Published:Updated:

"மனதார மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்!"- வைரலாகும் ஆமிர் கானின் வீடியோவின் பின்னணி என்ன?

ஆமிர் கான்

நடிகர் ஆமிர் கான் மன்னிப்புக் கேட்கும் வண்ணம் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

"மனதார மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்!"- வைரலாகும் ஆமிர் கானின் வீடியோவின் பின்னணி என்ன?

நடிகர் ஆமிர் கான் மன்னிப்புக் கேட்கும் வண்ணம் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Published:Updated:
ஆமிர் கான்
ஆமிர் கான் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் `லால் சிங் சத்தா'. இப்படம் 1994-ல் வெளியாகிச் சிறந்த திரைப்படம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்ற `Forrest Gump' என்ற ஹாலிவுட் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது.

இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகியிருக்கும் இப்படத்திற்குப் பல்வேறு எதிர்ப்புகள் கிளப்பின. குறிப்பாக, ஆமிர் கான் முன்னர் கொடுத்திருந்த பேட்டி ஒன்றில் நாட்டின் சகிப்புத்தன்மை குறித்து பேசியது, 'PK' படத்தில் மதங்கள் குறித்தும், கடவுள் குறித்தும் அமைந்திருந்த காட்சிகள் உள்ளிட்ட காரணங்களுக்காக ஆமீர் கானின் படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று ஒரு சிலர் சர்ச்சைகளைக் கிளப்பியது இதற்கு முக்கியக் காரணங்களாக இருந்தன.

இதைத் தொடர்ந்து படத்தில் லாஜிக் மீறல்கள் இருக்கின்றன, இந்திய ராணுவம் தவறாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்று பல சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் வரிசைகட்டி வர ஆரம்பித்தன. இதனால் 'லால் சிங் சத்தா' திரைப்படம் பல்வேறு எதிர்ப்புகளைச் சந்தித்தது. படத்தின் வசூலும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

லால் சிங் சத்தா
லால் சிங் சத்தா

இந்நிலையில் ஆமிர் கானின் தயாரிப்பு நிறுவனத்தின் பக்கத்தில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், "நாம் அனைவரும் மனிதர்கள், எனவே நிச்சயமாகத் தவறுகள் செய்வோம். சில சமயங்களில் நம் வார்த்தைகளாலும், செயல்களாலும், அறியாமைகளாலும் தவறுகள் நிகழும். நமது நகைச்சுவை கூட சிலரைக் காயப்படுத்திவிடும். அப்படி நான் உங்கள் உணர்வுகளை எப்போதாவது காயப்படுத்தியிருந்தால் உண்மையாக என் உள்ளத்திலிருந்து மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆமிர் கான் வருடா வருடம் ஜெயின் திருநாளான பர்யூசன் பர்வத்தின் போது 'Micchami Dukkadam' என இப்படியான வீடியோ அல்லது போஸ்ட் பதிவு செய்வது வழக்கம் என்கிறார்கள் பாலிவுட் தரப்பினர். இதற்கு அர்த்தம் "உங்களை அறிந்தோ அறியாமலோ நான் காயப்படுத்தியிருந்தால் உளப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறேன்" என்பதுதான்.

இந்த வருடம், இந்த வீடியோ முன்னர் ஒருமுறை வெளியிடப்பட்டு, அதன் பின்னர் நீக்கப்பட்டு, பின்னர் மீண்டும் வெளியாகியிள்ளது. இருப்பினும், இது தொடர்பான பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதனால் நெட்டிசன்கள் பலரும் "இது உண்மையான வீடியோ இல்லை, அதில் இருப்பது நடிகர் ஆமிர் கானின் குரலும் இல்லை. ஆமிர் கானின் இணையதளப் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டுவிட்டன" என்று பதிவிட்டு வருகின்றனர்.

ஏற்கனவே `Boycott Bollywood' என்ற சர்ச்சைகளினால் பாலிவுட் வட்டாரங்களில் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே ஆமிர் கான் படம் தோல்வி அடைந்ததற்காக மன்னிப்பு கேட்கிறாரா, தனது பழைய பேட்டிக்காக மன்னிப்பு கேட்கிறாரா அல்லது பொதுவாக ஜெயின் திருநாள் தொடர்பாகப் பதிவு செய்திருக்கிறாரா என்பது குறித்து தெளிவான விளக்கம் இல்லை.