Published:Updated:

`2 வருடப் புற்றுநோய்; திடீர் சுவாசக் கோளாறு’ - பழம்பெரும் நடிகர் ரிஷி கபூர் காலமானார்

ரிஷி கபூர்
ரிஷி கபூர்

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் ரிஷி கபூர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மும்பை மருத்துவமனையில் உயிரிழந்தார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகரும் தயாரிப்பாளராகவும் திகழ்ந்தவர் ரிஷி கபூர். இவர் பிரபல நடிகரான ராஜ் கபூரின் மகன். முதன்முதலாக தன் தந்தையின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக ஒரு பாடலில் தோன்றினார் ரிஷி கபூர். பின்னர், 1970-ம் ஆண்டு வெளியான ‘மேரா நாம் ஜோக்கர்’ என்ற படத்தில் தன் தந்தையின் இளவயது கதாபாத்திரத்தில் நடித்து இளம் நாயகனாகப் பாலிவுட்டில் அறிமுகப்படுத்தப்பட்டார்.

தந்தையுடன் ரிஷி கபூர்
தந்தையுடன் ரிஷி கபூர்

1973-ம் ஆண்டு வெளியான பாபி படம்தான் ரிஷி கபூர் ஹீரோவாகத் தோன்றிய முதல் படம். இதன் மூலம் இளைஞர்கள் மத்தியில் விரைவிலேயே பிரபலமானார் ரிஷி. தொடர்ந்து 1980-களில் வெளியான சாந்தினி படம் இவரைப் புகழின் உச்சத்துக்குக் கொண்டு சென்றது. அப்போது முதல் இதுவரை ரிஷி கபூர் 100-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். பின்னர் தன்னுடன் பல படங்களில் இணைந்து நடித்த நடிகை ரீத்து சிங்கை திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியருக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். ஒருவர் தற்போது இந்தியில் முன்னணி ஹீரோக்களின் பட்டியலில் உள்ள ரன்பீர் கபூர். மற்றொருவர் ரிதிமா கபூர்.

2018-ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரிஷி கபூர், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பல மாதங்கள் தொடர் சிகிச்சைக்குப் பிறகு கடந்த செப்டம்பர் மாதம்தான் இந்தியா திரும்பியுள்ளார். இதற்கிடையில் நேற்று இவருக்குத் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரிஷி, அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளார் 67 வயதான ரிஷி கபூர்.

மகனுடன் ரிஷி கபூர்
மகனுடன் ரிஷி கபூர்

இவரது இறப்பை கபூர் குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ரிஷி மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்தார். அவர் கடைசி வரையில் தன்னை பார்த்துக்கொண்ட மருத்துவர்களைக்கூட மகிழ்வித்தார். அவரை ஒரு புன்னகையுடன் நினைவுகூர விரும்புகிறோம், கண்ணீருடன் இல்லை. ரிஷி கபூரின் நலம் விரும்பிகள் மற்றும் ரசிகர்கள் ஊரடங்கு விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

`ஜுராசிக் பார்க்' பார்க்க காசில்லாதவர், `ஜுராசிக் வேர்ல்டு'-ல் நடித்த சாதனை! இர்ஃபான் கானுக்கு அஞ்சலி #RIP

ரிஷி கபூரின் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள், ரசிகர்கள் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தி வருகி்ன்றனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2 வருடங்களாகப் போராடி வந்த பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் நேற்று உடல்நிலை மோசமாகி உயிரிழந்தார். அவரின் மறைவு அதிர்ச்சியிலிருந்தே இன்னும் மீளாதா பாலிவுட்டுக்கு இன்று ரிஷி கபூரின் இறப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட்டில் கடந்த 2 நாளில் இரண்டு பெரிய நடிகர்கள் தொடர்ச்சியாக உயிரிழந்துள்ளது இந்தியத் திரையுலகை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு