Published:Updated:

அமிதாப் பச்சனின் பாதுகாப்புக்குச் சென்றே ரூ.1.5 கோடி சம்பாதித்த கான்ஸ்டபிள்... திடீர் இடமாற்றம் ஏன்?

அமிதாப் பச்சனுடன் பாதுகாவலராக ஷிண்டே
அமிதாப் பச்சனுடன் பாதுகாவலராக ஷிண்டே

நடிகர் அமிதாப் பச்சனுக்கு 5 ஆண்டுகளாகப் பாதுகாப்புக்குச் சென்ற கான்ஸ்டபிள் ரூ.1.5 கோடி அளவுக்கு வருமானம் ஈட்டியிருப்பது தெரியவந்திருக்கிறது. அவர் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு மும்பை போலீஸார் எக்ஸ் பிரிவு பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர். இதனால் இரண்டு ஷிப்ட்களில் தலா இரண்டு ஆயுதம் தாங்கிய போலீஸார் எந்நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவது வழக்கம். அமிதாப் பச்சன் எங்குச் சென்றாலும் அவருடன் இவர்கள் செல்வது வழக்கம்.

கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து ஹெட் கான்ஸ்டபிள் ஜிதேந்திர ஷிண்டே அமிதாப் பச்சனுக்குப் பாதுகாப்பு கொடுத்துவருகிறார். அவர் தொடர்ந்து இடமாற்றம் செய்யப்படாமல் இருந்தார். இதனால் அமிதாப் பச்சனுக்கும் மிகவும் விசுவாசமானவராகவே மாறிவிட்டார். அது மட்டுமின்றி, ஷிண்டேயின் வருமானம் கடந்த 5 ஆண்டில் 1.5 கோடி ரூபாய் அளவுக்குச் சென்றுவிட்டது. இதற்குக் காரணம் அமிதாப் பச்சனும் ஷிண்டேயிக்குத் தாராளமாகப் பணம் கொடுத்ததுதான் என்கிறார்கள்.

அமிதாப் பச்சனுடன் பாதுகாவலராக ஷிண்டே
அமிதாப் பச்சனுடன் பாதுகாவலராக ஷிண்டே

இது குறித்த செய்தி வெளியானவுடன் ஷிண்டேயை வேறு ஒரு போலீஸ் நிலையத்திற்கு அதிரடியாக இடமாற்றம் செய்து மும்பை போலீஸ் கமிஷனர் ஹேமந்த் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து மூத்த ஐ.எ.எஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "கான்ஸ்டபிள் ஷிண்டேயின் வருமானம், சொத்து விபரங்கள் குறித்து விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டு இருக்கிறது. ஷிண்டே வேறு ஏதாவது வகையில் இரண்டாவது சம்பளம் வாங்குகிறாரா என்பது குறித்து விசாரிக்கப்படும். அரசு ஊழியர் வேறு எங்கும் இரண்டாவது சம்பளம் வாங்கக்கூடாது. கமிஷனர் தற்போது புதிய நடைமுறையைக் கடைப்பிடிக்க ஆரம்பித்து இருக்கிறார். அதன்படி ஒரு கான்ஸ்டபிள் ஒரே இடத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் வேலை செய்யக்கூடாது. அந்த அடிப்படையில் வழக்கமான முறையில்தான் ஷிண்டே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அக்ஷய் குமாரின் `பெல் பாட்டம்': கொரோனா கால மிஷனில் வெற்றி பெறுகிறாரா இந்த இந்தியன் ஜேம்ஸ் பாண்டு?

ஷிண்டேயின் மனைவி பெயரில் பாலிவுட் பிரபலங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கும் செக்யூரிட்டி ஏஜென்சி ஒன்று நடத்தப்பட்டு வருவதாகவும் எங்களுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. தற்போது அது குறித்து உறுதியான தகவல் கிடைக்கவில்லை. ஆனால் ஷிண்டேயிடம் அவரது வருமானம் மற்றும் சொத்து விபரம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். அவர் கொடுக்கும் விளக்கத்தின் அடிப்படையில்தான் அவருக்குச் சம்பளம் தவிர வேறு வழிகளில் வருமானம் வருகிறதா என்பது தெரிய வரும். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

அமிதாப் பச்சன்
அமிதாப் பச்சன்

ஷிண்டே அமிதாப் பச்சன் பாதுகாப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டாரா என்று கேட்டதற்கு, "ஆம் விடுவிக்கப்பட்டுவிட்டார். ஆனால் அவரை அமிதாப்பச்சன் பாதுகாப்பிலிருந்து விடுவிக்கவேண்டாம் என்று கோரி மும்பை காவல்துறைக்குக் கடுமையான அழுத்தம் வந்திருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு