படமே ஷூஜித் சர்கார் இயக்கிய ‘விக்கி டோனர்’. சொகுசு வாழ்க்கை வாழ, தன் விந்தணுவை பணத்திற்காகத் தானம் செய்யும் ஜாலி இளைஞன்.

( நிஜ வாழ்விலும் ஆயுஷ்மான் ஒரு விந்தணுக் கொடையாளர்). முதல் படமாக இப்படியொரு ஸ்க்ரிப்டைத் தேர்வு செய்வதெல்லாம் சேவாக் முதல் பாலில் சிக்ஸ் அடிக்க முற்படுவதைவிடவும் ரிஸ்க்கான விளையாட்டு. ஆனால், ஆயுஷ்மான் ஜெயித்தார். இந்தியா அந்தப் படத்துக்கு ‘வாவ்’ம் ஆயுஷ்மானுக்கு ‘ஹார்ட்டின்’னையும் அள்ளித் தெளித்தது. ‘ஃபிலிம்பேர்’ விருது பெறும் அளவுக்கு படத்தில் பாடலும் பாடி அசத்தினார் ஆயுஷ்மான்.

ஆனால், எல்லா நடிகர்களுக்கும் வரும் சோதனைக் காலம் ஆயுஷ்மானுக்கும் வந்தது. அடுத்தடுத்து மூன்று படங்கள் தோல்வி.

அவர் தேங்கி நிற்கவில்லை. அடுத்த படத்தில் தன்னைவிட எடை அதிகமுள்ள பெண்ணைக் காதலிக்கும் வேடம். பெண் ரசிகைகளின் இதயங்களில் இடம்பிடித்தார்.

ஆயுஷ்மான் குரானா
ஆயுஷ்மான் குரானா

பிறகு என்ன நினைத்தாரோ நடிப்புக்கு இரண்டு வருடங்கள் லீவு போட்டுவிட்டு காணாமல் போனார். கம்பேக் என்று 2017-ல் நடித்த ‘மேரி பியாரி பிந்து’ ஃபெயிலியர். அடுத்தடுத்து இரண்டு ரொமான்டிக் காமெடி படங்கள் கொடுத்து, ‘வந்துட்டேன்யா திரும்ப’ என்று நிரூபித்தார். தமிழில் வெளிவந்த ‘கல்யாண சமையல் சாதம்’ படத்தை பாவ் பஜ்ஜி சால்னாவாக்கி இந்தியில் ஹிட் அடித்தார். அவ்வளவு ஏன், 2020ல் இதன் சீக்குவல் ஒன்றில் நடிக்கவிருக்கிறார் ஆயுஷ். அதில் ஆயுஷ் தன்பால் ஈர்ப்பு கொண்டவர்.

2018-ல் இருந்துதான் வேறு பாதையில் பயணிக்க ஆரம்பித்தார் ஆயுஷ். பரீட்சார்த்தப் பாதை இது. ‘அந்தாதுனி’ல் விழிச்சவால் கொண்ட, அதே சமயம் அப்படி இல்லாத, சவாலான நாயகன் வேடம் ஏற்றார். இயக்குநர் ஸ்ரீராம் ராகவனின் சாய்ஸ் முதலில் ஆயுஷ் இல்லை. ஆனால், ஆயுஷ் தானாகவே ஆஜராகிறார். ஆடிசனில் பங்குகொள்கிறார். ஆயுஷ் வெற்றி பெறுவது இங்குதான். தனக்கான கதைகளைத் தேடும் அந்த தீரா வேட்கை. படத்துக்காக பியானோ வாசிக்கவும் கற்றுக்கொண்டார். வாசிக்கும் போது இசையும் கீ நோட்டும் சரியாக இருக்க வேண்டும் என்பதுதான் ஆயுஷின் முதல் குறிக்கோள். இரண்டாவதாக கண் பார்வையற்றவராக நடிக்க முழுவதுமாக லென்ஸ் வைத்து கண்களை மறைத்திருந்தார்.

சீனியர் தபு, சிறந்த நடிகை ராதிகா ஆப்தே என்று படத்தில் போட்டிகள் இருந்தாலும் ஆயுஷ்மானுக்குத் தேசிய விருதும், ஃபிலிம்ஃபேர் விருதும் தேடி வந்தன. மேலும், சிறந்த இந்திப் படம், சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதுகளையும் படம் அள்ளியது.

இதில் விட்டுப்போன தேசிய விருதுகளை அதே வருடம் வெளியான அவருடைய ‘பதாய் ஹோ’ பெற்றது. 25 வயதான நாயகன்... தன்னுடைய தாய் கர்ப்பம் எனத் தெரிந்தால் என்ன செய்வான்? அவன் இந்தச் சமூகத்தை எப்படி எதிர்கொள்வான்? இதுதான் ‘பதாய் ஹோ’.

‘ரா ஒன்’, ‘முல்க்’ படங்களை எடுத்த அனுபவ் சின்ஹா, ‘ஆர்டிகள் 15’ என ஆயுஷ்மானுடன் சட்டப் புத்தகத்தைப் புரட்டினார். அனுபவ் சின்ஹாவையும் வலிந்து ஆயுஷ்தான் போய்ப் பார்க்கிறார். இருவரும் அடுத்து செய்ய வேண்டிய ரொமான்டிக் காமெடிப் படத்தை ஓரம் வைத்துவிட்டு அனுபவ் பாதி எழுதி வைத்திருந்த ‘ ஆர்ட்டிக்கிள் 15’ படத்தை எடுக்கலாம் என ஐடியா தருகிறார் ஆயுஷ்.

ஸ்டார் அல்ல நடிகன்..!

உத்திரப்பிரதேச கிராமங் களில் ஊடுருவியிருக்கும் சாதிவெறி, தலித் சிறுமிகளை எப்படி சிதைத்தது என்பதை முகம் அதிரச் சொன்னது ‘ஆர்ட்டிக்கிள் 15’.

இவ்வளவு சீரியஸாக ஒரு படத்தைக் கொடுத்துவிட்டு, இதே வருடம் ‘ட்ரீம் கேர்ள்’ என்று கிச்சுகிச்சு மூட்டியிருக்கிறார். பெண் குரலில் பேசும் கால் சென்டர் ஊழியர் கதாபாத்திரத்தில் ஆயுஷ் செய்தது 18 பிளஸ் வசனக் காமெடி. செப்டம்பரில் வெளியான படம் 200 கோடி வசூலை நெருங்கிவிட்டது. படத்தின் பட்ஜெட் வெறும் 30 கோடிதான்!

நவம்பரில் ஆயுஷ்மான் ‘பாலா’வாக களமிறங்க விருக்கிறார். அதில் அவருக்கு இளம் வயதிலேயே முன்பக்கத் தலைமுடியை இழந்து தவிக்கும் அப்பாவி கதாபாத்திரம். விக் மாட்டிக்கொள்ளாமல் தலையையே வழுக்கையாக மாற்றியிருக்கிறார் ஆயுஷ்மான்.

பெர்சனல் வாழ்க்கையிலும் ஆயுஷ் ஹீரோதான்! ‘அந்தாதூன்’ பட ஷுட்டிங்கின் போது, அவரது மனைவி தாஹிராவுக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வருகிறது. ஆயுஷ் துவண்டுவிடவில்லை. அறுவைச்சிகிச்சை முடிந்து முடிகளற்ற, வடுக்களுடன் கூடிய தாஹிராவின் படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு, ஹார்ட்டின்களை அள்ளினார். தற்போது நடித்துக் கொண்டிருக்கும் பாலாவுக்குப் பிறகு பாலிவுட்டுக்கு சில மாதங்கள் குட்பை சொல்கிறார் ஆயுஷ்மான். ஆறு ஹிட் படங்கள். தன் பக்கம் காற்றடிக்கிறது என்பதை அறியாதவர் அல்ல அவர். “ ஆனால், என் குழந்தை வளர்ந்து வருகிறான். எனது மனைவிக்கு எனது நேரம் தேவைப்படுகிறது. . ஆதலால் சில மாதங்கள் கட்டாய ஓய்வு’’ என அறிவித்திருக்கிறார்.

ஆயுஷ்மான் திறமையான கலைஞர் மட்டும் அல்ல; அரசியலுணர்வு கொண்ட நடிகரும்கூட.

‘ஆர்ட்டிக்கிள் 15’ படத்தில் நடித்தது ஏதோ பட வாய்ப்பு என்பதால் மட்டும் அல்ல, சாதியத்துக்கு எதிரான தன் அழுத்தமான கருத்துகளையும் முன்வைப்பவர் ஆயுஷ்மான். “பள்ளிகள், கல்லூரிகள் என எல்லா இடங்களிலும் சாதி, மதப்பிரச்னை விரவிக் கிடக்கிறது. கிராமப் புறங்களில் வெளிப் படையாகவே இருக்கிறது. நகர்ப்புறங்களில் நாம் கண்களை மூடிக்கொள்கிறோம் அவ்வளவே” என்கிறார்.

மத்திய அரசின் இந்தித் திணிப்புக்கு எதிராக, பாலிவுட்டில் இருந்து கொண்டே துணிச்சலாகக் குரல்கொடுத்தார்.

“இந்தியை எப்போதும் பேசாத வடகிழக்கு மாநிலங் களிலும் தென்னிந்தியாவிலும் இந்தியைத் திணிப்பது வேடிக்கை. இந்தியில் பெர்சிய,அரேபிய கலப்பிருக்கிறது, திராவிட மொழிகள்தான் பரிசுத்தமானவை. உலகின் தொன்மையான மொழி தமிழ்’’ என்பவர், “நம்மிடம் ஒரு மிகப்பெரும் தேசம் இருக்கிறது. இந்தியாவின் பன்முகத்தன்மை தான் அதன் பெருமை. ஈகோக்களை புறந்தள்ளிவிட்டு அனைவரையும் அவர்களுக்கு பிடித்ததைச் செய்ய விடுங்கள்” என முடிக்கிறார். அதுதான் ஆயுஷ்மான்!