Published:Updated:

பாலிவுட் பயோபிக்குகளில் சிறந்ததொரு படைப்பு, தவறவிடக்கூடாததொரு படம்... `சர்தார் உதம்' ஏன் ஸ்பெஷல்?

சர்தார் உதம்

தேசியவாதம் என்ற பெயரில் அடிப்படைவாதத்தைப் பூசி மெழுகும் பயோபிக்குகளுக்கு மத்தியில், தேசியவாதத்தையும், தேசபக்தியையும் அதன் அசல் தன்மை மாறாது காட்சிப்படுத்துகிறது இந்த 'சர்தார் உதம்'.

Published:Updated:

பாலிவுட் பயோபிக்குகளில் சிறந்ததொரு படைப்பு, தவறவிடக்கூடாததொரு படம்... `சர்தார் உதம்' ஏன் ஸ்பெஷல்?

தேசியவாதம் என்ற பெயரில் அடிப்படைவாதத்தைப் பூசி மெழுகும் பயோபிக்குகளுக்கு மத்தியில், தேசியவாதத்தையும், தேசபக்தியையும் அதன் அசல் தன்மை மாறாது காட்சிப்படுத்துகிறது இந்த 'சர்தார் உதம்'.

சர்தார் உதம்
பதின்பருவத்தையும், பால்யத்தையும், விளையாட்டுத் தனத்தையும் ஒரே நாளில் உடைத்து முதிர்ச்சியடைய வைக்கும் திறன் இழப்புகளுக்கு உண்டு. 'Trauma' எனப்படும் அது, நம் வாழ்வின் நோக்கத்தையே மாற்றி, அதுவரை நமக்கு இருக்கும் தனிப்பட்ட சித்தாந்தங்களையும் முற்றிலும் மடைமாற்றிவிட்டுவிடும். உதம் சிங்கின் வாழ்வையும் அந்த ஒரு சம்பவம், அந்த ஓர் இரவு புரட்டிப்போடுகிறது. காதலுடன், அந்த வயதுக்கே உரியத் துடிப்புடன் திரிந்த உதம், அதன் பின்னர்தான் போராளியாக மாறுகிறார். அவரின் இந்தப் பயணத்தைத்தான் சுவாரஸ்யமானதொரு சினிமாவாக விவரிக்கிறது அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கும் 'சர்தார் உதம்'.
சர்தார் உதம்
சர்தார் உதம்

ஒரு பெருங்குற்றம் நிகழ்த்தப்படுகிறது. ஊரடங்கை மீறி அமைதி வழியில் போராட உட்கார்ந்தவர்களைச் சுற்றி வளைத்து நகரவிடாமல் செய்கிறார்கள் ஆங்கிலேய இந்தியாவின் காக்கிகள். துப்பாக்கிகள் அந்தப் பெருங்கூட்டத்தை நோக்கி நீள்கின்றன. 'வார்னிங் கொடுக்கலாமே' என்ற வாதத்தைப் புறந்தள்ளி 'ஃபயர்' என்கிறார் கர்னல் டயர். தோட்டாக்கள் சீறிப் பாய்கின்றன. எதிரில் நிற்பவர்களின் கைகள், கால்கள், தலை, தோள் எனப் பல இடங்களைத் தோட்டாக்கள் துளைக்கின்றன. மரண ஓலங்கள் எதிரொலிக்கின்றன. பெண்கள், குழந்தைகளை அரவணைத்து ஆண்கள் நிற்க, அவர்களையும் மீறி துப்பாக்கிக் குண்டுகள் உயிர்ப்பலி வாங்குகின்றன. பலர் அங்கிருக்கும் கிணற்றில் குதிக்கிறார்கள். இன்னும் பலர் வழி ஏதேனும் இருக்குமா என்று ஓடுகிறார்கள். எல்லோரும் தரையில் வீழ்ந்தபின், காக்கிகள் கூட்டம் எதுவுமே நடக்காததுபோல அங்கிருந்து நகர்கிறது.

துயரம் இதனோடு முடியவில்லை. உதம் சிங்கும் நண்பர்களும் ஓடிவருகிறார்கள். கொஞ்சமேனும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் மனிதர்களைத் தேடுகிறார்கள். "யாராவது உயிரோட இருக்கீங்களா?" என்று தொடர்ந்து விரக்தியில் ஒலிக்கும் உதம் சிங்கின் குரல் இன்னமும் நம்மைச் சில்லிட வைக்கிறது. அழுகையில் தொடங்கும் அவரின் தேடல், அங்குக் கிடக்கும் பிணங்கள், தோட்டாக்கள், அரைகுறை உயிருடன் முனகுபவர்கள் என எல்லாவற்றையும் கண்டு விரக்தி நிலைக்குச் செல்கிறது. ஊரடங்கு அமலில் இருப்பதால் மூன்று சக்கர மர வண்டி ஒன்றில் மூன்று மூன்று பேராக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று தன்னால் முடிந்ததைச் செய்கிறார் உதம். ஒரு கட்டத்தில் அவரிடம் அழுவதற்குக் கண்ணீர் இல்லை. அணிந்திருந்த உடை எங்கும் ரத்தம் உரைந்திருக்கிறது. நதியில் முங்கி எழுகிறார். அமிர்தசரஸின் அந்தத் தெருக்கள், இத்தனை ஆண்டுகள் கழித்து, தற்போதும் அந்தப் பாதிப்பிலிருந்து மீளவேயில்லை.

சர்தார் உதம்
சர்தார் உதம்

கர்னல் ரெஜினால்ட் டயர்தான் இந்தக் காரியத்தைச் செய்தார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், டயர் இப்படி ஒரு மகாபாதகம் செய்ய அனுமதி கொடுத்தவர், தூண்டியவர், அப்போதைய பஞ்சாப் கவர்னர் மைக்கேல் ஓ.ட்வையர். கிளர்ந்தெழும் இந்தியர்களின் போராட்ட மனநிலையை திசைமாற்றி நாடு முழுவதும் அச்சத்தை விதைப்பதுதான் அவரின் நோக்கம். இதற்கெல்லாம் ட்வையர் பதில் சொல்லியாக வேண்டும். உதம் சுதந்திரப் போராட்டத்தில் பகத் சிங்குடன் இணைகிறார். ட்வையரைத் தேடி லண்டன் செல்கிறார். 21 ஆண்டுகள் காத்திருந்து, கேக்ஸ்டன் ஹாலில் ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த ட்வையரின் உயிரை, உதமின் துப்பாக்கி பறிக்கிறது.

'சர்தார் உதம்' படம் இந்தக் கொலையிலிருந்துதான் தொடங்குகிறது. கொலை செய்தவுடன் இங்கிலாந்து காவல்துறையால் கைதுசெய்யப்படும் உதமின் வாழ்வை ஃப்ளாஷ்பேக்கில் ஓடும் அத்தியாயங்களாக, ஒரு நான்-லீனியர் சினிமாவாகச் சிரத்தையுடன் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ஷூஜித் சர்கார். தொடர்ந்து தனித்துவமான படங்களைக் கொடுத்துவரும் அவர், இந்த முறை பாலிவுட்டின் வியாபார பயோபிக்குகளுக்கு மத்தியில் உயிருள்ளதொரு கலைப்படைப்பைக் கொடுத்துள்ளார்.
சர்தார் உதம்
சர்தார் உதம்

சர்தார் உதம் சிங்காக விக்கி கௌஷல். படத்துக்குப் படம் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதைப் பறைசாற்றிவரும் அவருக்கு தன் கரியரிலேயே காலத்துக்கும் பேசப்படும் ஒரு பாத்திரம் கைவந்து சேர்ந்திருக்கிறது. கொலையில் தொடங்கி, முதல் பாதி வரை, அமைதியான, ஒருவித நடுக்கம், தயக்கம் கலந்த உடல்மொழியில் ஈர்க்கிறார். அளவான, அதே சமயம் தெறிக்கும் வசனங்களில் ஸ்கோர் செய்கிறார். இரண்டாம் பாதியில், குறிப்பாக ஜாலியான் வாலாபாக் படுகொலை அத்தியாயத்தில் அழுகை மற்றும் பயத்தில் தொடங்கும் அவரின் உடல்மொழி, இறுதியில் அத்தனை மரணங்களையும், ரணங்களையும் பார்த்தபிறகு விரக்தியிலும், கோபத்திலும் போய் முடிகிறது. அந்த கிராஃபை நமக்குத் தெள்ளத்தெளிவாக தன் நடிப்பின் மூலம் கடத்துகிறார் விக்கி கௌஷல். படத்தின் ஆணிவேரான அந்தப் படுகொலை காட்சிகளை நிஜமானதொரு டாக்குமென்ட்ரி பாணியில் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் வகையில் படமாக்கியுள்ளனர். அதுவரை படத்தை விலகியிருந்தே கவனித்தவர்கள்கூட அதன் பின்னர், அந்த உலகத்தினுள் சென்றுவிடுவர்.

"குற்றம் செய்த ஒருவனைத் தன் அரசியல் சட்டம்கொண்டு ஒரு நாடு தண்டிக்கிறது. அதே நாடு மற்றொரு நாட்டுக்கு எதிரான செயலைச் செய்யும்போது அதைக் குற்றம் என அதே நாட்டின் சட்டம் சொல்லுமா?"
"நான் ஆங்கிலேயர்களை வெறுக்கவில்லை. நீங்கள் இங்கிலாந்தில் ஓர் அரசு அதிகாரியாக உங்கள் அரசாங்கத்தின் கீழ் பணிபுரிகிறீர்கள். உங்களுக்கும் எனக்கும் எந்தவித பகையும் இல்லை. அதே சமயம் நீங்கள் எங்கள் நாட்டிற்கு வந்து உங்களின் கீழாக எங்களை நடத்துவதைத்தான் வெறுக்கிறேன். நான் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிரானவன்."
"நீ உங்க நாட்டோட சுதந்திரத்துக்கு மட்டும்தான் போராடுவியா? உலக அமைதிக்காக, சமத்துவத்துக்காகப் போராட மாட்டியா?" என்று உதமைக் கேட்கிறார் ஓர் ஆங்கிலேயப் பெண்.
அதற்கு, "இல்லை. அதுக்கு முதல்ல, நாங்க சமமா நடத்தப்படணுமே. நீங்களும் நானும் முதல்ல இங்க சமமானதான நாம ஒரே விஷயத்துக்காகப் போராட முடியும்? அதுக்கு எங்களுக்கு முதல்ல உங்ககிட்ட இருந்து சுதந்திரம் வேணும்தானே?" என்று பதிலளிக்கிறார் உதம்.
சர்தார் உதம்
சர்தார் உதம்
தேசியவாதம் என்ற பெயரில் அடிப்படைவாதத்தைப் பூசி மெழுகும் பயோபிக்குகளுக்கு மத்தியில், தேசியவாதத்தையும், தேசபக்தியையும் அதன் அசல் தன்மை மாறாது காட்சிப்படுத்துகிறது இந்த 'சர்தார் உதம்'. அதுவரை தன் வாழ்வில் எந்தவொரு குற்றமும் செய்திராத உதமின் சித்தாந்தங்களைத் தெளிவாக விவரிக்கின்றன படத்தின் வசனங்கள்.

ஒருவரைக் கொல்ல வாய்ப்பிருந்தும் 21 ஆண்டுகள் ஏன் காத்திருந்தார், அப்போதெல்லாம் அவர் மனதில் ஓடிய எண்ணவோட்டங்கள் எப்படியானவை என்பதை அத்தனை தெளிவாக விளக்குகின்றன படத்தின் காட்சியமைப்புகள். அதிலும் உதம் சிங்கின் கதையை இறுதி அத்தியாயமான ட்வையர் கொலையிலிருந்து தொடங்கி, ஜாலியன் வாலாபாக் படுகொலையில் முடித்திருப்பது சிறந்ததொரு கதை சொல்லும் யுக்தி. அந்த வகையில், எடுத்துக்கொண்ட பாத்திரங்களின் தெளிவான 'கேரக்டர் ஸ்டடி'யாக இந்தப் படத்தை நிச்சயம் பாராட்டலாம். இதற்கு முன்னர் வெளியான 'ஹேராம்', 'ரங்க் தே பசந்தி' போன்ற படங்களிலும் இந்தப் பாத்திர ஆய்வு சிறப்பாக வெளிப்பட்டிருக்கும். அந்த பெருமைமிகு பட்டியலில் 'சர்தார் உதம்' படத்தையும் நிச்சயம் யோசிக்காமல் இணைக்கலாம்.

மூன்று முறை தேசிய விருதை வென்ற அவிக் முக்கோபாத்யாயின் ஒளிப்பதிவு அந்த கால லண்டன், பஞ்சாப் எனப் பல இடங்களை உயிர்ப்புடன் காட்சிப்படுத்தியிருக்கிறது. படம் நிஜமான ஒன்றாகவும், உயிர்ப்புடன் நகரவும் பிரதீப் ஜாதவ்வின் கலை இயக்கம் பெரும்பலம் சேர்க்கிறது. விக்கி கௌஷல் தொடங்கி பலருக்கும் இந்தப் படம் நிறைய விருதுகளைப் பெற்றுத்தரும் என்றே எதிர்பார்க்கலாம்.
சர்தார் உதம்
சர்தார் உதம்

அதேசமயம், ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குக் காரணமான கவர்னர் ட்வையரை, உதம் சிங் கொன்ற வரலாற்றையும், அவரின் வாழ்க்கைக் கதையையும் அடிப்படையாக வைத்து சில புனைவுகள் சேர்த்துத்தான் படத்தை இயக்கியிருக்கிறார்கள். அந்தப் படுகொலையின்போது உதம் சிங் அந்த இடத்துக்கு எப்போது, எந்தத் தருணத்தில் வந்தார் என்பதில் வரலாற்று ரீதியாக இன்னமும் சில குழப்பங்கள் இருக்கவே செய்கின்றன. இரண்டே முக்கால் மணிநேரத்துக்கு நீளும் படம் தொடக்கத்தில் மந்தமாக நகர்வதும் ஒரு மைனஸ்தான். ஆனால், எல்லாவற்றையும் மறக்கடிக்கச் செய்து நெஞ்சை ரணமாக்கிச் செல்கிறது அந்த க்ளைமாக்ஸ்.

மூன்று சக்கர வண்டியில் அடிப்பட்டவர்களை ஏற்றி இறக்கிவிட்டு, மீண்டும் சம்பவ இடத்திற்கு ஓடி வந்து, "யாராவது உயிரோட இருக்கீங்களா?" எனப் பிணக்குவியலின் நடுவே நின்று உதம் சிங் கேட்கும் காட்சிகள், இறுதியில் வரும் அந்த ட்ரோன் ஷாட், நிச்சயம் நம்மைப் பல நாள்கள் தூங்கவிடாது என்பது மட்டும் உண்மை. அந்த வகையில் இந்த வருடத்தின் தவறவிடக்கூடாததொரு படம் இந்த 'சர்தார் உதம்'.