ரிஷிகபூர், இர்ஃபான் கான் போன்ற ஆளுமைகளின் இழப்பைத் தாண்டி, பாலிவுட் இந்த வருடம் சந்தித்த மிகப்பெரிய பிரச்னை சுஷாந்த் சிங்கின் தற்கொலையும் அதன் தொடர்ச்சியாக எழுந்த ‘நெப்போட்டிசம்’ குறித்த விவாதம் மற்றும் போதைப் பொருள் மாஃபியா விசாரணையும்தான். கொரோனாவின் தாக்கம் ஒருபுறம் என்றால் இப்படியான பிரச்னைகள் பாலிவுட் எனும் கனவுத் தொழிற்சாலைக்கு மேலும் அழுத்தங்களைக் கொடுத்துள்ளன. இதிலிருந்து மீண்டுவர, பாலிவுட் பெரிதும் நம்பியிருக்கும் சில படங்களின் ஹாட்லிஸ்ட் இதோ...

பெல் பாட்டம் (Bell Bottom)
அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜேம்ஸ்பாண்ட் வகையறா இன்டர்நேஷனல் ஸ்பை த்ரில்லர். 1980-களில் நடக்கும் இந்தப் படம் முதலில் இதே பெயரைக் கொண்ட கன்னடப் படத்தின் ரீமேக் என்று சொல்லப்பட்டது. ஆனால், பின்னர் இது உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் படம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாணி கபூர், லாரா தத்தா, ஹுமா குரேஷி என மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். கொரோனா ஊரடங்குத் தளர்வுக்குப் பின்னர் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட முதல் பாலிவுட் படம் இதுதான். ஆகஸ்ட் 20, ஸ்காட்லாந்தில் தொடங்கப்பட்ட படம் வெறும் 40 நாள்களில் முடிக்கப்பட்டு ஒரு டீஸரும் அதற்குள் வெளியிடப்பட்டுள்ளது. டீஸரில் அக்ஷய் பெல் பாட்டம் பேன்டுடன் உலாவரும் கெட்டப் செம வைரல். தற்போது படத்தின் எடிட்டிங் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் ரிலீஸ் தேதி ஏப்ரல் 2, 2021 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதிபுருஷ் (Adipurush)
‘பாகுபலி’ பிரபாஸின் பாலிவுட் பிக் பட்ஜெட் என்ட்ரி இந்த ‘ஆதிபுருஷ்’. 400 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாகும் இப்படம் ராமரின் கதையைத் தழுவி எடுக்கப்படுகிறது. இந்தக் கொரோனா காலத்தில் லைவ் லொக்கேஷன்களைக் குறைத்து விர்ச்சுவல் ஒளிப்பதிவு முறையில் ஸ்டுடியோவுக்கு உள்ளேயே படம் எடுக்கப்படவுள்ளது. ஹாலிவுட்டின் பிரமாண்டங்களான ‘300’, ‘தி லைஃப் ஆஃப் பை’, ‘அவதார்’ போன்றவை இந்த முறையில் படமானவைதான். ராமராக பிரபாஸ் நடிக்க, வில்லனாக சயிஃப் அலி கானும், நாயகியாகக் கீர்த்தி ஷனோனும் நடிக்கிறார்கள். 400 கோடி பட்ஜெட் என்றாலும் அதில் பெரும்பங்கு VFX-க்குத்தான் என்கிறார் இயக்குநர் ஓம் ராவத். இவர் ஏற்கெனவே ‘ஹான்டட்’ என்ற 3D பேய் படத்தையும், அஜய் தேவ்கன் நடித்த ‘தன்ஹாஜி’ என்ற வரலாற்றுப் படத்தையும் எடுத்தவர். படத்தின் VFX பணிக்காக ‘அவதார்’ மற்றும் ‘ஸ்டார் வார்ஸ்’ போன்ற படங்களில் பணியாற்றிய கலைஞர்களைப் பாலிவுட்டுக்குக் கொண்டு வந்துள்ளார்கள். ‘சாஹோ’வில் விட்டதை பிரபாஸ் இதில் பிடிப்பார் என நம்புவோம்.

பிரம்மாஸ்த்ரா (Brahmastra)
இதைப் பாலிவுட்டின் பிரம்மாஸ்திரம் என்றே சொல்லலாம். ‘பாகுபலி’க்கே சவால்விடும் வகையில் மூன்று பகுதிகளாக எடுக்கப்படும் இந்தப் படத்தொடரில் முதல் படத்தின் பட்ஜெட்டே 150 கோடியைத் தாண்டுகிறது. ரன்பீர் கபூர், அலியா பட், அமிதாப் பச்சன், நாகார்ஜுனா, மௌனி ராய், கௌரவத் தோற்றத்தில் ஷாருக்கான் உள்ளிட்டோர் நடிக்க ஒரு முழு நீள ஆக்ஷன் ஃபேன்டஸி கலந்த காதல் கதை என இதைப் பற்றிக் கூறியிருக்கிறார் படத்தின் இயக்குநர் அயன் முகர்ஜி. பல்கேரியா, லண்டன், நியூயார்க், ஸ்காட்லாந்து மற்றும் இந்தியாவில் வாரணாசி எனப் பல்வேறு இடங்களில் கடந்த 3 வருடங்களாகப் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். சென்ற வருடக் கும்பமேளாவில் 150 டிரோன்களின் உதவியுடன் படத்தின் பெயரும் ரன்பீர் மற்றும் அலியாவின் கதாபாத்திரப் பெயர்களும் (சிவா - இஷா) வானில் விளக்குகளாக ஒளிரவிடப்பட்டன. திட்டமிட்டபடி முடிக்க முடியாமல்போன பணிகளால் படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கெனவே இரண்டுமுறை தள்ளிப்போனது. இந்த வருட டிசம்பரில் வெளியாகவிருந்த படத்தில், இன்னமும் VFX பணிகள் மீதமிருக்கும் நிலையில், தற்போது ஏப்ரல் அல்லது மே 2021-ல் படத்தை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள். படம் 3D மற்றும் IMAX-லும் வெளியாகவிருக்கிறது.

அத்ரங்கி ரே (Atrangi Re)
‘ராஞ்சனா’ (தமிழில் ‘அம்பிகாபதி’), ‘ஷமிதாப்’ போன்ற படங்களுக்குப் பிறகு தனுஷின் மூன்றாவது பாலிவுட் படம் ‘அத்ரங்கி ரே’. இந்த முறை அவருடன் அக்ஷய் குமார் மற்றும் சாரா அலிகான் ஆகியோர் இணைகின்றனர். கூடுதல் சிறப்பாக சாராவுக்கு இதில் டபுள் ரோல் என்கிறார்கள். ‘ராஞ்சனா’, மாதவன் மற்றும் கங்கனாவை வைத்து ‘தனு வெட்ஸ் மனு’ போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் L.ராய் இந்தப் படத்தை இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்காக தனுஷ் ஒரு பாடலும் பாடியிருக்கிறார். தனுஷ் மற்றும் சாரா அலிகான் நடிக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு மதுரையில் எடுக்கப்படுகிறது. ஏற்கெனவே இதன் ஒரு பகுதி வாரணாசியில் எடுக்கப்பட்ட நிலையில், மீதிக்காட்சிகள் மும்பை மற்றும் டெல்லியில் படமாகவிருக்கின்றன. காதல் கதையாக உருவாகும் இந்தப் படம் 2021 காதலர் தினத்தன்று வெளியாகவிருக்கிறது.

லால் சிங் சத்தா (Laal Singh Chaddha)
கொரோனாவால் எல்லாப் படங்களும் ஒரு சில மாதங்கள் தள்ளிப்போனால் முதன்முறையாக ஒரு வருடத்துக்கு ஒரேயடியாகத் தள்ளிப்போன படம் இதுதான். ஆம், ஆமீர்கான் நடிப்பில் உருவாகும் ‘லால் சிங் சத்தா’ 2020 கிறிஸ்துமஸுக்கு வெளியாக வேண்டியதாக இருந்து தற்போது 2021 கிறிஸ்துமஸுக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. டாம் ஹேங்க்ஸின் நடிப்பில் ஹாலிவுட்டில் பல ஆஸ்கர்களைக் குவித்த ‘ஃபாரஸ்ட் கம்ப்’ (Forrest Gump) படத்தை இந்திக்கு ஏற்றவாறு சில மாற்றங்கள் செய்து ரீமேக் செய்கின்றனர். ஆமீருக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்க, விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இது அவருக்கு முதல் இந்திப் படம். இவர்கள் தவிர மோனா சிங் மற்றும் நம்மூர் யோகிபாபுவும் நடிக்கின்றனர். ஷாருக்கான் கௌரவ வேடத்தில் தோன்றுகிறார். கொல்கத்தா, கேரளா, ஜெய்சால்மர், கோவா, இமாச்சலப்பிரதேசம் என இந்தியா முழுக்க பல்வேறு இடங்களில் படப்பிடிப்புகள் நடந்துள்ளன. பஞ்சாப் சிங் வேடத்தில் ஆமிர் தோன்றிய பர்ஸ்ட் லுக் பெரிய அளவில் வைரலானது.

கங்குபாய் கத்தியாவடி (Gangubai Kathiawadi)
பாலிவுட்டின் பிரமாண்ட இயக்குநர்களில் முக்கியமானவரான சஞ்சய் லீலா பன்சாலியின் அடுத்த படம். தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை ஆசிரியர் எனப் பன்முகங்களைக் கொண்ட இவரின் சமீபத்திய படம் பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பிய ‘பத்மாவத்’ என்பது நினைவிருக்கலாம். அலியா பட் நாயகியாக நடிக்க ஹுசைன் ஸைதி (Hussain Zaidi) எழுதிய ‘Mafia Queens of Mumbai’ என்ற புத்தகத்தை அடிப்படையாக வைத்து இந்த பயோகிராபி படம் எடுக்கப்படுகிறது. 1960-களில் பம்பாயின் காமத்திபுராவில் பாலியல் தொழில் நடத்திவந்த கங்குபாய் என்ற பெண்மணியின் கதையை இது பேசுகிறது. இளம்வயதில் தன் காதலனால் பாலியல் விடுதியில் விற்கப்பட்ட கங்குபாய் எப்படி காமத்திபுராவுக்கே பின்னாளில் ராணியானார் என்பதுதான் ஒன்லைன். இம்ரான் ஹாஸ்மி மற்றும் அஜய் தேவ்கான் ஆகியோர் கௌரவத் தோற்றத்தில் நடிக்கின்றனர். வழக்கம்போல சஞ்சய் லீலா பன்சாலியே படத்தின் பாடல்களுக்கு இசையமைக்கிறார். செப்டம்பர் 2020-ல் வெளியாக வேண்டிய படம், கொரோனாவால் தள்ளிப்போயிருக்கிறது.