Published:Updated:

ரசிகர் தந்த கடிதம்... அமிதாப் பச்சன் அரசியலை விட்டு வெளியேறிய கதை! #HBDAmitabhBachchan

``கலைஞர்கள் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக இதை எதிர்கொண்டே ஆக வேண்டும். மக்கள் எங்களை நேசிக்க வேண்டும் என எங்களின் வாழ்நாளைச் செலவிடுகிறோம். ஆனால்..."

Amitabh Bachchan
Amitabh Bachchan

``நடிகர் சிரஞ்சீவி ஒருநாள் என்னைப் பார்க்க வந்திருந்தார். அப்போது, தான் அரசியலில் ஈடுபட இருப்பதாக அவர் கூறினார். அந்தத் தவற்றைச் செய்ய வேண்டாம் என நான் எடுத்துக் கூறினேன். ஆனால், அவர் கேட்கவில்லை. மீண்டும் ஒருநாள் என்னிடம் வந்தார். ‘உங்கள் பேச்சைக் கேட்காமல் நான் அரசியலில் நுழைந்தேன். ஆனால், இப்போது அதிலிருந்து விலகிவிட்டேன்’ என்றார்.

Chiranjeevi
Chiranjeevi

`` `அரசியலில் நுழைய வேண்டாம்' என நடிகர் ரஜினிக்கும் நான் அறிவுரை கூறினேன். அவரும் என் பேச்சைக் கேட்கவில்லை” என சைரா நரசிம்ம ரெட்டி திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் பேசினார்.

அமிதாப் ஏன் அப்படிச் சொன்னார். பிரபலமான திரைப் பிரபலங்கள் அரசியலுக்கு வர விரும்பினால், அவர்களுக்கு முதல் அறிவுரை அமிதாப்பிடம் இருந்துதான் பறக்கிறது. அதற்கான காரணம்தான் என்ன?

அமிதாப்பின் இந்த அறிவுரைகளுக்குப் பின்னால் ஒரு வரலாறு இருக்கிறது. அவரின் சொந்த அனுபவமும் இருக்கிறது. அதைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்பாக அமிதாப்பின் 77-வது பிறந்தநாளான இன்று, அவரைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

இந்தியாவின் அதிக எம்.பி தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத்தில் ஹரிவன்ஷ் ராய் பச்சன் மற்றும் தேஜி பச்சன் தம்பதியருக்கு மகனாக, அக்டோபர் மாதம் 11-ம் தேதி, 1942-ம் ஆண்டில் பிறந்தவர் அமிதாப். அவரின் தந்தை ஹரிவன்ஷ் ராய் பச்சன், இந்தி எழுத்தாளரும் கவிஞரும் ஆவார். அமிதாப்புக்கு முதலில் `இன்குலாப்’ எனப் பெயரிட்டார் ஹரிவன்ஷ் ராய் பச்சன். பின்னர், அவரின் நண்பரின் அறிவுரைப்படி, ‘அமிதாப்’ என மாற்றியிருக்கிறார். அப் என்றால் ‘நிலையான ஒளி’ என்று பொருள்.

Amitabh Bachchan
Amitabh Bachchan

இளங்கலை அறிவியல் பட்டம் பெற்ற அமிதாப், கொல்கத்தாவில் உள்ள 'ஷா வாலஸ்' என்ற கப்பல் நிறுவனத்தில்தான் முதலில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். பின்னர் சினிமாவில் நுழைவதற்காக மும்பைக்குச் சென்றிருக்கிறார். முதலில் 'புவன் ஷோம்’ என்ற புகழ்பெற்ற திரைப்படத்தில், விவரணையாளராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து, 'சாத் ஹிந்துஸ்தானி’ என்ற படத்தில் முதல் முறையாகத் திரையில் அறிமுகமானார். அந்தப் படம், அவருக்குச் சிறந்த புதுமுகத்துக்கான தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது. அதற்குப் பிறகு, பாலிவுட்டில் அமிதாப்பின் கொடி பட்டொளி வீசிப் பறந்தது. இதுவரை ஏறத்தாழ 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். நடிகராக மட்டுமல்லாமல், பின்னணிப் பாடகர், திரைப்படத் தயாரிப்பாளர் தொலைக்காட்சித் தொகுப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர் அமிதாப் பச்சன்.

``என் நண்பர்களான ரஜினி, கமல் ரெண்டு பேருக்கும் என்னோட வேண்டுகோள் ஒண்ணுதான். அரசியல் வேண்டாம். It’s Not worth it. ஆனா, இதையெல்லாம் மீறி எவ்வளவு தோல்விகள், ஏமாற்றங்கள், கெட்டபெயர்கள் வந்தாலும் அசராமல் மக்களுக்காக ஏதாவது செஞ்சே ஆகணும்னு நினைச்சா, அரசியலுக்கு வாங்க; அரசியல்ல தைரியமா செயல்படுங்க. ஒருநாள் காலம் உங்களுக்கானதா மாறலாம்.’’
சிரஞ்சீவி

திரை உலகில் கொடிகட்டிப் பறந்த அமிதாப் பச்சன் அரசியல்வாதியாகவும் சில ஆண்டுகள் பரிணமித்தார். காந்தி குடும்பத்துக்கும், பச்சன் குடும்பத்துக்கும் இருந்த நீண்டகால நட்பே அவரை அரசியலுக்கு அழைத்து வந்தது. அமிதாப்பின் தாயார் தேஜி பச்சனும், இந்திரா காந்தியும் நெருங்கிய நண்பர்கள். அந்த நட்பின் தொடர்ச்சியாக, 4 வயதில் இருந்தே ராஜீவ்வும் அமிதாப்பும் நண்பர்களாக இருந்தனர். ராஜீவ் காந்தியுடனான பல்லாண்டுக்கால நட்பைக் கௌரவிக்கும் விதமாக, திரையுலக வாழ்வில் சற்று இடைவெளிவிட்டு, 1984-ம் ஆண்டில் அரசியலில் இறங்கினார் அமிதாப் பச்சன்.

Amitabh Bachchan
Amitabh Bachchan

காங்கிரஸ் கட்சியின் சார்பில், அலகாபாத் மக்களைவைத் தொகுதியில் வேட்பாளராகக் களமிறங்கினார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் பகுகுணாவைவிட 1,87,895 வாக்குகள் அதிகம் வாங்கி மிகப் பிரமாண்டமான வெற்றியைப் பதிவுசெய்தார். இத்தனைக்கும் அந்தத் தொகுதி லால் பகதூர் சாஸ்திரி, வி.பி.சிங், பா.ஜ.க மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி எனப் பல முக்கியத் தலைவர்கள் போட்டியிட்ட தொகுதி. ஆனால், அவர்கள் யாரும் செய்யாத சாதனையை, தன் முதல் தேர்தலிலேயே சாதித்துக் காட்டினார் அமிதாப். ஆனால், அந்தத் தேர்தலே அவரின் கடைசித் தேர்தலாகவும் மாறிப்போனது.

கலைஞர்கள் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக இதை எதிர்கொண்டே ஆக வேண்டும். மக்கள் எங்களை நேசிக்க வேண்டும் என எங்களின் வாழ்நாளைச் செலவிடுகிறோம். திடீரென அவர்களிடம் நீங்கள், என்னை விரும்புவதுபோல் என் அரசியலையும் விரும்ப வேண்டும் எனச் சொல்வது சரியான ஓர் அணுகுமுறை கிடையாது.
அமிதாப் பச்சன்

``நான் அரசியலுக்கு வந்தது உணர்ச்சிவேகத்தில் எடுத்த முடிவு. என் நண்பருக்கு உதவிசெய்யும் நோக்கில் அரசியலுக்குள் நுழைந்தேன். வெறும் உணர்ச்சி வேகத்தில் இங்கு எதையும் சாதிக்க முடியாது என்பதை இங்கு வந்தபிறகுதான் தெரிந்தது. அலகாபாத் மக்களுக்குக் நிறைய வாக்குறுதிகள் கொடுத்தேன். அதை என்னால் நிறைவேற்ற இயலவில்லை. அரசியலுக்கு நான் தகுதியானவன் அல்ல. அதனால் விலகுகிறேன்'' என 1987-ம் ஆண்டில் தன் எம்.பி பதவியை ராஜினாமா செய்தார் அமிதாப் பச்சன். அதேசமயம், ''ராஜீவ்வுடனான என் நட்பை நான் சிறிதளவும் இழக்கவில்லை'' என்றார்.

Amitabh Bachchan
Amitabh Bachchan

``ஹாலிவுட் நடிகர்கள், தேர்தல் நேரங்களில் தங்களின் அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவிக்கிறார்கள், ஆனால் பாலிவுட் நடிகர் அப்படி வெளிப்படையாக நடந்து கொள்வதில்லையே ஏன்?'' என ஒரு பத்திரிகை பேட்டி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு,

``என்னுடைய வேலை கேமராவுக்கு முன்னால் நடிப்பது மட்டுமே. என் கவனத்தை நான் திசைதிருப்ப விரும்பவில்லை.''
அமிதாப் பச்சன்

பாலிவுட் ரசிகர்களைவிட, ஹாலிவுட் ரசிகர்கள் மிகவும் முதிர்ச்சியானவர்கள். தேர்தல் வேலைக்காக ஒருமுறை நான் அஸ்ஸாம் சென்றிருந்தேன். அப்போது நான் சென்ற ஹெலிஹாப்டர் எதிர்க்கட்சியினரின் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது. போலீஸார் அங்கு வந்து உடனடியாக எங்களை கிளம்பச் சொன்னார்கள். அந்த நேரத்தில் ஓர் இளைஞர், ஹெலிகாப்டர் கண்ணாடியை உடைத்து என் கையில் ஒரு காகிதத்தைத் திணித்தார். அதில் 'நான் உங்களின் மிகத்தீவிரமான ரசிகன். நீங்கள் எங்களின் கவனத்தைத் திசைதிருப்புகிறீர்கள். நீங்கள் கண்டிப்பாக இங்கிருந்து வெளியேற வேண்டும்’ என அதில் எழுதப்பட்டிருந்தது’' என, தான் அரசியலில் இருந்து வெளியேறிதற்கான காரணங்களை விவரிக்கிறார் அமிதாப்.

Amitabh Bachchan
Amitabh Bachchan
Vikatan

அதன் பிறகு தன் தொழில் பார்ட்னர் அமர் சிங்குக்காக சமாஜ்வாடி கட்சியை ஆதரித்தது, அமிதாப்பின் மனைவி ஜெயாபச்சன் அந்தக் கட்சியில் இணைந்து ராஜ்யசபா எம்.பி-யானது எல்லாம் வேறு கதை.

நேரடியான அரசியல் பயணத்தில் அவருக்குக் கிடைத்த கசப்பான அனுபவங்கள்தாம், தன் சக திரைத்துறை நண்பர்களுக்கு அரசியல் ஆசை எழும்போதெல்லாம் 'அரசியல் வேண்டாம்' என வேண்டுகோள் விடுக்க வைத்துள்ளது. அதையும் மீறி வருபவர்களுக்கு வாழ்த்துகள் சொல்லவும் அவர் தவறியதில்லை. அவருக்கு மட்டுமல்ல, அவரால் அரசியல் வேண்டாம் என விடுக்கப்பட்ட வேண்டுகோளையும் மீறி, அரசியலுக்கு வந்த சிரஞ்சீவி, இப்போது ''ரஜினி, கமலுக்கு அரசியல் வேண்டாம்'' என சமீபத்தில் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

Chiranjeevi
Chiranjeevi

சிரஞ்சீவியின் கருத்து, அன்றைய நாளில் அனைத்து வட இந்தியத் தொலைக்காட்சிகளிலும் விவாதப் பொருளாக மாறியது.

அது குறித்து, சிரஞ்சீவியிடம் பத்திரிகையாளர் கேட்டபோதுதான் முந்திக்கொண்ட அமிதாப், ''நான் சிரஞ்சீவி அரசியலுக்கு வந்தபோதே வேண்டாம் என்றேன். அதையேதான் ரஜினிக்கும் சொன்னேன்'' என வருத்தத்தோடு தன் கருத்தைப் பதிவுசெய்தார்.

அமிதாப் என்னும் மாபெரும் கலைஞன் காலமுணர்ந்து, ரசிகர்களின் கருத்துக்கு மதிப்புக் கொடுத்து அரசியலிலிருந்து வெளியேறியதும், அந்த அனுபவத்தைச் சொல்லி தன் நண்பர்களை வழிநடத்துவதும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான்.